`ஜூ.வி செய்தி எதிரொலி' - விபத்துகளைக் குறைக்க மேம்பாலம் கட்ட வழிவகை செய்த தம்பிதுரை!'என்ன செய்தார் எம்.பி?' என்ற தலைப்பில் கரூர் தொகுதி எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பற்றி ஜூனியர் விகடனில் எழுதி இருந்தோம். அதில், 'தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க மேம்பாலங்களை அமைப்பதாகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை' என்று மக்கள் சொல்லி இருந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜூ.வி செய்தியைத் தொடர்ந்து நாம் சுட்டிக்காட்டியிருந்த இடங்களில் மேம்பாலங்கள் கட்ட அதிகாரிகளை அழைத்து மீட்டிங் போட்டு ஆவண செய்திருக்கிறார் தம்பிதுரை.

Sponsored


கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக மேம்பாலம் அமைக்கவும், விரைவுச்சாலைகள் அமைப்பதற்காகவும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Sponsored


இக்கூட்டத்தில் பேசிய தம்பிதுரை, ``கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை -7-ஐ கடந்து செல்லும் தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், பெரிச்சிபாளையம் பிரிவு, பெரியார்வளைவு, அரவக்குறிச்சி பிரிவு ஆகிய பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலை-67-ஐ கடந்து செல்லும் கோடாங்கிபட்டி மற்றும் வீரராக்கியம் ஆகிய பகுதிகளிலும் ஏற்படும் விபத்துகளைக் தடுப்பதற்காக மேம்பாலங்கள் அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டு அவை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் விபத்துகளைக் தவிர்த்து சாலைப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவுள்ளது. திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் இருக்குமாறு செய்யவேண்டிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், கரூரிலிருந்து கோவைக்கும், கரூரிலிருந்து திருச்சிக்கும் விரைவுச்சாலைகள் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துப் பணிகளும் தொடங்கப்படவுள்ளன" என்று தெரிவித்தார். ``மேம்பாலங்கள் அமைய நடவடிக்கை எடுக்க முயலும் தம்பிதுரைக்கும், அதற்குக் காரணமான ஜூ.விக்கும் நன்றி" என்று உற்சாகமாகத் தெரிவித்தார்கள் கரூர் மக்கள்.

Sponsored
Trending Articles

Sponsored