சடையநேரி, தாங்கை குளம், புத்தன்தருவை குளங்களுக்குத் தண்ணீர் திறந்துவிட தி.மு.க கோரிக்கை!



``தாமிரபரணி ஆற்றில் தற்போது இருந்தே போதுமான அளவுக்குத் தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட்டு வறட்சிப் பகுதியிலுள்ள சடையநேரி, புத்தன்தருவை, தாங்கைகுளம் உட்பட தாமிரபரணி ஆற்றின் மூலமாக நீர்வரத்து பெறும் அனைத்து குளங்களையும் தாமதமின்றி நிரப்பிட வேண்டும்'' எனத் தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாகத் தி.மு.க மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம், உடன்குடி ஒன்றியங்கள் மிகவும் வறட்சி பகுதிகளாக இருந்து வருகிறது. உடன்குடி ஒன்றியத்தில் சடையநேரி குளம், புத்தன்தருவை, தாங்கை குளம் என ஏராளமான குளங்கள் அமைந்துள்ளன. இந்தக் குளங்கள் மூலமாகப் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இப்பகுதிகளிலுள்ள குளங்களில் கடந்த பல ஆண்டுகளாகவே போதுமான அளவுக்குத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படவில்லை. இக் காரணத்தால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பல ஆயிரம் அடி அதல பாதாளத்துக்கு கீழாகக் குறைந்துபோனதால் கடல்நீர் உட்புகுந்து விட்டது. நிலத்தடிநீர் உவர்ப்புத்தன்மையாக மாறிவிட்டதால் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் நிலத்தடிநீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Sponsored


இப்பகுதியிலுள்ள பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தாமிரபரணி ஆற்றிலிருந்து தனிக்கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்து வருடம் முழுவதும் இங்குள்ள குளங்களில் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கான வழிமுறைகளைப் பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தாமிரபரணி ஆற்றின் மூலமாகத் தண்ணீர் பெறும் சடையநேரி குளம், புத்தன்தருவை குளம் உள்ளிட்ட 53 குளங்களையும் போர்க்கால அடிப்படையில் தூர் வாரி சீரமைத்து ஆழப்படுத்திட வேண்டும்.

Sponsored


இந்நிலையில் கடந்த மாதத்தில் கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றுக்கு தண்ணீர் தரும் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் ஆற்றில் திறந்துவிடப்பட்ட அதிகப்படியான தண்ணீரைப் பாசனக்குளங்களுக்குக் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை தவறியதால் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 15 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலந்துவிட்டது. இந்த நேரத்தில் ஏதோ பெயரளவுக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் தற்போது சடையநேரி குளத்தில் ஓரளவுக்குத் தண்ணீர் உள்ளது. இதுவே புத்தன்தருவை உள்ளிட்ட சில குளங்கள் இன்னும் சரியான அளவில் நீர்வரத்து இல்லாமல் வெறும் கட்டாந்தரைகளாகவே காட்சி அளித்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் தாமிரபரணிக்குத் தண்ணீர் தரும் அணைகள் நிரம்பிய நிலையிலேயே இருந்து வருகின்றன. 

Sponsored


அடுத்துவரும் அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக்காலம் தொடங்கிவிடும். இந்நேரத்தில் அணைகளில் ஏற்கெனவே இருப்பில் இருக்கும் தண்ணீரை ஆற்றில் திறந்துவிடும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். அந்த நேரத்தில் ஆற்றில் வரும் அதிகப்படியான தண்ணீரை குளங்களில் கொண்டு சென்று சேமித்துவைக்க முடியாமல் மீண்டும் தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்லும் அவலநிலைதான் ஏற்படும். எனவே, இதைக் கருத்தில் கொண்டும், நெல்லை மாவட்ட அணைகள் நிரம்பி இருப்பதை கவனத்தில் கொண்டும் தாமிரபரணி ஆற்றில் இப்போது இருந்தே போதுமான அளவுக்குத் தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட்டு வறட்சி பகுதியிலுள்ள சடையநேரி, புத்தன்தருவை, தாங்கை குளம் உட்பட தாமிரபரணி ஆற்றின் மூலமாக நீர்வரத்து பெறும் அனைத்து குளங்களையும் தாமதமின்றி நிரப்பிட வேண்டும்.

இதன் மூலமாகச் சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்திலுள்ள ஏராளமான கிராமங்களில் நிலத்தடிநீரின் உவர்ப்புத்தன்மையை மாற்ற முடியும். அதோடு கடந்த பல வருடங்களாகவே போதுமான தண்ணீரின்றி விவசாயச் சாகுபடிப் பணிகளை சரியான முறையில் செய்ய முடியாமல் வறுமையில் வாடி வரும் விவசாயிகள் இந்த வருடமாவது நெற்பயிர், முருங்கை போன்ற சாகுபடிகளைச் செய்து பயன்பெற முடியும். பொதுமக்கள், விவசாயிகள் நலன்கருதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளரும் பொதுப்பணித்துறையினரும் இனியும் காலம் தாழ்த்தாது தாமிரபரணி பாசனத்திலுள்ள அனைத்து குளங்களையும் விரைந்து நிரப்பிட வழிவகை செய்திடவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.



Trending Articles

Sponsored