`விஜயபாஸ்கருக்கு நன்றி சொல்லத்தான் போனேன்; கட்சியில சேர்த்துட்டாங்க'‍ - `இணைந்த கைகள்' சாதிக் அலி`நான் கேரள வெள்ளப்பாதிப்புக்கு நிவாரணம் கொடுத்த கரூர் அட்சயாவின் இதய ஆபரேஷனுக்கு 25,000 கொடுத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நன்றி சொல்லப்போனேன். ஆனால், அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நான் இணைந்ததாக முகநூலில் உள்ள கரூர் மாவட்ட அ.தி.மு.க பக்கத்தில் பதிவு போட்டு என்னை அதிர வைத்திருக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டுகிறார் 'இணைந்த கைகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி.

Sponsored


கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமாரபாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அட்சயா என்ற சிறுமி தனது இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தில் 5,000 ரூபாயைக் கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கினார். இந்தச் செய்தி விகடன் இணையதளத்தில்தான் முதலில் வந்தது. தொடர்ந்து அனைத்து தமிழ், இந்திய அளவில் உள்ள ஆங்கில, இந்தி சேனல்கள் மற்றும் உலக அளவிலான மீடியாக்களில் வர, உலக அளவில் கவனம் பெற்றது அட்சயாவின் கருணை உள்ளம். அட்சயாவுக்கு பல அரசியல்வாதிகளும் உதவி வரும் நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் அலுவலகத்தில் வைத்து அட்சயாவுக்கு 25,000 ரூபாய் வழங்கினார். அப்போது, அட்சயாவுடன் அவருக்கு முதல் ஆபரேஷன் செய்ய சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டிய `இணைந்த கைகள்; அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி இருந்தார். அமைச்சரை சந்தித்த சாதிக் அலி, 'அட்சயாவுக்கு உதவியதற்கு நன்றி. அவளுக்கு ஆரம்பத்திலிருந்து எங்கள் அமைப்பு மூலம்தான் உதவி வருகிறோம். இன்னும் பலர் இதுபோல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ நீங்க ஒத்துழைக்கணும்' என்று நன்றி சொல்லிவிட்டு, அமைச்சரோடு நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

Sponsored


Sponsored


ஆனால், மறுநாளிலிருந்து சாதிக் அலியிடம் போன் செய்த பலரும், 'அ.தி.மு.க-வில் இணைந்ததற்கு வாழ்த்துகள்' என்று வாழ்த்துச் சொல்ல, சாதிக் அலி குழம்பி போயிருக்கிறார். பிறகுதான், அமைச்சரிடம் நன்றி சொன்ன போட்டோவை கரூர் அ.தி.மு.க முகநூல் பக்கத்தில் போட்டு, `சாதிக் அலி அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில் அமைச்சரை சந்தித்து சேர்ந்ததாகப் பதிவு போடப்பட்டிருந்தது. 'இப்படிதான் அ.தி.மு.க-வில் ஆள் சேர்க்கிறார்களா' என்று அதிர்ந்துபோயிருக்கும் சாதிக் அலியிடமே பேசினோம். "நாங்கள் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து எந்தவித கட்சி பாகுபாடுமின்றி சமூக வலைதளங்கள் மூலமாக நிதி திரட்டி, அட்சயாவைப்போல் வறுமை நிலையில் நோயோடு இருக்கும் குழந்தைகளின் பிரச்னைகளைத் தீர்க்குறோம். அட்சயாவின் கருணை உள்ளத்தை இன்னைக்கு உலகமே பாராட்டுது. எந்தவித கட்சி சாயமும் பூசாம பலரும் உதவுறாங்க. ஆனால், போக்குவரத்துத்துறை அமைச்சர் தரப்பு 25,000 பணத்தைக் கொடுத்து, அதைப் பேட்டிக் கொடுத்து விளம்பரமாக்கிக்கொண்டதோடு, நன்றி சொல்ல போன என்னையும் கட்சியில் சேர்த்துட்டதா பதிவு போட்டு அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. அவங்ககிட்ட கேட்டதுக்கு, 'அப்ப நீங்க கட்சியில் சேர வரலையா'ன்னு அசால்ட்டா கேட்கிறாங்க. கிரிக்கெட் விளையாட ஒரு படத்துல சத்யராஜும் வடிவேலும் ஆள் பிடிக்கிறாப்புல. இப்படிதான் அ.தி.மு.க-வுக்கு ஆள் பிடிக்கிறாங்க போலிருக்கு" என்று கூறினார்.
 Trending Articles

Sponsored