'என் மகளின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சி நடக்கிறது' - சோபியாவின் தந்தை ஆதங்கம்!Sponsored'விமானத்தில் பா.ஜ.க-வை எதிர்த்துக் கோஷமிட்ட ஷோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்கி, மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்லவிடாமல் தடுக்க முயற்சி நடப்பதாக, ஷோபியாவின் தந்தை சாமி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த பா.ஜ.க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு  இண்டிகோ விமானத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை வந்தார். அதே விமானத்தில், கனடாவில் பிஹெச்.டி ஆராய்ச்சி படிப்பு படிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற ஆராய்ச்சி மாணவியும் பயணம்செய்தார். தமிழிசையைப் பார்த்து, "பாசிச பா.ஜ.க ஒழிக; மோடி ஒழிக" எனக் கோஷம் எழுப்பினார்.

Sponsored


விமானம் தரை இறங்கியதும், வரவேற்பறையில் ஷோபியாவுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. ஷோபியாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.  இந்நிலையில், ஷோபியா வயிற்றுவலி காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனயில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

Sponsored


அதையடுத்து, தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவின் விசாரணையில், ஷோபியாவுக்கு மதியம் 12.05 மணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் கிடைத்தவுடன் நீதிமன்ற வாசலில் பல அமைப்பினர் வெடி வெடித்தனர். ஷோபியாவின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை 5.10 மணிக்கு நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்து ஷோபியா விடுவிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் 4-வது தளத்தில் சிகிச்சைபெற்றுவந்த அறையில் இருந்து போலீஸாரும், வழக்கறிஞர்களும் மீடியாக்களிடம் பேச விடாமல் ஷோபியாவை வேகமாக காரில் அழைத்துச்சென்றனர்.

ஷோபியாவின் காரை மீடியாக்கள் பின் தொடர்ந்தன. கந்தன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றது கார். காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்ற பின் கதவு அடைக்கப்பட்டது. மீடியாக்கள் அவரது வீட்டின் முன்பு சூழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
"ஷோபியாவிடம் பேச முடியாது. அவர், பேசும் நிலையில் இல்லை" என அவரது தந்தை சாமி கூறினார்.

பின்னர் இதுகுறித்து தெரிவித்த ஷோபியாவின் தந்தை சாமி, "தமிழிசை உட்பட 10 பேர்மீது காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. அரசை எதிர்த்துக் கோஷம் எழுப்பியதற்காகவே இப்படி வழக்கு போடப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசு மீதான வெறுப்பில் என் மகள் அப்படி கோஷம் எழுப்பியிருக்கலாம்.

என் மகள்மீது ஏதோ அமைப்புகளின் பின்புலம் உள்ளதாக தமிழிசை கூறியுள்ளார். எங்கள் பின்புலத்தில் எவ்வித அமைப்பும் இல்லை.  என் மகளை மீண்டும் கனடா செல்ல விடாமலும், ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளவிடாமலும் தடுக்கும் வகையில், பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சிகள் நடக்கின்றன. எதையும் சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றார்.Trending Articles

Sponsored