`1000 மாணவர்கள்; 3,100 ஆசிரியர்கள்'- செங்கோட்டையனின் இந்த ஆண்டு நீட் சபதம்!



Sponsored



``கடந்த ஆண்டு  நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 24 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்'' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து மாணவ - மாணவியர்களிடம் சேகரிக்கப்பட்ட 1.62 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை கேரளாவுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, கொடியசைத்து லாரிகளை கேரளாவுக்கு அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ’’தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஈரோட்டில் இருந்து 2.6 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தற்போது, நெல்லையிலிருந்து 1.62 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை 22 லாரிகள்மூலம் அனுப்பிவைத்துள்ளோம். கேரள மக்களுக்கு உதவிசெய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது. 

Sponsored


நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்க உள்ளன. விடுமுறை நாள்களில் மூன்று மணி நேரம் இந்தப் பயிற்சி நடத்தப்படும். பள்ளி முடிந்து மாலை நேரங்களிலும் பயிற்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட்டில் இருந்து விலக்கு கோரும் வழக்கு நிலுவையில் இருந்ததால், 3 மாதம் மட்டுமே பயிற்சி அளிக்க முடிந்தது. அதனால், அரசுப் பள்ளிகளில் இருந்து 24 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேர முடிந்தது. இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் பயிலும் மாணவர்கள் குறைந்தபட்சம் 1000 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வகையில் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 3,100 ஆசிரியர்கள் பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு எழுத ஆயிரம் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 

Sponsored


தமிழக மாணவர்களுக்கு உள்ளூரிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். 11-ம் வகுப்பு பாடத் திட்டம் சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் புத்தகத் தட்டுப்பாடு எதுவும் இல்லை. மாணவர்களின் ஆங்கிலப் புலமையை அதிகரிக்கும் வகையில் பள்ளிகளில்  ஆங்கிலக் கல்விக்கு ஒரு வகுப்பு மட்டுமே இருந்த நிலையில், ஆங்கில மீடிய வகுப்புகள் இரண்டாக உயர்த்தப்படும். அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த கூடுதல் வகுப்புகள் செயல்படத் தொடங்கும்’’ என்று தெரிவித்தார். 



Trending Articles

Sponsored