``நீ கலெக்டரானால் மக்களுக்கு நல்லது நடக்கும்” - கரூர் அட்சயாவைப் பாராட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ்



Sponsored



கேரள மழை வெள்ளப்பாதிப்புகளுக்கு தனது இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தில் ஒருபகுதியை வழங்கிய கரூர் சிறுமி அட்சயாவை சகாயம் ஐ.ஏ.எஸ் அழைத்துப் பாராட்டினார். ``உன்னைப்போன்ற சிறுமிகளிடம் கருணை உள்ளத்தைப் பார்க்கும்போது அப்துல்கலாம் கண்ட கனவு சீக்கிரம் நிறைவேறிடும்ன்னு தோணுது. நீ கலெக்டரானால் மக்களுக்கு நல்லது நடக்கும்" என்று உச்சிமுகர்ந்து பாராட்ட, அட்சயா குடும்பம் நெகிழ்ச்சிக்கு ஆட்பட்டிருக்கிறது.

 

விகடன் இணையதள வாசகர்களுக்கு அட்சயா பற்றி அதிகம் அறிமுகம் தேவையில்லை. கரூர் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி, இதய பிரச்னையில் இருக்கிறார். தனது ஆபரேஷனுக்காக `இணைந்த கைகள்' என்ற அமைப்பு சமூக வலைதளங்கள் மூலம் திரட்டிய 20,000 ரூபாயில் 5,000 ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்துக்கு தூக்கிக் கொடுத்தார். இந்தச் செய்தியை விகடன்தான் முதலில் பதிந்தது. அதன் பின்னர் அட்சயாவின் கருணை உள்ளம் அதிக கவனம் பெற்றது. இந்திய அளவில் உள்ள பிரபல மருத்துவமனைகளும், லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையும் அட்சயாவுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தன. தமிழக அரசியல் தலைவர்களும், தமிழக அரசும் அட்சயாவுக்கு உதவிகளை வழங்கிப் பாராட்டினர். இந்த நிலையில், அட்சயா அந்த நிவாரண நிதியை சகாயம் ஐ.ஏ.எஸ்ஸை வழிகாட்டுதலாகக் கொண்டு செயல்படும் மக்கள் பாதை என்ற அமைப்பின் மூலம்தான் கேரளாவுக்கு அனுப்பினார்.

Sponsored



 

Sponsored


அதனால், அட்சயாவின் கருணை உள்ளத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போன சகாயம், இன்று சென்னை சின்மயி நகரில் உள்ள மக்கள் பாதை தலைமை அலுவலகத்துக்கு அட்சயாவை குடும்பத்தோடு அழைத்துப் பாராட்டினார். ``உன்னைப் போன்ற சிறுமிகள்தான் நாட்டுக்குத் தேவை. உன்னைப் பார்க்கும்போது நாடு இனி நல்லா இருக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கு. உன்னைப் போன்ற சிறுமிகளிடம் இதுபோன்ற கருணை இருப்பதை பார்க்கும்போது நாடு வல்லராசு ஆகும் என்று அப்துல்கலாம் கண்ட கனவு சீக்கிரம் நிறைவேறிடும்ன்னு தோணுது. நீ கலெக்டராக ஆசைப்படுவதாக படித்தேன். கண்டிப்பாக நீ கலெக்டராக வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நல்லது நடக்கும்" என்று பாராட்டியதோடு, அவளது தாய் ஜோதிமணியையும் பாராட்டினார். ``அட்சயாவின் இதய அறுவை சிகிச்சைக்குரிய அத்தனை உதவிகளையும் மக்கள் பாதை அமைப்பு செய்யும்" என்று உறுதி கொடுத்தாராம்.
 

அட்சயாவை அழைத்துப் போன `இணைந்த கைகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி, ``எங்க `இணைந்த கைகள்' அமைப்பையும் பாராட்டினார். ’இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தவறான வழிக்குதான் போகிறார்கள் என்ற பெயர் இருக்கு. ஆனால், அதை பொய்யாக்கி இளைஞர்களாகிய நீங்களெல்லாம் சேர்ந்து இப்படி சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டி அட்சயாவுக்கு வாழ்வு கொடுத்தது புது நம்பிக்கையை தருது. அதுவும் கருணை உள்ளம் அதிகம் நிறைந்த அட்சயாவை நீங்கள் காப்பாற்றி இருப்பது என்னை நெகிழ வைக்குது. உங்கள் உன்னத சேவை தொடர்ந்து நடக்கட்டும். உங்கள் முயற்சிக்கு நான் என்னாலான அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவேன்'  என்று சொன்னார். எங்களை யார் வேண்டுமானாலும் பாராட்டி இருக்கலாம். சகாயம் சார் பாராட்டியதைத்தான் தேசிய விருதா கருதுகிறோம்" என்றார்.



Trending Articles

Sponsored