`பாடத்தில் சந்தேகம் கேட்டதால் அவமானப்படுத்தினர்' - 4 ஆசிரியர்களைக் காரணம் காட்டி உயிரைவிட்ட மாணவர்!Sponsoredவேலூரில், 11-ம் வகுப்பு மாணவனின் தற்கொலைக்குக் காரணமாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி, மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

வேலூரை அடுத்த பொய்கையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்த, அதே பகுதியைச் சேர்ந்த அருண் பிரஷாத் என்கிற மாணவன், கடந்த 3-ம் தேதி, அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் என்ன என்பதுகுறித்து பெற்றோருக்குத் தெரியாமல் குழம்பிப்போய் இருந்துள்ளனர்.

Sponsored


இந்த நிலையில், நேற்று மாலை மாணவன் அருண் பிரஷாந்தின் புத்தகப்பையை பெற்றோர் சுத்தம் செய்யும்போது, அதில் மாணவன் தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதிவைத்துள்ளதாக ஒரு கடிதத்தைக் கைப்பற்றியுள்ளனர். அதில், "ஆசிரியர்கள் எடுக்கும் பாட முறை தனக்குப் புரியவில்லை என்றும், 'நீங்கள் நடத்துவது புரியவில்லை' என்று சொன்னாலும், பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டுக் கேட்டாலும் திட்டுகின்றனர். அதேபோல, இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் என்னை அவமானப்படுத்தும் விதமாக அவதூறாகப் பேசுகின்றனர். இதனால் நான்  மிகவும் மனமுடைந்துபோய் தற்கொலை செய்துகொள்கிறேன்.

Sponsored


இதற்குக் காரணம் கணித ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, இன்று அந்தக் கடிதத்துடன் பள்ளிக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பள்ளி வளாகத்தில் இருந்த கணித ஆசிரியர் கண்ணப்பனை உயிரிழந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில், ஆசிரியர்  காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், அறிவியல் ஆசிரியர் இருந்த அறையையும் கற்களால் தாக்கினர். இதைத் தொடர்ந்து, தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளித் தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக, இன்று ஒருநாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்திவருகிறார். மாணவன் அருண் பிரஷாந்த் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.Trending Articles

Sponsored