`நெல்லை மாணவர்களின் ஆபத்தான பேருந்துப் பயணம்!’ - வைரலாகும் வீடியோ



நெல்லை மாவட்டம் பங்களா சுரண்டைப் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்களுக்குப் போதுமான பேருந்து வசதி இல்லாததால் தனியார் பேருந்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. 

Sponsored


‘படியில் பயணம் நொடியில் மரணம்’ என அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருப்பதை எல்லோருமே பார்த்திருக்க முடியும். ஆனால், போதுமான பேருந்து வசதி இல்லாத நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் சவாலான பயணங்களை மேற்கொள்ளும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அத்தகைய நிலைமை நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

Sponsored


நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பங்களா சுரண்டை உள்ளது. அங்குள்ள தனியார் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் செல்வது வழக்கம். அதனால் மானவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், காலையில் பள்ளிக்குச் செல்லும் நேரத்திலும் மாலை பள்ளி முடிந்து வீடுகளுக்குத் திரும்பும் நேரத்திலும் அரசுப் பேருந்து வசதி போதுமானதாக இருக்கவில்லை. 

Sponsored


அதனால் அந்த நேரத்தில் வரக்கூடிய தனியார் பேருந்தில் ஏறி பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, கருவந்தா கிராமத்திலிருந்து தென்காசி செல்லக்கூடிய தனியார் பேருந்தில் மாணவர்கள் சவாலான பயணத்தை மேற்கொள்கிறார்கள். பேருந்தின் படிக்கட்டுகள், பின்பகுதியில் இருக்கும் ஏணிகள் மற்றும் சுற்றுப்புற ஜன்னல் கம்பிகளில் மாணவர்கள் தங்களின் புத்தக சுமையுடன் ஈயைப் போல ஒட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள். 

இந்த ஆபத்து மிகுந்த பஸ் பயணக்காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தக் காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இந்தக் காட்சிகளைக் கண்ட பின்னராவது அந்தப் பகுதி மாணவர்கள் பயனடையும் வகையில் போதுமான அளவுக்குப் பேருந்து வசதியை அரசுப் போக்குவரத்துத்துறை செய்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 



Trending Articles

Sponsored