பெற்றோரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட மகன் - கடன் சுமையால் நேர்ந்த பரிதாபம்!



Sponsored



கோவையில் கடன் சுமை தாங்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள 'ஆவாரம்பூ' எனும் அடுக்கு மாடி குடியிருப்பில் தன் பெற்றோருடன் வசித்து வந்தார் வைரமுத்து. 29 வயதே ஆன இவர் அந்தப் பகுதியில் அண்ணாமலையார் என்ற பெயரில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்துள்ளார். வைரமுத்துவின் வீடு நேற்று முதல் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. 

Sponsored


குடும்பத்தோடு வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள் என நினைத்த அக்கம்பக்கதினருக்கு இன்று அதிர்ச்சி காத்திருந்தது. மாலை சுமார் 6 மணிக்குமேல் கோவை பீளமேடு போலீஸார் ஆவாரம்பூ அப்பார்ட்மென்டுக்குள் நுழைந்து வைரமுத்து வீட்டின் கதவை உடைக்க அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பதறிப்போனார்கள். வீட்டினுள்ளே வைரமுத்துவின் அப்பா பாலமுருகனும் (55), அம்மா லட்சுமியும் (50) கையும் கழுத்தும் அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடக்க, வைரமுத்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைக் கண்டு போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

Sponsored


கடன் சுமை அதிகரித்துவிட்டதால் அதைச் சமாளிக்க முடியாமல் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தன்னைப் பிரிந்து வாழ விருப்பமில்லை என்றதால் மூவரும் தற்கொலை செய்துகொள்வதாகவும் வைரமுத்து வீடியோவில் மரண வாக்குமூலம் பதிவு செய்து வைத்துள்ளார் என்று அதைப் பார்த்த காவல்துறையினர் கூறுகிறார்கள். தவிர கடன் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து கடிதம் ஒன்றும் எழுதி வைத்துள்ளார் வைரமுத்து.

பக்கத்து வீட்டுக்காரருக்கே தெரியாத இந்தச் சம்பவம் போலீஸுக்கு எப்படித் தெரியவந்தது என்று விசாரித்தால் அடுத்த அதிர்ச்சி, ``வைரமுத்துவின் சித்தி மகாலெட்சுமி திருப்பூரில் இருக்கிறார். அவருக்கு நேற்றைய தினம் ஓர் கூரியர் அனுப்பியிருக்கிறார் வைரமுத்து. அதில் தங்களுடைய கடன் மற்றும் சொத்து விவரங்களையும், கடன் சுமை தாங்காமல் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்ற தகவலையும் எழுதி அதோடு வீட்டுச் சாவியையும் அனுப்பி வைத்திருக்கிறார். கூரியர் கிடைத்ததும் பதறியடித்துக் கொண்டு போலீஸுக்கு மகாலெட்சுமி தகவல் சொல்ல, வைரமுத்துவின் வீட்டுக்கு விரைந்தது போலீஸ். ஆனால், வைரமுத்துவின் குடும்பம் கூரியரை அனுப்பிய கையோடு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

மூன்று பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், கடன் தொல்லையால் தன்னுடைய பெற்றோரை கொலை செய்து விட்டு வைரமுத்துவும் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் கடன் சுமையால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Trending Articles

Sponsored