``அடுத்து திரைக்காவியம் உறவுகளே..!" சினிமாவில் சீமான்



அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கிவரும் சீமான், தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

Sponsored



சமீப காலமாகவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் கருத்துகள், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறிவிடுகிறது. இந்த நிலையில், சினிமாவுக்கு சற்றே ஓய்வு கொடுத்திருந்த சீமான், மீண்டும் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த சீமான் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், குட்கா விவகாரம், அழகிரியின் அமைதிப் பேரணி உள்ளிட்டவை பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார். 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்துப் பேசிய சீமான், `பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் ஒப்புதலுடன் மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் தமிழக அரசு காலதாமதம் செய்யாமல் சட்டசபையைக் கூட்டி அனைத்துக் கட்சி ஒப்புதலுடன் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ஆளுநருக்கும் பரிந்துரைக்க வேண்டும். ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக கூறும் தற்போதைய அ.தி.மு.க அரசு, இதை உடனடியாக செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்’ என்றார். 

Sponsored



 

Sponsored


மு.க.அழகிரியின் அமைதிப் பேரணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த சீமான்,  `அமைதிப் பேரணி நடத்தியதன் மூலம் அழகிரி இப்போது மன நிறைவை அடைந்துகொள்ளலாம். இது தி.மு.க-வில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே பேசி தன் இடத்தைத் தக்க வைத்திருக்க வேண்டும். கருணாநிதி இருக்கும்போதே அழகிரி நீக்கப்பட்டதால் அழகிரிக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று தி.மு.க-வின் தொண்டர்களும் சொல்வார்கள். அழகிரியுடன் சென்றவர்கள் கட்சியில் இல்லாதவர்களாகதான் இருப்பார்கள்’ என்றார்.

பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த சீமான்  `நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு படம் இயக்க உள்ளேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன்’  என்றார். 



Trending Articles

Sponsored