விஜயபாஸ்கருக்குப் பதிலாக மணிகண்டன்? - கோட்டையில் நடக்கும் விவாதம்!Sponsoredகுட்கா விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகளின் வளையத்தில் சிக்கியிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 'விஜயபாஸ்கருக்குப் பதிலாக ராமநாதபுரம் மணிகண்டனை நியமிப்பது தொடர்பான ஆலோசனைகளும் நடந்துவருகின்றன' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி., ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதன் அடுத்தகட்டமாக, விஜயபாஸ்கர், டிஜிபி., ராஜேந்திரன் ஆகியோரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கோட்டை வட்டார அதிகாரி ஒருவர், " தொடர்ச்சியான ரெய்டுகளால் ஆளும்கட்சியின் பெயருக்குத்தான் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர்களில் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டனர்.

Sponsored


இதை அறிந்துகொண்ட விஜயபாஸ்கர், முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். ' அவர் அமைச்சராக இருப்பதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், சுகாதாரத்துறையில் இருக்கக் கூடாது' என்பதுதான் சிபிஐ அதிகாரிகளின் நோக்கம். இதற்குக் காரணம், குட்கா விவகாரத்தில் சுகாதாரத் துறையின்கீழ் வரும் உணவு பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கவேண்டியுள்ளது. 'அவர்கள், விஜயபாஸ்கரை காட்டிக்கொடுக்க மாட்டார்கள்' என்பதுதான் சிபிஐ அதிகாரிகளின் கருத்து. இதை மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பான அழுத்தம் அதிகரித்துக்கொண்டுபோகவே, கொந்தளித்திருக்கிறார் விஜயபாஸ்கர். 'அமைச்சரவையில் இருந்து என்னை நீக்கவே கூடாது' என முதல்வரிடம் விவாதித்திருக்கிறார். 

Sponsored


'சட்டரீதியாக சந்தித்துக்கொள்ளலாம் என்றாலும், தார்மீக அடிப்படையில் குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டு பதவியில் அமரலாமே?' என விஜயபாஸ்கரிடம் நேரடியாகத் தூது சென்றுள்ளனர் சிலர். அதற்கும் அவர் மறுத்துவிட்டார். இருப்பினும், சுகாதாரத்துறையை விட்டு அவரை நீக்க வேண்டும் என்பதில் முதல்வர் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். விஜயபாஸ்கருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான டாக்டர்.மணிகண்டனை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இவர் 13 வருடங்கள் டாக்டராக இருந்தவர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சில காலம் பணியாற்றியவர். பிறகு, மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்ற நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மணிகண்டன் நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில், சுகாதாரத் துறைக்கு அமைச்சராக வேண்டும் என மணிகண்டன்  முயன்று வந்தார். விஜயபாஸ்கரும் மணிகண்டனும் ஒரே ஆண்டில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் என்றாலும், விஜயபாஸ்கரைவிட தனக்கு கூடுதல் தகுதி இருக்கிறது என சசிகலா மூலம் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால், அவருக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்படவில்லை. இப்போது, குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் சிக்கியுள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் பதவியைத் தனக்கு ஒதுக்க வேண்டும் என மணிகண்டன் மீண்டும் முயன்றுவருகிறார். தவிர, விஜயபாஸ்கரின் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கிறார். எனவே, மணிகண்டனுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி கிடைக்கலாம்" என்றார் விரிவாக. Trending Articles

Sponsored