நல்லாசிரியர் விருது விழாவில் அமைச்சர்கள் உள்ளே; ஆசிரியர்கள் வெளியே!Sponsoredதமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் முப்பெரும் விழா சென்னைக் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட இந்த விழாவில், அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டதால் ஆசிரியர்கள் அரங்கத்துக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

நல்லாசிரியர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி, கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. கலைஞர் நினைவிடம் வரையிலான அழகிரியின் அமைதிப் பேரணி நிகழ்வால், விருது விழா மாலை 3 மணிக்கு மாற்றிவைக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் அவதிக்குள்ளானார்கள். 

Sponsored


Sponsored


மாலை 3 மணிக்குத் தொடங்கப்பட்ட விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் என அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டதால், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் அரங்கத்தில் உள்ள இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ள, விருதுவாங்க தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் சென்னை வந்த ஆசிரியர்கள் நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்கு வெளியே காக்க வைக்கப்பட்டனர். இவர்களுக்காக, அரங்கத்தில் நடக்கும் நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டாலும் அதில் எந்தவிதமான ஒலியும் வரவில்லை. சரியான காற்று இல்லாமல் புழுக்கத்தில் நெளிந்தபடியே அரங்கத்துக்கு வெளியே காத்திருந்தனர். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம் பேசியபோது, ``நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மட்டுமே கலந்துகொண்டு விருது வழங்குவது வழக்கம். தற்போது, நடந்துவரும் விழாவில் பல அமைச்சர்களும் கலந்துகொண்டிருப்பதால், அதிகளவில் அதிகாரிகளும் கலந்துகொண்டிருக்கின்றனர். நல்லாசிரியர் விருது பெற வந்த எங்களுக்கு இடம் கிடைக்காமல் வெளியே காத்திருக்கிறோம். ஆசிரியர்களின் விழாவாக இல்லாமல் காவல்துறை அதிகாரிகளின் கெடுபிடி விழாவாகத்தான் இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதிகக் கூட்டத்தைக் கூட்டி நல்ல பெயர் பெறவே இவ்வளவு பேரையும் அழைத்துள்ளனர். முறையாகத் திட்டமிட்டிருந்தால் எங்களுடைய அசௌகரியத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்று நொந்தபடியே சொன்னார்கள்.

பள்ளிக் கல்வித் துறை நன்கு திட்டமிட்டு, நல்லாசிரியர்களை நல்ல முறையில் கௌரவித்திருக்கலாம்!Trending Articles

Sponsored