கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி - லாக்கரில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின!மதுரை அருகே கூட்டுறவு வங்கியின் லாக்கரை உடைத்து அதிலிருந்த நகைகளைத் திருட முயன்றனர். ஆனால், லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் தப்பின.

Sponsored


மதுரை மேலூரை அடுத்த தெற்குத்தெரு கிராமத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஒன்று செயல்படுகிறது. தெற்குத் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் பொது மக்கள் என அதிகளவு அந்த வங்கியின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வங்கியின் செக்யூரிட்டி ஆறுமுகம் இல்லாத சமயம் பார்த்து கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தைத் திருட முயன்றுள்ளனர். அதற்கு முன்னதாக வங்கியில் இருந்த கண்காணிப்புக் கேமரா மற்றும் அலாரம் உள்ளிட்டவற்றை உடைத்து வீசியுள்ளனர். அதைத் தொடர்ந்து வங்கியைப் பூட்டி கதவுகளை உடைத்து வங்கிக்குள் புகுந்துள்ளனர். பணம், நகையை வங்கி முழுவதும் தேடியுள்ளனர். பேப்பர்கள் மட்டும் சிக்கியுள்ளன. நீண்ட நேரத்துக்குப் பிறகு, லாக்கரை கண்டறிந்துள்ளனர். ஆனால், பல முறை முயற்சி செய்தும் லாக்கரை திறக்கவோ, உடைக்கவோ முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

Sponsored


இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், `கேஸ் கட்டர் மூலம் கொள்ளையடிக்க கும்பல் வந்திருக்கலாம், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சியை வைத்து விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதனால், லாக்கரில் இருந்த 3.3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 2 லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவை தப்பின’ என்று தெரிவித்தனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored