''அவளுக்கு தெரியுமானு தெரில... ஆனாலும், சொல்லப்போறதில்லை!'' - வளர்மதி தந்தையின் வருத்தம்Sponsoredஇப்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்படும் பெயர் 'வளர்மதி'. வீராணத்தை அடுத்துள்ள பள்ளிகொடுத்தானூரைச் சேர்ந்தவர் வளர்மதி. கேரள பேரிடர் உதவிக்காகச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் தப்பாட்டம் அடித்து வளர்மதியும், அவருடைய நண்பர்கள் ஐந்து பேரும் நிதி திரட்டிக் கொண்டிருந்த போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக வளர்மதி பேசும் காணொளி ஒன்று முகநூலில் பகிரப்பட்டது. அதில், 'நிதி திரட்டிக் கொண்டிருந்த போது கலர் சட்டை அணிந்திருந்த ஒருவர் எங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். எங்களை ஏன் படம் பிடிக்குறன்னு கேட்டு வாக்குவாதம் நடந்துச்சு. அப்போ, அந்த நபர் என் மார்பில் கை வைத்து என்னைத் தள்ளிவிட்டு ஓடினார். அவரைப் பிடிக்க நாங்களும், அங்கிருந்த பொதுமக்களும் முயன்ற போது அவர் அங்கிருந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அதுக்கப்புறம்தான் அவர் ஒரு காவல் துறை அதிகாரின்னு எங்களுக்குத் தெரிய வந்தது. அவரைக் கைது செய்யக் கோரி எங்களுடன் பொதுமக்களும் குரல் கொடுத்தனர். அங்கிருந்த பொதுமக்களை தடியடி நடத்தி காவல்துறை அதிகாரிகள் கலைத்துவிட்டு எங்களைக் கைது செய்தனர். இப்போது வரையில் அந்தக் காவல் துறை அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' எனக் கூறியிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்திருக்கிறார். அவரை சந்திப்பதற்காகச் சென்னை வந்திருந்த அவருடைய தந்தை மாத்தையன்னிடம் பேசினோம்.


" ரொம்ப கஷ்ட்டப்பட்டுத் தான் என் பொண்ணை படிக்க வைச்சேன். வளர்மதி எங்களுக்கு ஒரே பொண்ணு. அவ நல்லா படிச்சு, சம்பாதிச்சு அந்தப் பணத்தை பொதுமக்களுக்குக் கொடுக்கப் போறேன்னு சொன்னதும் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். என்ன பண்ணாலும் அவ விருப்பப்படி பண்ணட்டும்னு தான் நானும், என் மனைவியும் விரும்பினோம். கட்டிக் கொடுத்த பொண்ணுங்களை பெத்தவங்க பார்க்க வர்ற மாதிரி நானும் அடிக்கடி போராடுற என் பொண்ணைப் பார்க்க வருவேன்.

Sponsored


தொடர்ந்து போலீஸ்காரங்க என் பொண்ணுகிட்ட மட்டும் இப்படி நடந்துக்குறாங்கன்னு தெரியல. அவ எங்கே போனாலும், என்ன பண்ணாலும் பின் தொடர்ந்து வந்துட்டே இருக்காங்க. அடிக்கடி டார்ச்சர் கொடுத்துட்டே இருக்காங்க. பெத்தவங்கங்குற முறையில எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்கு. இப்போ கூட என் புள்ள, மத்தவங்களுக்கு உதவி பண்றதுக்காகத் தானே நிதி திரட்டிட்டு இருந்துருக்கு. அங்கே போய் தொந்தரவு கொடுத்தா என்ன பண்ண முடியும்.? போலீஸ்காரங்களுக்கு ஒரு பொண்ணு மேல கை வைக்க என்ன அதிகாரம் இருக்கு? அவர் மேல எந்த வழக்கும் போடலையே.. போலீஸ்காரங்கன்னா அப்படித்தான் பண்ணுவாங்களா.? அப்போ, பொண்ணுங்களுக்கு இந்த நாட்டுல பாதுகாப்பே கிடையாதா..? வேதனைக்கு மேல் வேதனையா கொடுத்தா என்ன பண்ண முடியும்.? என் பொண்ணுக்கு இன்னைக்கு பரோல்னு கேள்விபட்டு பார்க்க ஓடி வந்தேன். பார்த்துப் பேசினேன்.

Sponsored


அந்த காணொளியில் சொன்ன விஷயத்தைத் தான் என்கிட்டேயும் சொல்லுச்சு. 'நான் எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்பா.. அதே மாதிரி, தப்பு பண்றவங்களை சும்மா விட மாட்டேன்பா'ன்னு சொல்லுச்சு. "நாளைக்கு உனக்கு ஏதாச்சும்னா எங்களால தாங்க முடியாதும்மா.. அது எனக்குத் தான் பெரிய இழப்பு.. பார்த்துக்கோ"ன்னு சொல்லிட்டு வந்தேன். அவங்க அம்மாவுக்கு இந்த விஷயம் எதுவும் தெரிய வாய்ப்பில்லம்மா. நானே ஃபோன் பார்த்துத் தான் தெரிஞ்சிகிட்டேன். அவுங்களும் என்கிட்ட எதுவும் கேட்கல.. நானும் சொல்லல.. அப்புறம், தேவையில்லாம என் மனைவியும் கஷ்டப்பட்டுட்டு இருக்கும்ல.! மறுபடியும் சொல்றேன், தப்பு பண்ணவங்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கணும்மா" என்றார்.Trending Articles

Sponsored