கட்டுப்பாட்டை இழந்த அதிகாரியின் கார்... வயலில் தூக்கிவீசப்பட்ட 3 தொழிலாளர்கள் உயிரிழப்புSponsoredபொதுப்பணித்துறையின் உதவிப் பொறியாளர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது. வயலில் தூக்கிவீசப்பட்ட 5 பேரில் மூன்று பேர் பலியானார்கள்.

திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை அடுத்துள்ள சிறுகமணி பேருந்து நிலையத்தில், நேற்று மாலை பேருந்துக்காகக் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை பாப்பக்காபட்டியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி வடிவேல் மற்றும் சித்ரா, ஆறுமுகம் மனைவி கோமதி உள்ளிட்டோர் காத்திருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்தவழியே கரூரிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கார் வேகமாக அவர்கள் மீது பாய்ந்தது.

என்ன நடக்கிறது எனச் சுதாரிப்பதற்குள் அந்தப் பரிதாபம் நடந்தேறிவிட்டது. அடுத்த சில விநாடிகளில் கார் மோதிய வேகத்தில் சிக்கிய பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் அருகில் உள்ள வயல் மற்றும் வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டனர். அதைப்பார்த்து பதறிய அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் கட்டட மேஸ்திரி வடிவேல் மற்றும் அவர் கட்டட வேலைக்கு அழைத்து வந்த பொய்யாமணி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சித்ரா, ஆறுமுகம் மனைவி கோமதி உள்ளிட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டட தொழிலாளர்களான பாப்பாத்தி, பலியான கோமதியின் மாமியார் ரங்கநாயகி உள்ளிட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

Sponsored


தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜீயபுரம் டி.எஸ்.பி சிவசுப்ரமணியன், பேட்டைவாய்த்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்தனர். அடுத்து பலியானோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், “இந்த விபத்தில் பலியான வடிவேல் கட்டட மேஸ்திரி. இவர் அவரது கிராமத்திலிருந்து திருச்சி அருகே உள்ள சிறுகமணி அக்ரஹாரம் பகுதியில் நடக்கும் கட்டுமான பணிகளுக்காகக் கூலி ஆட்களை அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாலையில் வேலை முடிந்ததும் சிறுகமணி பேருந்து நிறுத்தத்திலிருந்து, பேருந்தில் ஏறி பேட்டைவாய்த்தலையில் இறங்கி, அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கமாம். அப்படி வந்தவர்கள் நேற்று மாலையில் வேலை முடிந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காகக் காத்திருந்தபோதுதான், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கார் விபத்தை உண்டாக்கியது என்றும், அந்தக் காரை பொதுப்பணித்துறையின் உதவிப் பொறியாளர் தயாளகுமார் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

மேலும், தயாளகுமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சிறுகமணி பேருந்து நிறுத்தத்தில் பாய்ந்ததில் பெரும் விபத்தை உண்டாக்கியது எனத் தெரியவந்தது. காரை ஓட்டிவந்த பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் தயாளகுமாரை, போலீஸார் கைது செய்தனர். பலியானவர்களின் உடல்கள் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. உடலை வாங்கப் பலியானவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனையில் குவிந்ததால் மருத்துவமனை வளாகம் சோகத்தில் மூழ்கியது.

Sponsored
Trending Articles

Sponsored