இடிந்து விழும் நிலையில் திருவாரூர் கோயில் சேதுபதிமண்டபம் - சீரமைக்கக் கோரும் பக்தர்கள்!Sponsoredதிருவாரூர் தியாகராசர் திருக்கோயில் உலகப் புகழ் பெற்ற சிவாலயம்  ஆகும். ஆசியாவிலேயே  மிகப்பெரிய தேரைக்கொண்டது இத்திருத்தலம், கமலை என்னும் பராசக்தி தவம் செய்த தலம் என்பது புராணம் கூறும் வரலாறு. இத்தலத்தில் உள்ள கமலாலய திருக்குளம், ``இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர்  கமலாலயத் திருக்குளத்தில்எடுத்துக்கொள்''  என்று முதுகுன்றத்தீசாரல்  சுந்தரரைப்  பணிக்கப்பட்டு  அதன்படி   கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்ட தலம்' என்ற சிறப்பைக் கொண்டது. இக்கோயிலில்  மொத்தம்  ஏழு  கோபுரங்கள்  உள்ளன. இத்தலத்துக்கு வரும் பக்தர்கள்  கமலாலயத் திருக்குளத்தில் தங்கள் பாதங்களை கழுவிய பின்னரே கோயிலினுள் நுழைவர். அதனால்  பெருவாரியான  பொதுமக்கள் மேற்கு கோபுர வாசல் வழியே ஆலயத்துக்குள் வருவர், அப்படி வரும் பக்தர்கள் ஆரூணை காண வழியில் உள்ள சேதுபதி மண்டபத்தை கடந்தே உள்ளே செல்ல முடியும். 

இந்த நிலையில், சேதுபதி மண்டபமானது எப்போது வேண்டுமானாலும்  இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதனால் இதன் வழியே செல்லும்  பக்தர்கள்  ஒரு வித அச்சத்துடனேயே செல்கின்றனர். இந்த மண்டபத்தில்தான்  பொதுமக்கள்  படிப்பகம் மற்றும் கோயில் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்தத் தலம்  கட்டியதற்கான வரலாற்றுச் சுவடுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் காலத்தில்  கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு சோழர், பாண்டியர், விஜயநகர வேந்தர்கள் பற்றிய 65 கல்வெட்டுகள் உள்ளன. பழைமை மிகுந்த இந்த மண்டபம்  இன்றைக்கு இடியும் நிலையில் உள்ளது. எனவே, இதைச்  சீரமைக்கும் பொருட்டு பொதுமக்கள் அறநிலைத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மழைக்காலங்கள் வர இருக்கும் நிலையில்  விரைந்து  இதைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
                             
திருவாரூர்  தியாகராசர்  ஆலயமானது  சிறப்பு மிக்க தலம் என்பதால்  பல்வேறு  மாநிலங்களில் இருந்து பக்தர்களும், சுற்றுலாப்  பயணிகளும் பல லட்சம் பேர் வந்த வண்ணம் உள்ளனர். திருவிழாக்காலங்களிலும், தேரோட்டத்தின் போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். பின்வரும்  நாளில் இந்தக் கோயிலில் எவ்வித  விபத்துகளும்  நடைபெறா வண்ணம் இருக்க அறநிலைத்துறை உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்தலத்தில் உள்ள பழைமையான ஓவியங்கள், சிற்பங்கள் அனைத்தையும் அழியும் நிலையில்  இருந்து பாதுகாத்தல் என்பது அறநிலைத்துறையின் தலையாய கடமையாகும்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored