``அனிதா எங்களுடன்தான் வாழ்கிறாள்!" உருகும் ஊர் மக்கள்Sponsoredஅரியலூர் மாணவியான அனிதா மருத்துவக் கனவை நுகர முடியாமல் இறந்துபோனதையடுத்து, அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தது இந்த உலகம். ஆனாலும், நீட் தேர்வைப் பொறுத்தவரை உயிரிழப்புகளும் குழப்பங்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன. அதிகாரமிக்க மத்திய அரசு, கடந்த ஆண்டு கொண்டுவந்த கட்டாய நீட் தேர்வால், அனிதாவின் உயிர் பறிபோனது. அவர் இறந்துபோய் இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது. அன்று, அரசியல்வாதிகள் உட்பட அனைத்து மீடியாக்களும் அதிகம் உச்சரித்த ஒரு பெயர் அனிதா. இந்த நிலையில், அனிதா இன்று உயிருடன் இல்லையென்றாலும், அவள் இன்னமும் எங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்று தினமும் அவருக்குப் பிடித்த பொருள்களை வைத்துப் படைத்து வாழ்ந்து வருகின்றனர், அவரது குடும்பத்தினர்.

அனிதாவின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூரில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனிதா அறக்கட்டளை சார்பில் கல்வி பயிலும் மாணவ - மாணவிகள் தங்களது அறிவுப் பசியைத் தீர்த்துக்கொள்ளும் வகையிலும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் 1,800 சதுர அடி பரப்பளவில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அது, 6 வரிசைகள் 2,000-க்கும் மேற்பட்ட நூல்களோடு, அனைத்து பொதுத் தேர்வுகள், கல்விக்கான வழிகாட்டும் புத்தகங்கள் அடங்கிய வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், படிப்பின்மீது ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் மனதில் உண்டாக்கும் வகையில், நூலக நுழைவு வாயிலில் அனிதா உட்கார்ந்து படிக்கும்படியான சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதுதவிர, நூலகத்தின் உள்ளே 3 அடி அளவில் மெழுகுச் சிலையும் அமைக்கப்பட உள்ளது. 

Sponsored


Sponsored


அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாகத் தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அ.தி.மு.க குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டு பேசவுள்ளனர். 

மத்திய - மாநில அரசுகள் கொண்டுவரும் எந்தத் தகுதித் தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையிலும், அனிதா இறந்ததுபோல மற்றுமொரு சம்பவம் நடக்கக் கூடாது என்ற எண்ணத்திலும் சிலரின் பங்களிப்புடன் அனிதாவின் குடும்பத்தார் அனிதா அறக்கட்டளையை ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பைத் தேர்ந்தெடுப்பது, அதற்கான தகுதித் தேர்வை எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ - மாணவிகளைக் கண்டறிந்து அனிதா அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர்க்கப்படுகின்றனர். அனிதா அறக்கட்டளை சார்பில் 12-ம் வகுப்புக்கு மேல் என்ன படிக்கலாம், எவ்வாறு விண்ணப்பம் செய்வது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது, அதிக மதிப்பெண் எடுக்க எவ்வாறு படிக்க வேண்டும் என மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கல்வி மற்றும் விழிப்புஉணர்வு கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன. இதில், கல்வி வல்லுநர்கள் கலந்துகொண்டு மாணவ - மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர். 

இந்நிலையில் அனிதா பிறந்த ஊரான குழுமூர் கிராமத்துக்குச் சென்றோம். அனிதா இறப்பின்போது அந்தக் கிராமம் எப்படியிருந்ததோ, அதே சோகத்தில் இன்றும் இருக்கிறார்கள் என்பதை நாம் அங்கு சென்றவுடன் தெரிந்துகொள்ள முடிகிறது.

அனிதா பற்றிப் பேசத் தொடங்கியதுமே பெருங்குரலெடுத்து அழத் தொடங்குகிறார் அவரின் பாட்டி பெரியம்மா. ``அனிதா ரெண்டு வயசு குழந்தையா இருந்தபோதே... அவ அம்மாவ பறிகொடுத்தவ. அதுக்குப் பிறகு அவளுக்கு அம்மா நான்தான். என்னிடம்தான் அதிகமா பேசுவா. அண்ணன்கள் நான்கு பேரிடமும் அடிச்சு உரிமையோடு விளையாடுவா. ஒரே பொண்ணு என்பதால செல்லமா வளர்ந்தா. நல்லாவும் படிப்பா. பத்தாவதுல 476 மார்க்கும் பன்னிரண்டாவதுல 1,176 மார்க்கும் வாங்கினா. மூட்டை தூக்குறவன் பொண்ணு இப்புடி படிக்குதேனு ஊர் உலகத்தையே திரும்பிப் பாக்கவெச்சா. எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையா இருந்துச்சு. ஆனா, அவ செத்துப்போயி இந்த உலகத்தையே திரும்பிப் பாக்க வைப்பானு தெரியாம போச்சே'' என அழத்தொடங்கியவர் தொடர்ந்து,  ``நான் இன்னமும் அனிதாவை நெனச்சு அழுது அழுது கண்ணுல கண்ணீரே வத்திவிட்டது. ஒரு வீட்டுல ஒரு பொண்ணு இருந்துட்டு அது, இல்லேனா எப்புடி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவ செய்வா. அவ இல்லாததால நான், தற்போது யாரும் இல்லாத அநாதைபோல ஆயிட்டேன். அவ, உருவம் வேண்டுமானா இந்தப் பூமியில இல்லாம போயிருக்கலாம். ஆனா, அவ நினைப்புலதான் நாங்களாம் வாழ்ந்துகிட்டிருக்கோம். அதனாலதான் தினமும் அவளுக்குப் பிடிச்ச பொருள்களை வெச்சி படைச்சிக்கிட்டிருக்கோம்” என்றார் தழுதழுத்தபடியே.

அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், ``மத்திய, மாநில அரசுகள் நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டன. அதனால்தான் என் தங்கையைப் பறிகொடுத்தேன். அனிதாவின் இறப்பே இறுதியாக இருக்கட்டும். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே அனைத்துப் போட்டித் தேர்வுகள், வழிகாட்டும் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தைக் கட்டியுள்ளோம். இதில், சாதி மதம் பேதமின்றி அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் ஒவ்வொரு செங்கற்களிலும் அனிதாவின் உயிர் உள்ளது. மேலும், அனிதா அறக்கட்டளை சார்பில் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனிதாவின் மரணத்தையொட்டி நடைபெற்ற போராட்டங்களை அடுத்துக்கூட மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது. நீட் வேண்டாம் என்று மக்களே வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திய பிறகும், அரசு இந்தச் சட்டத்தைத் தடை செய்யவில்லை என்றால், இது யாருக்கான அரசு என்ற சந்தேகம் எழுகிறது. மாநில அரசு, சட்டப்போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு அடிபணியும் அரசாக இருக்கக் கூடாது” என்றார் மிகத் தெளிவாக.

அனிதா இல்லையென்றாலும், அவர் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளை மூலம் பல மருத்துவர்கள் உருவாகட்டும்.     Trending Articles

Sponsored