‘சுப்பிரமணியன் சுவாமிக்கு நல்ல புத்தி கொடு! - பா.ஜ.கவினரின் வித்தியாசமான பிரார்த்தனை...Sponsoredசுப்பிரமணியன் சுவாமி பேசிவரும் கருத்துக்களை மத்திய பா.ஜ.க தலைமை கண்டிக்க வேண்டும் என பா.ஜ.க நிர்வாகிகளே கூட்டம் போட்டு வித்தியாசமான முறையில் எதிப்பு தெரிவித்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பா.ஜ.கவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ஒரு பேட்டி கொடுத்தாலோ அல்லது ட்விட்டரில் ஏதாவது ஒரு கருத்து பதிவிட்டாலோ அது சர்ச்சையில் தான் போய் முடியும். அது சம்பந்தமாக தமிழக பா.ஜ.கவினரிடம் கேட்டால், ‘அது அவருடைய தனிப்பட்ட கருத்து’ என பாலிஷாக கடந்து போவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில், ‘ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென’ சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக்கண்டித்து முதல்முறையாக தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் தரப்பிலிருந்து சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டிக்கும் வகையில் ஒரு கூட்டம் நடைபெற்றிருப்பது கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Sponsored


Sponsored


ஈரோடு கோட்டப் பொறுப்பாளர் வைரவேல் ஏற்பாட்டில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் நேற்று (செப் 1) ஈரோட்டிலுள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கூடினர். தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைமையை விமர்சித்தும், சர்ச்சையை உண்டாக்கும் வகையில் கருத்துக்களை பதிவிடும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டிக்கும் வகையில், ‘சுயமரியாதை வேள்வி’ என்ற பெயரில் பாரத மாதாவினுடைய புகைப்படத்தினை வைத்து, ‘சுப்பிரமணியன் சுவாமிக்கு நல் அறிவினை பாரத மாதா வழங்க வேண்டும்’ என பா.ஜ.க நிர்வாகிகள் சுமார் 20 நிமிடங்கள் மெளனப் பிரார்த்தனை செய்தனர். மேலும், தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமியை பா.ஜ.க தலைமை கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.

இது சம்பந்தமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஈரோடு பா.ஜ.க கோட்டப் பொறுப்பாளர் வைரவேலிடம் பேசினோம். “கடந்த சில காலங்களாகவே சுப்பிரமணியன் சுவாமி பேசிவரும் கருத்துக்கள் மனதை மிகவும் வருத்தும் வகையில் இருக்கின்றன. சசிகலா சிறைக்குச் செல்லக் காரணமாக இருந்த சுப்பிரமணியன் சுவாமியே இப்போது அவரை ஆதரித்துப் பேசுவது மிகவும் வியப்பாக இருக்கிறது. தமிழக பா.ஜ.கவையும், தலைவர்களையும் மிகவும் கேவலமாக விமர்சித்து வருகிறார். அகில இந்திய பா.ஜ.க வழிகாட்டுதலின் படி செயல்பட்டு வரும் தமிழக பா.ஜ.கவை அவர் விமர்சிப்பது பா.ஜ.க தலைமையையே அவர் விமர்சிப்பதாகத் தெரிகிறது. உச்சக்கட்டமாக சமீபத்தில் ராஜபக்சேவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென அவர் பேசியது எங்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. லட்சக்கணக்கான தமிழக சொந்தங்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஒரு தமிழராகப் பிறந்த சுப்பிரமணியன் சுவாமி சொல்லலாமா?... இப்படியெல்லாம் அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிச்சென்றால், நாளைக்கு நாங்கள் மக்களை எப்படிச் சந்திப்பது. இது சம்பந்தமாக மாநிலத் தலைவர்களிடமும் எங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறோம். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களின் குரலும் அது தான்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ஈரோட்டில் பிறந்த எங்களுக்கு கொஞ்சமாவது சுயமரியாதை இருக்காதா?... அதற்காகத்தான் சுப்பிரமணியன் சுவாமியினுடைய செயலுக்காக, பாரத மாதாவிடம் அவருடைய அறிவினை நல்ல செயல்களுக்காக கொடு என அகிம்சை வழியில் தியானம் மேற்கொண்டோம். இனியும் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு பேசி வந்தால் எங்களுடைய எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் காட்டுவோம். இந்த மாதம் ராஜபாளையத்தில் நடைபெறவிருக்கிற செயற்குழுக் கூட்டத்தில் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து தீர்மானத்தையும் நிறைவேற்ற இருக்கிறோம்” என்றார்.

சுப்பிரமணியன் சுவாமி பதிலுக்கு என்ன குண்டு போடப்போறாரோ பொறுத்திருந்து பார்ப்போம்.Trending Articles

Sponsored