முதலமைச்சர் வருகையின்போது போராடிய 8 மாணவர்கள் கைது!Sponsoredசென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களைப் போலீஸார் பிடித்துவைத்துள்ளனர். 

சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதன் 160-ம் ஆண்டு விழா, இன்று பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக இன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி வந்திருந்தார். முன்னதாக, பல்கலைக்கழகத்தில் குடிநீர், கழிப்பிட வசதிகள் மோசமாக இருக்கும்போது இவ்விழா தேவையா எனக் கேட்டு, நுழைவுவாயில் அருகில் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர். 

Sponsored


Sponsored


அறிவித்தபடி, முதலமைச்சர் வருவதற்கு முன்னதாக, பல்கலைக்கழக நுழைவாயிலின் முன்பாகத் திரண்ட அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலமைச்சர் விழாவையொட்டி வளாகத்துக்குள் இருந்த போலீஸார், அவர்களைத் தடுக்க முற்பட்டனர். பின்னர் அவர்களைப் பிடித்துச் சென்று அண்ணா சதுக்கம் போலீஸ்நிலையத்தில் வைத்திருந்தனர். மாலை 6 மணிவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. 

அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்தின் சார்பில் வழக்குரைஞர்கள், போலீஸ் நிலையத்தில் சென்று விவரம் அறியமுற்பட்டபோது, அவர்களுக்கு போலீஸார் உரிய தகவல் அளிக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.  

பிரச்னை குறித்து மாணவர்கள் தரப்பில் கேட்டதற்கு, “மாணவர்களாகிய நாங்கள் பெரும்பாலும் தொலைதூரத்திலிருந்து வருகிறோம். கேன்டீன் வசதி சரிவர இல்லை. இதைச் சரிசெய்யுமாறு துணைவேந்தரிடம் கடிதம் கொடுத்தோம். `இது ஆடி மாத்ம்; ஆவணி மாதத்தில் கேன்டீன் திறந்துவிடுவோம்’ என்று பொறுப்பற்ற தன்மையில் பதிலளிக்கிறார். மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தமாக இல்லை. ஆனால், பல்கலைக்கழக முக்கிய நிர்வாகிகளுக்கு சுத்தமான ‘மினரல் வாட்டர்', அரசாங்க செலவில் வழங்கப்படுகிறது. கழிப்பிடங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பஞ்சம் இல்லை; ஆனால், தண்ணீர் இல்லை; தாழ்ப்பாள், கதவுகள் முறைப்படி பராமரிக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக, பெண்கள் கழிப்பறையில் சானிட்டரி நாப்கின் மெஷின் இருக்கிறது; அது வேலை செய்வதில்லை. 

பல்கலைக்கழகத்தின் பழம்பெரும் நூலகத்திலுள்ள புத்தகங்கள் கரையான்களுக்கு இரையாகி வருகின்றன. இதைச் சரிசெய்யுமாறு துணைவேந்தரிடம் பல முறை கடிதங்கள் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 160-ம் ஆண்டு கொண்டாட்டத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு அளிக்காமல் கொண்டாட்டங்கள் தேவையா” என்று குமுறுகிறார்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள். Trending Articles

Sponsored