தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன, மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் விளக்கிய பாதிக்கப்பட்டவர்கள்!Sponsoredதூத்துக்குடியில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் பலத்த காயமடைந்தார்கள். இந்தச் சம்பவம் தமிழகத்தையும் தாண்டி நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. போராட்டம், துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைத்துத் தரப்பினரிடையேயும் விவாதப்பொருளாக மாறியது.

இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டின் 2-ம் நாளன்று, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட பரமசிவன், ராமச்சந்திரன், ராஜா சிங், ஆனந்த கண்ணன் மற்றும் தங்கம் உள்ளிட்டோர் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அத்துடன் போராட்டத்தின்போது, ஒவ்வொரு நபரையும் காவல்துறையினர் எப்படி மாற்றுத்திறனாளிகளாக ஆக்கினார்கள் என்ற விவரத்தை அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.

Sponsored


இவர்களின் தங்கம் என்ற பெண் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். போராட்டத்தின்போது, காவல்துறையினர் தங்கத்தின் இடதுகையை ஆவேசமாக முறுக்கி உடைத்திருக்கிறார்கள். இதனால் அவரது இடதுகை முற்றிலுமாக வேலைசெய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தவர் ராஜா சிங். மக்கள் போராட்டத்தில் தானும் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலந்துகொண்டவரை முழங்காலில் போலீஸார் சுட்டுள்ளனர். பெயின்ட் தொழிலாளியாகப் பணியாற்றிக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர் ஆனந்த கண்ணன். போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஆனந்தக் கண்ணனின் உடலில் 60 சதவிகிதம் அளவுக்கு ஊனம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மட்டுமல்ல, அவருடைய  குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது.

Sponsored


பரமசிவம் ஓர் ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில், தொடையில் குண்டு காயம் ஏற்பட்டு, பரமசிவனின் கால் ஊனமாகிப்போனது. 23 வயது இளைஞர் ராமச்சந்திரன். தாரை, தப்பட்டையுடன் போராட்டக் களத்துக்குச் சென்று முழக்கமிட்டவரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் காலில் சுட்டு ஊனமாக்கியிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு சம்பவத்தையும் தெளிவாக விளக்கிக் கூறிய விழா நிர்வாகிகள், அவர்கள் அனைவருக்கும் கதர் ஆடை அணிவித்து, நினைவுக் கேடயம் வழங்கிக் கௌரவித்தனர். காவல்துறையினரின் தாக்குதலில் ஒரு காலை இழந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரின்ஸ் என்ற வாலிபரின் ஒலிப்பதிவும் அப்போது பகிரப்பட்டது.

அதைத்தொடர்ந்து பேசிய மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் ஜான்ஸி ராணி, "காவல்துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக, இன்னும் பல பேர் தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். கண்மூடித் திறக்கும் ஒரே நொடியில் இவர்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உரிமைகளும், நியாயங்களும் கிடைக்கும்வரை எங்களின் போராட்டம் ஓயப்போவதில்லை. தூத்துக்குடியில் ஒலித்த முழக்கம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலும் எதிரொலிக்கும்" என்று முடித்தார்.Trending Articles

Sponsored