`என்னால தாங்கிக்கவே முடியலை' - அவமானத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட வாலிபர்



Sponsored



ஈரோட்டில் விசாரணைக்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை, எஸ்.ஐ ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கி, அவமானப்படுத்தியதால் மன உளைச்சலில் அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sponsored


ஈரோடு பி.பி.அக்ரஹாரம், ஹனிபா வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (18). இவர் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஈரோடு கனிராவுத்தர் குளம் அருகே ஹோண்டா ஆக்டிவா டியோ பைக்கில் வந்திருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த கருங்கல்பாளையம் எஸ்.ஐ சத்தியசீலன் அருண்குமார் ஓட்டிவந்த பைக்கை நிறுத்தச் சொல்லி வழி மறித்திருக்கிறார். போலீஸாரைப் பார்த்து பதறிப்போன அருண்குமார், வண்டியை நிறுத்தாமல் தப்பித்துச் சென்றிருக்கிறார். இதனால் கடுப்பான எஸ்.ஐ, அருண்குமாரின் பைக் நம்பரை வைத்து, வீட்டினுடைய முகவரியைக் கண்டுபிடுத்திருக்கிறார். இரவு 8 மணியளவில் போலீஸ் ஒருவரை அனுப்பி அருண்குமாரை ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்.

Sponsored


பெற்றோருடன் கருங்கல்பாளையம் ஸ்டேஷனுக்குச் சென்ற அருண்குமாரை எஸ்.ஐ சத்தியசீலன் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். `வண்டியை நிறுத்துடான்னு சொன்னா, நிறுத்தாம தெனாவெட்டா போற!' எனப் பெற்றோர் முன்னிலையிலேயே அடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். `இனி எங்க பையன் அப்படி செய்ய மாட்டான். அவனை மன்னிச்சிடுங்க!' எனப் பெற்றோர் கெஞ்சி கேட்ட பின்னரே, அருண்குமாரை விட்டிருக்கின்றனர். வீட்டுக்கு வந்த அருண்குமார் அவமானத்தால் இரவு முழுவதும் தூங்காமல் அழுதபடியே இருந்திருக்கிறார். இந்தநிலையில், விடிந்ததும் வேலைக்குச் செல்லாமல், பெற்றோர் முன்னிலையிலேயே அடித்து அவமானப்படுத்தி விட்டார்களே என்ற நினைப்பிலேயே மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

எஸ்.ஐ சத்தியசீலன் தாக்கி, அவமானப்படுத்தியதால்தான் அருண்குமார் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்று காலை ஈரோடு எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எஸ்.ஐ சத்தியசீலனை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து இறந்துபோன அருண்குமாரின் நண்பர்

அபு என்பவரிடம் பேசினோம். "அவன் சாகுறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடி வரை என்கிட்ட பேசிக்கிட்டுதான் இருந்தான். 'என்னோட அம்மா, அப்பாவை ஸ்டேஷன் படி ஏற வச்சி கஷ்டப்படுத்திட்டேன். அவங்க கண் முன்னாடியே என்னை அடிச்சி அவமானப்படுத்திட்டாங்க. அதை என்னால தாங்கிக்கவே முடியலை' என வருத்தப்பட்டு பேசினான். எல்லாம் சரியாகிடும் கவலைப்படாதடான்னு ஆறுதல் சொன்னேன். 'முதுகெல்லாம் ஒரே வலியா இருக்கு. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்'ன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனவன் தூக்குல தொங்கிட்டான்" எனக் கலங்கினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நிற்காமல் சென்ற பைக்கைத் துரத்தி வந்த போலீஸ் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் உஷா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பைக்கில் நிற்காமல் சென்ற இளைஞரின் விலாசத்தைக் கண்டுபிடுத்து அவரை விசாரணைக்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து எஸ்.ஐ அடித்து அவமானப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 



Trending Articles

Sponsored