சீசன் தொடங்கும் முன்பே குவிந்த பறவைகள்! - களைகட்டும் கோடியக்கரை சரணாலயம்Sponsoredகோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு சீசன் தொடங்கும் முன்பே வெளிநாடுகளிலிருந்து பறவைகள் வருகை தர ஆரம்பித்துவிட்டதால், அவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் கண்டுகளிக்கின்றனர்.  

நாகை மாவட்டத்தின் தென்முனையான கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.  ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு நாடுகளிலிருந்து பல வண்ணப் பறவைகள் இங்கு வந்துசெல்வது வழக்கம். இந்த காலகட்டத்தில் அப்பறவைகள் வசிக்கும் நாடுகளில் கடும் குளிரான தட்பவெப்பநிலை இருக்கும்.  அப்பறவைகளுக்குத் தேவையான உணவும் கிடைக்காது. எனவேதான், குளிரிலிருந்து தப்பிக்கவும், இங்கு எளிதாகக் கிடைக்கும் இரையைத் தேடிக்கொள்ளவும் அப்பறவைகள் கோடியக்கரைக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன.  

Sponsored


இரான், இராக் ஆகிய நாடுகளிலிருந்து 4 அடி உயரமுள்ள பூநாரை, ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, லடாக்கிலிருந்து சிவப்புகால் உள்ளான், இலங்கையிலிருந்து கடல் காகம், ஆர்ட்டிக் பிரதேசத்திலிருந்து ஆலா, பர்மாவிலிருந்து சிறவி என வகை வகையான பறவைகள் வருகைதருகின்றன. உள்நாட்டுப் பறவைகளான செங்கால் நாரை, இந்தியன் பிட்டா, உள்ளான் பறவைகள் என 258 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து, சில காலம் தங்கியிருந்து, முட்டையிட்டுக் குஞ்சுபொரித்துச் செல்கின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையின் காரணமாக சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பே பறவைகள் வரத் தொடங்கிவிட்டன.  இவ்வருடம் அதிக அளவில் பறவைகள் வருமெனப் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

Sponsored


இதுபற்றி அப்பகுதி சமூக ஆர்வலர்களிடம் பேசியபோது, “முன்கூட்டியே வெளிநாட்டுப் பறவைகள் வரிசைக்கட்டி வரத் தொடங்கியதில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், பறவைகளைக் காண்பதற்கு வெகுதூரம் நடந்துசெல்ல வேண்டியிருக்கிறது. எனவே, இரண்டு கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து, அதில் நவீன டெலஸ்கோப் நிறுவலாம். அதன்மூலம் பறவைகளைக் கண்டு ரசிக்கப் பேருதவியாக இருக்கும்.  மேலும், சுற்றுலாப் பயணிகளுக்குக் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும்.  மேடு, பள்ளங்களாகிவிட்ட சாலைகளைச் செப்பனிட வேண்டும்.  பயணிகள் தங்கும் விடுதியைச் சீரமைத்து, அதில் உணவகம் அமைத்துத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும்” என்றனர்.  Trending Articles

Sponsored