`கோடைக்கு முன்பே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுங்கள்'- அதிகாரிகளுக்கு தம்பிதுரை அறிவுறுத்தல்!Sponsored"கரூர் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம்செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பேரூராட்சித் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.

கரூர் அரசு சுற்றுலா மாளிகையில், மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பேரூராட்சித் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நாடாளுமன்ற துணைச் சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் இன்று (03.09.2018) ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய தம்பிதுரை, "மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்காக 14 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்பட்டுவருகின்றன. இத்திட்டங்களில் ஏற்படும் பழுது, உடைப்பு, நீர் வீணாகிச் செல்வது, தாழ்வான பகுதிகளுக்குக் கூடுதலாகச் செல்வது, மேடான பகுதிகளுக்குக் குறைவாகச் செல்வது, குறைந்த மின்னழுத்தம் போன்றவைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். குடியிருப்புப் பகுதிகளுக்கு நீர் எடுத்துச்செல்லும் பைப் லைன்களைச் சரியான அளவில் அமைக்க வேண்டும். ஒரு ஊருக்கு நீர் வழங்கும்போது, அந்தக் கிராமத்தில் எத்தனை நபர்கள் வசிக்கிறார்கள், எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். அதற்கு எவ்வளவு குதிரைத்திறன்கொண்ட மோட்டார் பொருத்த வேண்டும் என்பதை உயரிய தொழில்நுட்பம் கொண்டு ஆலோசனைசெய்து, பணிகளைச் செயல்படுத்த வேண்டும். கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, நீரெடுத்துச் செல்லும் வழியிலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் கொடுத்து, பின்பு எடுத்துச்செல்லும் வகையில் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டார் பழுதானால், உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புவியியல் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளையும் கணக்கெடுத்து, நிலத்தடி நீர் அதிகமுள்ள பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள்மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் ரூ.13 கோடி மதிப்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுக்குடிநீர்த் திட்டங்களில் 434 அனுமதியற்ற இணைப்புகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில், 79 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இணைப்புகளும் துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அரவக்குறிச்சி மற்றும் கடவூர் பகுதிகளுக்குத் தனித்தனியே கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. குடிநீர் வழங்கும் பணிகளில் உள்ள குறைபாடுகளை நீக்க, குழு ஒன்றை அமைத்து, குடிநீர் வழங்கும் பாதைகளை வரைபடம் மூலம் கணக்கிட்டு, எந்தக் கிராமத்துக்கு தண்ணீர் செல்லவில்லை என்பதை அறிந்து அதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதைத் திட்டமிட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், கோடைக்காலத்துக்கு முன்னதாகவே விரைவாகச் செயல்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored