`ஏன் நடவடிக்கை எடுக்கல?' - கேள்விக்கேட்ட அ.தி.மு.க நிர்வாகிக்கு 'பளார்'விட்ட இன்ஸ்பெக்டர்Sponsoredகாவல் நிலையத்துக்கு வந்த அ.தி.மு.க மாவட்ட நிர்வாகி ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்து சட்டையைக் கிழித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக உள்ளார். மேலும், சேர்மனாகவும், மாவட்ட கவுன்சிலராக பலமுறை பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் இவர், தங்கள் பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான புகார் குறித்து, மணப்பாறை காவல் நிலையத்துக்குச் சென்ற பழனிச்சாமி, அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடியிடம், புகார் அளித்து நான்கைந்து நாள்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காதது குறித்து கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த இன்ஸ்பெக்டர் கென்னடி, ``இது என் ஸ்டேஷன். இங்கு வந்து என்னையே கேள்வி கேக்குறியா' எனக் கூறியதோடு, பழனிச்சாமியின் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் சட்டையைப் பிடித்து இழுத்து பழனிச்சாமியை வெளியே தள்ளியுள்ளார். இதில் காயமடைந்த பழனிச்சாமி மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
தகவல் அறிந்த வையம்பட்டி, மணப்பாறை, மருங்காபுரி பகுதியை அ.தி.மு.க-வினர் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி ஆசைத்தம்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.
 

`இன்ஸ்பெக்டர் கென்னடியை கைது செய்தால்தான் சாலை மறியலைக் கைவிடுவோம்' என அ.தி.மு.க-வினர் கூறியதால் பரபரப்பு நிலவியது. `இன்ஸ்பெக்டர் கென்னடி மீது நடவடிக்கை எடுப்போம்' என டி.எஸ்.பி உறுதி அளித்ததை அடுத்து  2 மணி நேரம் நீடித்த சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை இன்ஸ்பெக்டர் கென்னடியைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sponsored
Trending Articles

Sponsored