``தப்புதான்...இனி நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம்'' - போலீஸாரிடம் கெஞ்சிய மாணவர்கள் Sponsoredசென்னை அரசு பஸ்ஸில் பட்டாக்கத்தியை சாலையில் உரசி, பயணிகளைப் பதறவைத்த கல்லூரி  மாணவர்கள், `இனி நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம்' என்று போலீஸாரிடம் கெஞ்சியுள்ளனர். 

 சென்னை, பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து காரனோடைக்குச் சென்ற வழித்தடம் எண் 57 எஃப் என்ற அரசு பஸ்ஸில் பயணித்த கல்லூரி மாணவர்கள், கடும் ரகளைசெய்தனர். படியில் தொங்கிய அவர்கள், பட்டாக்கத்தியை எடுத்து சாலையில் உரசினர். இந்தக் காட்சியை வீடியோவாக எடுத்தவர்கள், சமூக வலைதளத்தில் பதிவுசெய்தனர். வீடியோவைப் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில், 'மாநிலக் கல்லூரிக்கு ஜே!' என்று கோஷமிட்டனர். அதைக்கொண்டு, மாநிலக் கல்லூரிக்குச் சென்ற போலீஸார், அரசு பஸ்ஸில் பட்டாக்கத்தியுடன் பயணித்தவர்கள் யார் என்று விசாரித்தனர். விசாரணையில் மாணவர்களின் விவரம் தெரியவந்தது. உடனே அண்ணா சதுக்கம் போலீஸாரின் உதவியுடன் வண்ணாரப்பேட்டை போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 

Sponsored


 கல்லூரி மாணவர்கள் ஆனந்தன், ராஜா, சிவா, தாமோதரன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். மாணவர்களுக்கு 17, 18 வயதாகுகின்றன. முதலாமாண்டு படிக்கின்றனர். கைதான மாணவர்கள், முதல் முறையாக சிறைக்குச்செல்கின்றனர். அரசு பஸ் விவகாரத்தில் இன்னும் சில மாணவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். மாணவர்கள்மீது ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்துக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதனர். குறிப்பாக, ஒரு மாணவனின் அம்மா, 'மகன் செய்த தவற்றை மன்னித்துவிடுங்கள்' என்று போலீஸாரிடம் கண்ணீர்மல்க கேட்டார். ஆனால், வண்ணாரப்பேட்டை போலீஸார் பாரபட்சமின்றி மாணவர்கள்மீது நடவடிக்கை எடுத்தனர். 

Sponsored


 வண்ணாரப்பேட்டை போலீஸாரிடம் பேசினோம். ``அரசு பஸ்சில் மாணவர்கள் பட்டாக்கத்தியோடு அட்டகாசம் செய்த வீடியோ வெளியானதும், உடனடியாக நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். சம்பவம் நடந்த இடம் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது.  அதனால், இந்த வழக்கை நாங்கள் பதிவுசெய்தோம். அரசு பஸ்ஸில் அட்டகாசம்செய்த மாணவர்கள், மாநிலக் கல்லூரியில் பயில்பவர்கள். இதனால், அண்ணா சதுக்கம் போலீஸாரின் உதவியோடு மாநிலக் கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. இதனால், மாணவர்கள்மீது நடவடிக்கை எடுத்தோம். இதுவரை நான்கு மாணவர்களைக் கைதுசெய்துள்ளோம். இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். முதலில், முதலாமாண்டு மாணவர், ஆனந்தராஜைத்தான் பிடித்தோம். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் மற்ற மாணவர்கள் குறித்த தகவல்கள் தெரியவந்தது. அந்த பஸ்ஸில் அட்டகாசம்செய்த மாணவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

 இந்த வழக்கில், எங்களுக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது வீடியோ பதிவுதான். அதன்மூலம், மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். விசாரணையின்போது, முதலில் மாணவர்கள், 'கெத்து காட்டத்தான் அப்படிச் செய்தோம்' என்று தெரிவித்தனர். இந்த வழக்கில் உள்ள முக்கியத்துவம் மாணவர்களுக்குத் தெரியவில்லை. போலீஸ் நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதபோதுதான் அவர்களுக்கு உண்மை நிலைமை தெரியவந்தது. அப்போது இரண்டு மாணவர்கள், 'நாங்கள் செய்தது தப்புதான் சார். இனி அப்படிச் செய்ய மாட்டோம்' என்று கண்ணீர்மல்க கூறினர்.  ஆனால், மாணவர்களுக்கு எதிராக வீடியோ ஆதாரம் உள்ளது. தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றனர். Trending Articles

Sponsored