"பிளாஸ்டிக் ரெய்டு வர்றாங்க... காசு கொடுங்க" - வியாபாரிகளிடம் நூதன வசூல் வேட்டை!சென்னை வேளச்சேரி பகுதியில், சுகாதாரத்துறை துணை ஆய்வாளருக்குத் தெரியாமல், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சிறு வியாபாரிகளிடம் பணம் வசூல்செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று காலை, வேளச்சேரியில் உள்ள 178 வார்டு பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் இந்த வசூல் வேட்டை நடந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் வேளச்சேரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு பேர், இருசக்கர வாகனத்தில் வேகவேகமாக வந்திறங்கினர். வியாபாரிகள் அதிகம் உள்ள பகுதியில் வண்டியை நிறுத்திய பிறகு, இருவரில் ஒருவர் வண்டியின் அருகே நிற்க, மற்றொருவர் கடைக்குள் சென்று, அங்கிருந்த கடைக்காரரிடம் “இன்று சுகாதாரத் துறை உதவி ஆய்வாளர் திடீர் சோதனைக்கு வருவார். கடைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை எல்லாம் மறைத்துவைத்துவிடு” என்று கூறியிருக்கிறார். மேலும் கடைக்காரரிடம், "உங்களை அலெர்ட் செய்திருக்கிறோம். அதற்கான பணம் வேண்டும்" எனக் கேட்கவே, முகச்சுளிவோடு 50 ரூபாயை நீட்டினார் கடைக்காரர். அவர் கொடுத்த 50 ரூபாயை வாங்க மறுத்த ஊழியர், "100 ரூபாய் கொடு" என வாங்கிச் சென்றுவிட்டார். நாம் விசாரித்தபோது, இதைப் போலவே அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளில் வசூல் வேட்டை நடத்தியது தெரியவந்தது.

Sponsored


இதுதொடர்பாக ஒரு கடைக்காரரிடம் பேசினோம், “ 'சுகாதாரத்துறை ஆபீஸர் இப்போ அரைமணி நேரத்துக்குள்ள வர்றாரு. எங்களுக்கு 50, 100 ரூபாய் கொடுங்க. நாங்க எதையும் கண்டுக்க மாட்டோம்'னு சொன்னாங்க. ஏற்கெனவே, சுகாதாரத்துறையினர் பக்கத்து ஏரியாவில் சோதனை நடத்தியிருக்காங்க. நமக்கு எதுக்கு வம்புன்னுதான் அவங்க கேட்ட காசை கொடுத்துட்டேன்" என்றார். "இவங்க மாநகராட்சி ஊழியர்கள் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று கேட்டதற்கு, "இந்த ஏரியா முழுக்க சுத்தம் பண்றப்போ, அதிகாரிங்ககூட வர்றப்போ இவங்களைப் பார்த்திருக்கிறேன்“ என்றார்.

Sponsored


Sponsored


இந்நிலையில், மாநகராட்சிப் பணிகளைக் கவனித்துவரும் வேளச்சேரி அலுவலகத்துக்கு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கச் சென்றோம். அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரி வைரம் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர் விடுப்பில் சென்றிருப்பது தெரியவந்தது. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, "அப்படி எந்தவிதமான ரெய்டும் நடக்கவில்லையே. எனக்குத் தெரியாமல் ரெய்டு நடக்க வாய்ப்பே இல்லை" என மறுத்தார். "உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்தான் 'ரெய்டு நடத்தப்போறோம்' எனக் காரணம் காட்டி பணம் வசூல் செய்துள்ளனர். இதை அங்குள்ள வியாபாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்றோம். ”நான் ஒருவாரம் விடுமுறையில் இருக்கிறேன். எனக்குத் தெரியாமல் ரெய்டு நடக்காது. வந்தவர்கள் யாரென நான் விசாரணை செய்கிறேன்” என்று பதிலளித்தார்.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரின் இதுபோன்ற நடவடிக்கைகளால், சிறு வியாபாரிகள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். கடந்த  ஜூன் மாதம் 5-ம் தேதி அன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் 1986-ன்படி தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களை முழுவதுமாகத் தடைசெய்யப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் முன்னரே இதுபோன்று சட்டவிரோத முறையில் பண வசூலில் ஈடுபடும் நிகழ்வுகள் வெளிவரத்தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் உடனடியாகக் கவனம்செலுத்த வேண்டியது அவசியம்.Trending Articles

Sponsored