`பதவி விலகாவிட்டால் 2 பேரையும் நீக்குங்கள்’ - ஆளுநரை வலியுறுத்தும் வைகோSponsored``தமிழகத்தில் குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்'' என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ``தமிழக அரசு ஊழலின் உச்சகட்டத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது என்பது சி.பி.ஐ நடத்திய சோதனையின் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. குட்கா ஊழல் வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ளது. தமிழக காவல்துறை வரலாற்றில் இல்லாத அளவில் முதன்முறையாகத் தமிழக டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் இல்லத்தில் சோதனை நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் காவல்துறை டி.ஜி.பி ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும், இல்லை எனில் அவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். குட்கா வழக்கில் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருந்த நிலையில் தி.மு.க தொடர்ந்த வழக்கில்தான் சி.பி.ஐ சோதனை நடத்தி இருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளியே வரும். 

Sponsored


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தூத்துக்குடியை அழித்த ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா குழுமத்துக்கு 2 இடங்களில் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு ஓர் இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவேரி படுகையைப் பாலைவனமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தி தமிழகத்தின் இயற்கை வளங்களை அழிக்கும் கொடிய நோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்துக்கு எதிரான அரசு மத்திய அரசு என்ற எண்ணத்தை அனைத்து மக்களும் ஏற்க வேண்டும். தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி ஷோபியாவின் கடவு சீட்டை பறிமுதல் செய்ய முயற்சி நடக்கிறது. இதனால் அந்த மாணவியின் உயர்கல்வி பாதிக்கப்படும். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மாநில அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. மாணவியின் எதிர்கால நலனில் மத்திய மாநில அரசுகள் விளையாடுவது வேதனை அளிக்கிறது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார். 
 

Sponsored
Trending Articles

Sponsored