`கொள்ளிடம் மேலணை சீரமைப்புப் பணிகள் இரவுக்குள் முடியும்!’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்



முக்கொம்பு கொள்ளிடம் மேலணை சீரமைப்புப் பணிகள் இன்று இரவுக்குள் முடியும் எனப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

Sponsored


திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணை உடைப்பு சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்புப் பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் கணேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சகிதமாகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு நேற்றும் இன்றும் ஆய்வு செய்தார்.
 
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில் முக்கொம்பு கொள்ளிடம் மேலணை உடைப்பு சரிசெய்யும் பணியை முடுக்கிவிட்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இறுதியாகப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "முக்கொம்பு கொள்ளிடம் மேலணை உடைப்பு சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் 30 அடி தூரம்தான் பணிகள் மீதம் இருக்கின்றன. இரண்டு தினங்களுக்கு முன்பே உடைப்பு சரிசெய்யும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்த்தோம். தண்ணீரின் வேகமும் ஆழமும் அதிகமாக உள்ளதால் உடைந்த இடத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களைக் கொண்டு அடைப்பைச் சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுப்பணித் துறையினரும் மாவட்ட ஆட்சித்தலைவரும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பணியை முடுக்கிவிட்டு விரைவாகப் பணிகளை முடிக்கக் களத்தில் இருந்தே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
 
இந்தப் பணிகளுக்காக கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரிய பாறாங்கற்கள் கொண்டு வரப்படுகிறது. தமிழக முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் என்னிடம் கொள்ளிடம் மேலணை சீரமைப்புப் பணியின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். நேற்றைய தினம் நான் சென்னை சென்றபோதும்கூட தமிழ்நாடு முதலமைச்சர் மதகு உடைப்பு சரிசெய்யும் பணி எப்போது நிறைவடையும் என்று கேட்டறிந்தார். இன்று இரவுக்குள் உடைப்பு சரிசெய்யும் பணி நிறைவடையும். காவிரியில் வழக்கம்போல் விவசாயத்துகுக் கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்ல அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது" என்றார்.
 

Sponsored




Trending Articles

Sponsored