தடை மீறி வெட்டப்பட்ட மரங்கள்... வேடிக்கை பார்த்த அதிகாரிகள்! - 8 வழிச் சாலை அப்டேட்Sponsored`8 வழி பசுமைச் சாலை என்பது விரைவில் எமனிடம் கொண்டு செல்லும் குறுக்குச் சாலை’ எனச் சமூக ஆர்வலர்கள் சாடினார்கள். `எங்கள் உயிர் போனாலும் 8 வழிச் சாலைக்கு நிலத்தைக் கொடுக்க முடியாது’ என்று விவசாயிகள் குமுறினார்கள். மரங்களையும் மலைகளையும் அழிப்பதால் வனங்களில் பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படும் எனச் சூழலியல் போராளிகள் கொதித்தார்கள். ஏரி, குளம், குட்டை, கண்மாய்கள் மூடப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, பசுமை பாழாகும் என இயற்கை ஆர்வலர்கள் சீற்றம் கொண்டார்கள். மத்திய, மாநில அரசுகளைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் சாரா அமைப்புகளும் மேடை போட்டு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையெல்லாம் தாண்டி நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்தார்கள்.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் மக்கள் போராட்டத்தைத் துளியும் பொருட்படுத்தவில்லை. கிணற்றில் விழுந்த கல்லைப் போல எடப்பாடி அரசு செயல்படுகிறது என்று சொன்னவர்கள், மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு 8 வழிச் சாலை நடைமுறைப்படுத்துவதில் மின்னல் வேகத்தில் செயல்பட்டது.

Sponsored


சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை 10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் என அறிவித்த ஓரிரு நாள்களில் இச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டம் வழியாக 277 கி.மீட்டர் தூரம் செல்லும் வரைபடம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதையடுத்து 8 வழிச் சாலை அமைக்கும் பணிக்காக முதன் முதலில் சேலத்தில் ஜூன் 18 ம் தேதி நிலம் கையகப்படுத்தப்பட்டு நில அளவீடு செய்யப்பட்டது. படிப்படியாக அனைத்துப் பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் கடந்த 21.8.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றம் 8 வழி பசுமைச் சாலைக்கு இடைக்கால தடை விதித்தது.

Sponsored


இது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் தந்த நிலையில் கடந்த 30 ம் தேதி பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சேலம் டு தர்மபுரி எல்லையில் கல்வராயன்மலை கோம்பூர் வனப்பகுதியில் 8 வழிச் சாலைக்காக அளவீடு செய்து நடப்பட்டிருந்த முட்டுக் கற்கள் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. சம்பவம் அறிந்து அப்பகுதியில் 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும் திரண்டதை அடுத்து  காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை எனப் பலரும் குவிந்தனர். இவர்களுக்கு மத்தியில் போதையில் வந்திருந்த ஒரு குரூப் `நாங்க தான் மரங்களை வெட்டினோம்' என்று அசால்ட்டாகப் பேட்டி கொடுத்தார்கள். அனைத்துத் துறை அதிகாரிகளும் அதைக் கேட்டு வாயடைத்து, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதுபற்றி கோம்பூர் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன், ``இந்த வழியாக ரோட்டில் டூ விலரில் சென்று கொண்டிருக்கும் போது காட்டுக்குள் சத்தம் கேட்டது. வண்டியை நிறுத்திப் பார்த்த போது மரங்களை வெட்டி ரெண்டு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். உடனே கிராம நிர்வாக அலுவலர், ஆர்.ஐ., தாசில்தார், வனத்துறையினர் என எல்லோருக்கும் தகவல் கொடுத்தேன். யாரும் எட்டிப் பார்க்கவில்லை. அதையடுத்து இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகவல் சொல்லி விட்டு பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அதன் பிறகு இப்பகுதிக்கு வந்து பார்க்கும் போது நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுக்கிடந்தன. இந்த இடத்துக்கு அருகில் இருக்கும் விவசாயி கணேசன் மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்தார். இறந்த குரங்குகளை எங்கு தூக்கி எறிந்தார்கள் என்று தெரியவில்லை. அரசு திட்டமிட்டு ஒன்றும் அறியாத கோம்பூர் மலைவாழ் மக்களைத் தூண்டி விட்டு வெட்டியிருக்கிறது. உயர் நீதிமன்றம் இடைக்கால தடை இருக்கும் போது அதை மதிக்காமல் இப்படி அரசு கீழ்த்தரமாகச் செயல்படுவது வெட்கக் கேடானது'' என்றார்.

இப்பகுதிக்கு வந்திருந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், ``இவ்வளவு மரங்களை அரசுக்குத் தெரியாமல் தனிநபர்களால் வெட்ட முடியாது. ஒரு மரத்தை வெட்டி போலீஸ் கேஸ் ஆனாலே மரம் வெட்டியவர் ஓடி ஒழிந்துகொள்ளும் நாட்டில் 128 பழைமை வாய்ந்த அரிய மரங்களை வெட்டி விட்டு காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் முன்பு நாங்கள்தான் வெட்டினோம் என்று சொல்லுவதும் அதற்கு அதிகாரிகள் கைகட்டி, வாய்ப் பொத்தி இருப்பதைப் பார்க்கும் போதே தெரிந்து கொள்ளலாம். அரசே மலைவாழ் மக்களைத் தூண்டி விட்டு வெட்ட வைத்திருக்கிறது என்று.

மரங்கள் வெட்டப்பட்டுள்ள இந்த இடம் வருவாய்த் துறைக்குச் சொந்தமானதாக இருந்தாலும், வனப்பகுதியை யொட்டியே இருப்பதால் பழைமை வாய்ந்த மூலிகை மரங்கள் இருக்கின்றன. கரடி, காட்டெருமை, மயில், குரங்கு போன்ற வன விலங்குகளின் வாழ்விடமாகவும் இருக்கிறது. 8 வழிச் சாலை இந்த வழியாகத்தான் செல்லுகிறது. இன்னும் 8 வழிச் சாலைக்கு சுற்றுச் சூழல் ஆய்வு நடத்தப்படவில்லை. இந்த மரங்கள் இருந்தால்  8 வழிச் சாலைக்கு அனுமதி கிடைக்காது என்று சுற்றுச்சூழல் ஆய்வுக்கு முன்பே வெட்டி விட்டார்கள்'' என்றார்.

8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயி மோகனசுந்தரம், ``இந்த மரங்கள் வெட்டப்பட்டதைக் கேள்விப்பட்டு 80 கி.மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். நாங்கள் அமைப்பாக வந்து இப்பகுதியை ஆய்வு செய்து பார்த்ததில் 128 மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. 8 வழிச் சாலைக்கு நடப்பட்டிருக்கும் முட்டுக்கற்கள் அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மரங்களை வெட்டியிருக்கிறார்கள். இப்பகுதியில் 8 வழிச் சாலை முட்டுக்கற்களுக்குள் டிரான்ஸ்ஃபாரம், செம்மண் ஏரி இருப்பதால் சாலையை விரிவு படுத்த இந்த மரங்கள் வெட்டியிருக்கிறார்கள். அரசு சொல்லியே மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதை எந்த நீதிமன்றத்திலும் சொல்ல முடியும்'' என்றார்.

அருகே 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் சமூக ஆர்வலர்களையும் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கோம்பூர் மலைக்கிராத்தைச் சேர்ந்த பழனிசாமி, ஆண்டி போதையில், ``கோயிலுக்கு 10 மூட்டை சிமென்ட் கொடுத்தாங்க, 25 ஆயிரம் பணம் கொடுத்தாங்க. அதனால் எங்க ஊரைச் சேர்ந்த சக்தி ஆட்கள் வெட்டினாங்க. நாங்க தற்போது குடியிருக்கும் பகுதியில் 8 வழிச் சாலை வருவதால் இங்கு குடியேற மரங்களை வெட்டினோம். ஏற்கெனவே இந்த இடத்தில் நாங்கள் குடியிருந்தோம். நாங்க வச்ச மரத்தைத்தான் வெட்டி இருக்கிறோம். எங்களைக் கேட்பதற்கு இவர்கள் யார்? என்று உளறிக் கொண்டிருந்தார்கள். அனைத்துத் துறை அதிகாரிகளும் அமைதியாக இருந்தார்கள்.

   

வட்டாட்சியர் கற்பகவடிவு, ``இப்பகுதியில் வேறு ஒரு சர்வே எண்ணில் இருந்த காய்ந்த மரங்களை வெட்டுவதற்கு பெர்மிஷன் கொடுத்தோம். ஆனால், இங்குப் பச்சை மரங்களை வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இதற்கும் 8 வழிச் சாலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்றார்.

மரம் வெட்டியதாகக் கூறியவர்கள் அருகே நின்று கொண்டிருந்த தர்மபுரி பொறுப்பு ஆர்.டி.ஓ., அஜய் சீனிவாசனிடம் கேட்டதற்கு, ``இது வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடம். அதனால் நாங்கள் தற்போது  விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். இங்கு 128 மரங்கள் வெட்டப்பட்டிருக்கிறன. யார் மரத்தை வெட்டியிருந்தாலும் தவறானது. திருட்டுத் தனமானது. முறையாக விசாரணை நடத்தி காவல்துறையில் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம்.. நாங்கள் மரங்களை வெட்ட எந்த ஒரு பெர்மிஷனும் கொடுக்கவில்லை. இதற்கும் 8 வழிச் சாலைக்கும் தொடர்பு இல்லை'' என்றவரிடம் மரங்களை வெட்டியதாக உங்கள் அருகில் இருக்கும் சிலர் கூறுகிறார்களே என்றதற்கு, ``ஊர் மக்களிடமும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்'' என்று மழுப்பலாகக் கூறினார்.

திட்டத்தை நிறைவேற்ற மக்களைச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்தினால். நாளைக்கு அரசுக்கே ஆபத்தாக நேரிடும்.Trending Articles

Sponsored