`வைகை ஆற்றில் நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் மருத்துவக் கழிவுகள்' - அன்புமணி அதிர்ச்சித் தகவல்!Sponsored மதுரை மருத்துவக்கல்லூரி தினமும் 5 லட்சம் லிட்டர் கழிவுகளை வைகை ஆற்றில் கலக்க விடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் பா.ம.க.சார்பில் 'வைகையை காப்போம்! வறட்சியை விரட்டுவோம்!!' என்ற விழிப்பு உணர்வுப் பிரசாரப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநிலப் பொருளாளர் திலகபாமா, மாவட்டச் செயலாளர் ஹக்கீம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ``தமிழகத்தைவிட ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் மழை குறைவாக பெய்கிறது. ஆனால், இவ்விரு மாநிலங்களிலும் நீரைத் தேக்கி வைக்கும் கொள்ளளவு அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 950 மி.மீ.மழை பெய்தும் அதை தேக்கி வைக்கும் அளவுக்கு அணைகளின் கொள்ளளவு இல்லை. தமிழகத்தில் பெய்யும் 80 சதவிகித மழை நீர் ஆறுகள் மூலமாக கடலில் கலந்து வீணாகிறது. இதற்கு காரணம் நீரினை சேமித்து வைப்பதற்கான எந்த முயற்சியையும் தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் செய்யாததுதான். நீர் மேலாண்மை குறித்து எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தெரியாததன் விளைவாகவே அவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை.

Sponsored


மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்காக கடந்த ஆண்டு மட்டும் தமிழக அரசு ரூ.62,000 கோடியை செலவழித்துள்ளது. அந்தத் தொகையை நீர் மேலாண்மைக்கு செலவழித்திருந்தால் விவசாயம் செழித்திருக்கும், நீர்ஆதாரங்கள் பெருகியிருக்கும். விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். தமிழகத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்கள் நீர்மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நீர் ஆதாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். பழம் பெருமை வாய்ந்த ஆறு வைகை ஆகும். வைகை ஆறு இடம் பெறாத படைப்புகள் இல்லை. அத்தகைய பெருமை வாய்ந்த வைகை ஆறு இன்னும் சில காலங்களில் இன்னொரு கூவம் ஆறாக மாறும் நிலை உள்ளது. மதுரை அருகேயுள்ள சோழவந்தான் பகுதி வரை ஓரளவு நல்ல முறையில் வரும் வைகை ஆறு பின்னர் கழிவுநீராக மாறி விடுகிறது. 

Sponsored


அதற்கு காரணம் மதுரையில் உள்ள மருத்துவக்கல்லூரிதான். அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து தினசரி 5 லட்சம் லிட்டர் கழிவுகள் வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேலும் 72 லட்சம் லிட்டர் வீட்டுக் கழிவுகள் நாள்தோறும் ராட்சச குழாய்கள் மூலம் வைகை ஆற்றில் கலக்கின்றன.இவை தவிர தினசரி தொழிற்சாலை ரசாயனக் கழிவுகளும் கலந்து வைகை ஆறு பாழாகிப் போய் விட்டது. வைகை அணையின் கொள்ளளவான 71 அடியில் 21 அடிக்கு சேறும் சகதியும் நிரம்பியது போத மீதம் 50 அடி தான் நீர் உள்ளது. எனவே, வைகை ஆற்றை பாதுகாப்போம் என்று சொல்வதைவிட வைகை ஆற்றைக் காப்பாற்றுவோம் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மூலம்   சீமைக்கருவேல மரங்களால் மண்டி கிடக்கும் ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு வைகை நீரைக் கொண்டு வர முடியும்'' என்றார். Trending Articles

Sponsored