'ஆசிரியர் அடித்ததைக்கூட தாங்கிக்கொள்வேன்; ஆனால்...' மூன்றாம் வகுப்பு மாணவன் கண்ணீர்!Sponsoredதஞ்சாவூரில், அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் தலையைப் பிடித்து சுவரில் மோதியதோடு, சக மாணவர்களைக்கொண்டு  வரிசையாகத் தலையில் குட்ட வைத்துள்ளார். பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர், இதற்குக் காரணமான ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூரில் உள்ளது அரசு உதவிபெறும் பள்ளியான கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி. இங்கு, மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் வெங்கடேஷ். இவனது வகுப்பாசிரியை கீதாஞ்சலி. வெங்கடேஷின் அப்பா லஷ்மணன் காய்கறி மார்க்கெட்டில் வேலைசெய்கிறார். கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு வந்த வெங்கடேஷ், சரியாகப் படிக்கவில்லை எனக் கூறி, ஆசிரியை கீதாஞ்சலி, மாணவனின் தலையைப் பிடித்து  சுவரில் மோதியுள்ளார். பின்னர், சக மாணவர்களைக்கொண்டு வரிசையாக வெங்கடேஷின் தலையில் குட்ட வைத்துள்ளார். இதனால், அந்த மாணவனின் தலையில் வீங்கிவிட்டது. பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றதும் நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளான்.

இதையடுத்து, இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவனின் அம்மா வாசுகி, இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். அவரிடம் பேசினோம். ``என் பையன் சுமாராகத்தான் படிப்பான். இதைக் காரணம்காட்டி, அவனது வகுப்பாசிரியை அடிக்கடி அடித்துவந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, வழக்கம்போல அவனை அடித்ததோடு, மற்ற மாணவர்களைக்கொண்டு தலையில் குட்ட வைத்துள்ளார். அதோடு இல்லாமல், `உன் அப்பா காய்கறி விற்பவர்தானே; நீயும் தக்காளி வெங்காயம் விற்கத்தான் லாயக்கு' எனவும் பேசியிருக்கிறார். பள்ளி முடிந்து வீடு வந்தபிறகு, அழுதுகொண்டே என்னிடம் தெரிவித்தான். வழக்கம்போல, அவனை நேற்று பள்ளிக்கு கிளம்பச் சொன்னேன். அழ ஆரம்பித்துவிட்டான். அதனால், இன்று பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் கேட்டால், 'அந்த ஆசிரியை பள்ளிக்கு வரவில்லை. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்'  என்கிறார்.

Sponsored


நாங்க படிக்காததால்தான் வாழ்க்கையில் கஷ்டப்படுறோம். அதனால், புள்ளைங்களை நல்லா படிக்கவைக்க நினைக்கிறோம். சரியா படிக்கலைனா, அவனுக்கு சொல்லிக்கொடுக்கணும், அதை விட்டுவிட்டு இப்படி அடிச்சா அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? இதற்குக் காரணமான ஆசிரியைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

மாணவன் வெங்கடேஷ் தயங்கியபடி, ''என்னை டீச்சர் வெங்காயம் விற்கப் போ, தக்காளி விற்கப் போ என்று சொல்றாங்க. அவங்களுக்கு தேவையான வேலைகளையும் செய்யச் சொல்றாங்க. அவங்க அடிச்சதைக்கூட தாங்கிக்குவேன். ஆனா, எல்லோரையும் என் தலையில் குட்ட வைத்ததுதான் என்னால் தாங்கிக்க முடியலை'' என்றான்.
 

Sponsored
Trending Articles

Sponsored