''ஷோபியாவின் எதிர்காலம் கருதி புகாரை தமிழிசை வாபஸ் பெற வேண்டும்!'' - முத்தரசன் வலியுறுத்தல்Sponsored'ஷோபியாவின் எதிர்காலம் கருதி தமிழிசை புகாரை வாபஸ் வாங்க வேண்டும்' என்றார் முத்தரசன் 
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக புதுக்கோட்டை வந்திருந்தார். புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
 
அப்போது பேசிய முத்தரசன், "சட்டவிரோதமாக குட்கா பொருள்களை தமிழகத்தில் விற்பனைசெய்த வழக்கில், குடோன் உரிமையாளர் மாதவ ராவ் அப்ரூவராக மாறியுள்ளதால், இந்தப் புகாரில் சிக்கியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ஆகியோர் தார்மீகப் பொறுப்பேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். பிறகு, விசாரணையை எதிர்கொண்டு, தான் குற்றமற்றவர் என்று நிரூபித்த பிறகு, மீண்டும் தங்களது பதவிகளைத் தொடர வேண்டும்.
 
தனக்கு எதிராகக் கோஷமிட்டதற்காக ஆராய்ச்சி மாணவி ஷோபியாவின் எதிர்காலத்தைக் கெடுக்காதவாறு, பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,மாணவிமீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு, சர்ச்சைக்குரிய வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இது, மத்திய அரசு தமிழகத்துக்குச் செய்யும் பச்சைத் துரோகம். மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில், அவர் யாருக்காக இத்தகைய செயல் செய்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. காவல் துறையினர் உடனடியாக அவர் யாருக்காக இந்த வேலைகளைச் செய்தார் என்கிற தகவலை வெளியிட வேண்டும்" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored