செப். 7-ம் தேதி அசல் பாஸ்போர்ட்டுடன் ஆஜராகவும்! ஷோபியாவுக்கு போலீஸ் சம்மன்Sponsoredபா.ஜ.க.வை எதிர்த்து கோஷம் எழுப்பிய தூத்துக்குடி ஷோபியா மற்றும் அவரின் தந்தை சாமி ஆகிய இருவரையும் வரும் 7-ம் தேதி அசல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகும்படி புதுக்கோட்டை காவல் நிலையம் சம்மன் அளித்துள்ளது.

நெல்லையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற பா.ஜ.க. விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து  தூத்துக்குடிக்கு விமானத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை வந்தார். அதே விமானத்தில், கனடாவில் பி.எச்டி. மேற்கொண்டு வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியாவும் பயணம் செய்தார். விமானத்தில், தமிழிசையை நோக்கி கைகளை உயர்த்தி,  "பாசிச பா.ஜ.க.,ஒழிக" என கோஷம் எழுப்பினார்  ஷோபியா. தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியதும் அப் பெண்ணுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பெண்ணின் மீது தமிழிசை செளந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 15 நாள்கள் ஷோபியாவை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி ஷோபியா மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷோபியாவுக்கு  நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இவ்வழக்கின் முதல் நாள் விசாரணையின்போது, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஷோபியாவிடம் இருந்து பாஸ்போர்டை போலீஸார் பெற்றுக்கொண்டனர். ஆனால், அது காலாவதியான பாஸ்போர்ட் என்பதால், வரும் 7-ம் தேதி, காலை 10 மணிக்கு புதிய செல்லத்தக்க பாஸ்போர்ட் உடன் ஷோபியா மற்றும் அவரின் தந்தை ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டு ஷோபியாவின் தந்தை சாமியிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷோபியாவின் வழக்கறிஞர் அதிசயகுமாரிடம் பேசினோம். ``விசாரணை செய்ய மட்டுமே காவல்துறையினருக்கு அதிகாரம் உண்டு. பாஸ்போர்ட்டை கேட்பதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.  அசல் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாட்டோம். பாஸ்போர்ட்டை முடக்கி, ஷோபியாவை மீண்டும் கனடா செல்லவிடாமல் நிரந்தரமாக தடுப்பதற்கான முயற்சிதான் இது. இதை சட்டப்படி எதிர்கொள்வோம்" என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored