'தி.மு.க-வில் அழகிரியின் ஸ்லீப்பர் செல்கள்!' - இது ஈரோடு கலாட்டாSponsoredசென்னையில் இன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் அழகிரி நடத்திய அமைதிப் பேரணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, அவரது மூத்த மகனான மு.க.அழகிரி தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ‘ஸ்டாலின் தலைமையை ஏற்று கட்சியில் இணைந்து செயல்படத் தயார்’ என இறங்கி வந்து அழகிரி பேட்டி கொடுத்தாலும், ஸ்டாலின் தரப்பு அசைந்து கொடுப்பதாக இல்லை. அதையடுத்து, கடைசி அஸ்திரமாக தன்னுடைய ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேரை திரட்டி, கலைஞர் சமாதிக்கு அமைதிப் பேரணியாகச் சென்று தன்னுடைய பலத்தைக் காட்ட அழகிரி முடிவெடுத்தார். அந்த அமைதிப் பேரணி சென்னையில் நடைபெற்றது.

இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேன், கார், பஸ் என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னையில் குவிந்தனர். ஈரோட்டில் இருந்து என்.கே.கே.பி ராஜாவின் ஆதரவாளரான சுகுணா சக்தி என்பவர் தலைமையில் ஒரு டீமும், ஈரோடு மாவட்ட அழகிரி மக்கள் பேரவை சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் என்பவருடைய தலைமையில் ஒரு டீமும் பேரணியில் கலந்து கொண்டது.

Sponsored


இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த அழகிரியின் ஆதரவாளரான சுகுணா சக்தி என்பவரிடம் பேசினோம். ``வேன், பஸ் என மொத்தம் 38 வாகனங்களில் 1500-க்கும் மேற்பட்ட உண்மையான அழகிரி ஆதரவாளர்கள் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறோம். நான் 20 வருஷமாக தி.மு.கவில்தான் இருக்கேன். அந்த வகையில், கருணாநிதி வளர்த்த தி.மு.கவை அழகிரியால் தான் காப்பாற்ற முடியும். திறமை இல்லாதவர்கள்தான் ஸ்டாலின் பக்கம் இருந்து, அவரை இயக்கிக்கொண்டு இருக்கின்றனர். ஸ்டாலினை செயல்படாமல் முடக்கி வைப்பதே அவர்கள்தான்” என வெடித்தார். 

Sponsored


ஈரோடு மாவட்ட அழகிரி மக்கள் பேரவை அமைப்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ``நான் 17 வருடங்களாக அழகிரி மக்கள் பேரவையை நடத்தி வருகிறேன். எங்களுக்கு கட்சியில எந்தப் பதவியும் கேட்கலை. எங்களை தி.மு.கங்கிற கட்சியில சேர்த்து மரியாதையும், அங்கீகாரமும் கொடுத்தா போதும். அந்த வகையில், அழகிரி தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடந்திருக்கிறது. முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், உள்ளூர் தி.மு.க நிர்வாகிகளின் எதிர்ப்பாளர்கள், தி.மு.கவை உண்மையாக நேசிக்கும் தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் இன்றுகூட இருக்கின்றனர். தற்போது தி.மு.க மாவட்டச் செயலாளர்களாக இருக்கின்ற 12 பேர் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள்தான். அந்த ஸ்லீப்பர் செல்கள் யாரென்று இன்றைக்கு நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``ஒரு வேளை அமைதிப் பேரணிக்குப் பிறகும் எங்களை தி.மு.கவில் இணைத்துக்கொள்ளவில்லை என்றால், ‘கலைஞர் பேரவை’ அல்லது ‘கலைஞர் தி.மு.க’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவோம். அதற்கு மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமித்து, 234 தொகுதியிலும் தி.மு.கவை எதிர்த்து வேலை செய்வோம். எங்களுடைய அண்ணன் அழகிரி இன்றைக்கு எடுக்கப்போகும் முடிவில் பெரிய மாற்றம் இருக்கும்” என்றார்.Trending Articles

Sponsored