கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்! - தமிழக சிறைத்துறையின் அசத்தல் பிளான்ஆந்திராவைத் தொடர்ந்து தமிழகத்திலும் நன்னடத்தை கைதிகள் மூலம் பெட்ரோல் பங்க் நடத்தும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 

Sponsored


ஆந்திர மாநிலம் ஒங்கோலில் கடந்த ஜூலை மாதம், மாவட்ட சிறை நிர்வாகம் சிறை வளாகம் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றை திறந்து வைத்தது. இது முழுக்க முழுக்க சிறை கைதிகளால் இயக்கப்படும் என்று அறிவித்தனர். நன்னடத்தை அடிப்படையில் சிறைக் கைதிகள் அங்கு பணியமர்த்தப்பட்டனர். சிறைக் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவும் ஆந்திர அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. ஆந்திராவைப் போலவே தமிழகத்திலும் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க் செயல்பாட்டுக்கு வர உள்ளன. 

Sponsored


சென்னை புழல், திருச்சி, கோவை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, வேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் பெட்ரோல் பங்க் திறக்க தமிழக சிறைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான இடம், சான்று போன்ற நடைமுறைகள் ஓரளவுக்கு முடிவடைந்துவிட்டன. இதையடுத்து வேலூர் மத்திய சிறை அருகே பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்துமுடிந்தது. முழுக்க முழுக்க சிறைக்கைதிகளால் இயக்கப்பட உள்ள இந்தப் பெட்ரோல் பங்க், வரும் ஜனவரி மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்திலேயே ஏ.டி.எம் மையம், ஆவின் பூத், சின்னச் சின்ன கடைகள் போன்றவை அமைக்கவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே சிறைக் கைதிகள் மூலம் பேக்கரி, சீருடைத் தயாரிப்பு, நாப்கின் தயாரிப்பு போன்ற தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைதிகளின் வாழ்க்கை முறையை மேம்படுத்தத் தமிழக சிறைத்துறை எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை எனப் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்! Trending Articles

Sponsored