``விவசாயிகளைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்" - எச்சரிக்கும் பாலகிருஷ்ணன்



Sponsored



கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீர் வரவில்லை என்றால் பெரும் போராட்டம் நடத்தப்படும் எச்சரிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் .
கடந்த 22-ம் தேதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து ஆய்வு செய்தார்கள். 
 
இந்த நிலையில், நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் எம்.பி ஆகியோர் சகிதமாக முக்கொம்பு கொள்ளிடம் மேலணை சீரமைப்பு பணியை ஆய்வு மேற்கொண்டார்.
 
இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன், ``முக்கொம்பு அணை 182 வருட பழைமையானதுதான். இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து பராமரித்து இருந்தால் உடைந்து இருக்காது. அதைச் செய்யாமல் அணைக்கு வயதாகி விட்டது அதனால் இடிந்து விட்டது எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. முக்கொம்பு கொள்ளிடம் மேல்அணை உடைந்ததற்கு தமிழக அரசுதான் முழுக் காரணம்.
 
தற்போது வடகிழக்குப் பருவமழை துவங்கி உள்ளது. எனவே கல்லணை, காவிரி  பாலங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பழைமையான பாலங்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்ய  வேண்டும்.
 
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால், காவிரி டெல்டா பகுதியில் கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். கடைமடைக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்" என எச்சரிக்கை விடுத்தார்.

Sponsored




Trending Articles

Sponsored