``சுந்தரி யானை இல்லை... என் தாய்!” - நோயால் வாடும் 85 வயது யானையும் அதன் பாகனும்



Sponsored



வயதானவர்களைப் பராமரிக்க மனமின்றி முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடூர மனநிலை கொண்ட மனிதர்கள் வாழும் இந்தக் காலகட்டத்தில், தங்களின் வளர்ப்புப் பிராணிகள் முதுமை அடைந்து விட்டால் அவற்றைப் பராமரிக்கவா போகிறார்கள். அத்தகைய ஒரு பரிதாப நிலையில் சிக்கித் தவித்து வருகிறது, சுந்தரி யானை. வாழ்நாளின் பெரும்பகுதியைப் பிறருக்காக உழைத்த இந்த யானை முதுமையின் பிடியில் நோய்களுடன் உயிருக்குப் போராடுகிறது. 

மனிதர்களின் பயன்பாட்டுக்காக யானைகளை உபயோகப்படுத்தத் தொடங்கியதில் முன்னோடியாக இருப்பது இந்தியா. அஸ்ஸாம், ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வளர்ப்பு யானைகள் அதிகமாக உள்ளன. வளர்ப்பு யானைகள் காடுகளில் வேலை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி விழாக்கள் எனப் பல விதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளின் சவாரிக்காகவும் யானைகளை சுற்றுலா நிறுவனங்கள் உபயோகிக்கின்றன. இவை தவிர சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் தொழிலிலும் பிரமாண்டமான இந்த வனவிலங்கைப் பயன்படுத்தும் அவலமும் நடக்கவே செய்கிறது. 

Sponsored


அப்படி ஒரு யானைதான் நெல்லையில் வாழும் சுந்தரி. 85 வயது யானை. முதுமையின் காரணமாக சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிறந்த சுந்தரி யானையை அங்குள்ள சிலர் பழக்கி மலைகளிலிருந்து தடிகளை தூக்கி வரக்கூடிய சிரமமான பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். சுந்தரிக்கு வயதாகி விட்டதால், அதை விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.

Sponsored


கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சுந்தரி நெல்லை மாவட்டத்துக்கு வந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த பீர்முகமது என்பவர் சுந்தரி யானையை வாங்கி வந்திருக்கிறார். இந்த யானையின் பாகனாக பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அசன் மைதீன் என்பவரும் அவரது உதவியாளராக ராஜேஸ்வரன் என்பவரும் செயலாற்றினார்கள். கடந்த 7 வருடங்களாக நெல்லை மாவட்டத்தில் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளில் சுந்தரி யானை பங்கேற்றுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் பல முக்கிய கோயில் விழாக்களில் சுந்தரி கலந்துகொண்டிருக்கிறது. பல்வேறு அரசியல் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் என சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தற்போது 85 வயதை எட்டிய நிலையில், கடந்த 3 மாதமாக சுந்தரி யானை பல்வேறு நோய்களால் அவதிக்கு உள்ளாகியிருக்கிறது. உடல் நலம் குன்றியதால் இனிமேலும் இந்த யானையால் பலன் இல்லை என்பதை நினைத்தோ என்னவோ, அதன் உரிமையாளர் சுந்தரி யானையை கைவிட்டுச் சென்று விட்டார். அதனால் உணவுக்குக் கூட வழியில்லாத நிலையில் உள்ள யானையை அதன் பாகன் அசன் மைதீனும் அவரது உதவியாளர் ராஜேஸ்வரனும் மட்டுமே மிகுந்த சிரமத்துக்கு இடையே பராமரித்து வருகிறார்கள். 

தற்போது சுந்தரியின் இரு கண்பார்வையும் பறிபோய் விட்டது. அதன் பற்கள் அனைத்தும் விழுந்து பொக்கை வாயாகிவிட்டது. நாக்கில் புண்கள், கால்களில் புண்கள், தோலில் வெடிப்புகள் என முதுமையால் பல நோய்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அதனால் கடந்த சில வாரங்களாக நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், எந்த வருவாயும் இல்லாத நிலையில் சுந்தரியைப் பராமரிக்க முடியாமல் தவிக்கிறார் பாகன் அசன் மைதீன்.

சுந்தரி யானையைப் பார்க்கச் சென்றபோது கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அதைக் குளிக்க வைக்கும் முயற்சியில் அசன் மைதீன், ராஜேஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். கண் தெரியாத நிலையிலும், உணர்வால் பாகன்களை துதிக்கையால் தொட்டு நேசம் காட்டியது. பொக்கை வாயைத் திறந்து நாக்கில் புண்கள் இருப்பதைக் காட்டியது. தண்ணீர் டியூபை வைத்து அதைக் குளிப்பாட்ட முயன்றும், அந்த டியூபை துதிக்கையால் எடுத்து வாய்க்குள் நுழைத்து தண்ணீர் குடித்தும் மகிழ்ந்தது. முதுமையின் இயலாமையையும் மறைத்துக் கொண்டு இயல்பான நிலையை வெளிப்படுத்தியது. 

அந்தச் சமயத்தில் கால்நடை மருத்துவர்கள் சுந்தரி யானைக்கு சிகிச்சை அளிக்க வந்தனர். அவர்களுக்கு பூரண ஒத்துழைப்புக் கொடுத்தது. இது பற்றி மருத்துவர்களிடம் பேசியபோது, ``சுந்தரி யானை முதுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. யானையின் பற்கள் அனைத்தும் விழுந்து விட்டன. அதன் தோல்களில் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது. கால் நகங்களிலும் கீறல்கள் விழுகின்றன. கால் பகுதியில் அரிப்பு ஏற்படுவதால் மற்றொரு காலால் தேய்க்கிறது. அதனால் கால்களில் ரத்தம் கசியும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

இந்த யானையால் இலை, தழைகளை மென்று சாப்பிட முடியாது. அதனால் உணவுடன் சேர்த்து சில டானிக்குகளையும் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். யானையின் ரத்தத்தை சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். அதன் முடிவு வந்தபிறகே யானைக்கு என்ன விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம். இந்த யானை தற்போது பலத்துடன் இருக்கிறது. அதன் பார்வை முழுமையாகப் பறிபோய்விட்டது. அதன் கால்கள். தோல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்கிறார்கள், கால்நடை மருத்துவர்கள்.

யானைப் பாகன் அசன் மைதீனிடம் பேசினோம். ``இந்த யானையை கடந்த 7 வருடமாக நான் பராமரித்து வருகிறேன். இந்த யானை இந்த மாவட்டம் மட்டும் அல்லாது அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கும் கோயில் விழா, அரசியல் விழா, திறப்பு விழாக்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கிறது. அதன் மூலமாக யானையின் உரிமையாளருக்கு நிறைய சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஒரு கண்ணில் மட்டும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. பின்னர் அடுத்த கண்ணிலும் பார்வை பறிபோனது. உடல் முழுவதும் பல பிரச்னைகள் இருக்கின்றன. யானையின் உரிமையாளர் இந்த யானையின் பராமரிப்புக்கு எதுவும் செய்யவில்லை. எனவே, வனத்துறை அதிகாரிகளிடம் சென்று முறையிடப் போனேன். அப்போதுதான், யானையின் உரிமையாளர் அது தனக்கு உரியது இல்லை என்றும் எனது பெயரில் யானை இருப்பதாகவும் ஆவணங்களைக் கொடுத்து விட்டுச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். 

இது வரையிலும் யானையை வெளியூர்களுக்குக் கொண்டு செல்வதற்காக ஒரு லாரியை உரிமையாளர் நிறுத்தி வைத்திருந்தார். அதையும் எடுத்துச் சென்று விட்டார். அதனால் யானைக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது யானைக்கு அரிசி சாதம், கம்பு கேள்வரகு கஞ்சியை மட்டுமே கொடுக்கிறேன். தினமும் யானையின் உணவுக்காக 1000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவாகிறது. அத்துடன், டானிக், மருந்துப் பொருள்களுக்காக தினமும் 1000 ரூபாய் முதல்1,500 ரூபாய் வரை செலவாகிறது. 

இந்த யானை சம்பாதித்துக் கொடுத்ததை வைத்து நானும் எனது குடும்பமும் சாப்பிட்டிருக்கிறோம். அந்த நன்றிக்காக நான் இதைக்  கைவிடமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். 45 வயது நிரம்பிய எனக்கு சுந்தரி தாயாக இருந்துவிட்டுப் போகட்டுமே. முதுமை அடைந்து விட்டதற்காக தாயைப் புறக்கணிக்க முடியுமா. இப்போது இந்த மருத்துவமனைக்கு வரக்கூடிய பலரும் யானையின் நிலைமையைப் பார்த்து உதவி செய்கிறார்கள். சிலர் அரிசி கொடுக்கிறார்கள். சிலர் கம்பு, கேள்வரகு போன்ற தானியங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அதை வைத்து சுந்தரி தாயைப் பராமரித்து வருகிறேன்.  

முதுமையால் செயல் இழந்துவிட்ட இந்தத் தாயை முழுமையாகப் பராமரிக்கும் அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. என்னிடம் பொருளாதார வலிமை இல்லாததால் அரசும் வனத் துறையும் சேர்ந்து இந்த யானையைப் பராமரிக்க வேண்டும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இதைப் பராமரிக்க உரிய நபர்கள் முன்வரும் வரையிலும் நானே பாதுகாப்பேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார். 



Trending Articles

Sponsored