அழகிரியின் பேரணி குறித்த கேள்விக்கு துரைமுருகனின் ஒருவரி பதில்!Sponsored`குட்கா முறைகேடு தொடர்பாக நடத்தப்படும் சி.பி.ஐ சோதனை வரவேற்கத்தக்கது’ என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


 

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குட்கா முறைகேடு தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றியது. இந்த நிலையில், இன்று குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் டெல்லியிலிருந்து சென்னை வந்தனர்.  இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட அதிகாரிகள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இதனிடையே தி.மு.க பொருளாளராக பொறுப்பேற்று முதன்முதலாக துரைமுருகன் தன் சொந்த மாவட்டமான வேலூருக்குச் சென்றுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில்  துரைமுருகனிடம் கட்சி நிதியாக  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம் சி.பி.ஐ சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர், அதற்குப் பதிலளித்த துரைமுருகன், ‘குட்கா முறைகேடு தொடர்பான இந்த ரெய்டு முன்பே நடந்திருக்க வேண்டும். தாமதமாக நடத்தப்பட்டாலும் சி.பி.ஐ சோதனை வரவேற்கத்தக்கது’ என்றார்.   

பின்னர் துரைமுருகனிடன் மு.க.அழகிரி சென்னையில் நடத்திவரும் அமைதிப் பேரணி குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு சிரித்துக்கொண்டே `நோ கமெண்ட்ஸ்’ எனக் கூறினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored