`என்ன சொன்னார் மாதவராவ்?' - மூன்று பேருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாக்குமூலம்Sponsoredகுட்கா வழக்கில் கைதான மாதவராவ், அப்ரூவராக மாறிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சி.பி.ஐ அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், மூன்று பேருக்கு அதிகளவில் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் குட்கா வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் குட்கா வழக்கில் தொடர்புடையவர்கள் திணறிவருகின்றனர். குட்கா நிறுவன உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர், சீனிவாசராவ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்குமார், மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் ஆகியோர் சி.பி.ஐ அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  முன்னதாக 5 பேரிடமும் தனித்தனியாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் மாதவராவிடம் மட்டும் மூன்று மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடந்துள்ளது. அப்போது அவர் கூறியதை வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர். அதன்அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கையில் அதிகாரிகள் களமிறங்க உள்ளனர். 

Sponsored


`மாதவராவ் அப்படியென்ன சொன்னார்?' என அதிகாரிகள் வட்டத்தில் விசாரித்தோம். 

Sponsored


`` இந்த வழக்கின் துருப்புச் சீட்டே மாதவராவ் எழுதிய அந்த டைரிதான். அந்த டைரியில் லஞ்சம் கொடுக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் தொகை எவ்வளவு எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினோம். செங்குன்றத்தில் மாதவராவின் குட்கா குடோன் உள்ளது. இதனால் அந்தச் சரக காவல் மாவட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள் முதல் தமிழக காவல்துறையில் பணியாற்றிய உயரதிகாரிகள் வரையிலும் குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். குட்கா நிறுவன பங்குதாரர்களிடமிருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சமாக அதிகாரிகள் பெற்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அந்தப்பணத்தை அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்றுதான் விசாரணை நடந்துவருகிறது.

செங்குன்றம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய சம்பத் குமார், தற்போது தூத்துக்குடி மாவட்டம் சிப்காட்டில் பணியாற்றுகிறார். அவரது வீடு ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ளது. அந்த வீட்டில் சோதனை நடத்தினோம். சோதனைக்குப்பிறகு அந்த வீட்டுக்கு சீல் வைத்துள்ளோம். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சம்பத்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இன்ஸ்பெக்டரைத் தொடர்ந்து இரண்டு உதவி கமிஷனர்கள் அந்தக் காலகட்டத்தில் பணியாற்றியுள்ளனர். அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய சொத்துவிவரங்களையும் சேகரித்துள்ளோம். தேவைப்பட்டால் உதவி கமிஷனர்களிடமும் விசாரணை நடத்துவோம். அந்தச் சமயத்தில் பணியாற்றிய துணை கமிஷனர்களும் எங்களுடைய சந்தேக வளையத்தில் இருக்கின்றனர். 

நேரிடையாகவும் தரகர்கள் மூலமாகவும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் மாதவராவ். தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்ட மாதவராவ், ' அப்ரூவராகவும் தயார்' என்றும் எங்களிடம் தெரிவித்துள்ளார். கடைசியாக யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுத்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டதற்கு மூன்று பேருக்குத்தான் லட்சக்கணக்கில் பணம் கொடுத்திருப்பதாக அவர் கூறினார். அதைப் பற்றி ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். மாதவராவ் குறிப்பிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தவுள்ளோம். அதற்கான சம்மனும் அவர்களுக்கு விரைவில் அனுப்பப்படும். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மூன்று பேரையும் கைதுசெய்வோம்" என்றனர்.

'யார் அந்த மூன்று பேர்?' என்று சி.பி.ஐ உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, `இன்று அல்லது நாளை அவர்களின் முழு விவரம் உங்களுக்கே தெரியும். அதில் ஒருவர் காவல்துறையில் முக்கியப் பதவியில் இருக்கிறார். இன்னொருவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி. மற்றொருவர் ஆளுங்கட்சியில் முக்கிய பதவியில் இருக்கிறார்' என்றார் பெயர் குறிப்பிடாமல்.Trending Articles

Sponsored