``திருமாவளவன் ஆட்களைப் பார்த்தீர்களா?" கோகுல்ராஜ் அண்ணனை கேள்விகளால் குழப்பிய வழக்கறிஞர்!



சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் 4-ம் தேதி கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவுசெய்திருந்த நிலையில், கடந்த 6-ம் தேதி அவரிடம் யுவராஜ் வழக்கறிஞர் ஜி.கே என்ற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜு குறுக்கு விசாரணையை மேற்கொண்டார்.

Sponsored


யுவராஜ் வழக்கறிஞர் குறுக்கீடு செய்ததும்... அதற்கு கலைச்செல்வன் பதில் அளித்ததும் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது...

Sponsored


வழக்கறிஞர் ஜி.கே : "நீங்கள் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்போது யார் இருந்தாங்க?"

Sponsored


கலைச்செல்வன்: "எஸ்.ஐ மேடம் இருந்தாங்க."

வழக்கறிஞர் ஜி.கே : "23.6.2015-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் உங்களை யார் விசாரித்தார்?"

கலைச்செல்வன்: "27-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் எஸ்.ஐ மேடம் விசாரித்தார்கள்."

வழக்கறிஞர் ஜி.கே : "அப்போது, சடலம் எங்கிருந்தது?"

கலைச்செல்வன்: "ஜி.ஹெச்சில் பிண அறையில் இருந்தது. சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸில் இருந்து ஏ.டி.எஸ்.பி. 24.9.2015-ம் தேதி எங்கள் வீட்டுக்கு வந்து விசாரித்தார்கள்."

வழக்கறிஞர் ஜி.கே : "நீங்கள் குடியிருந்த வீட்டின் விலாசம் சரியாகக் கொடுத்தீர்களா?"

கலைச்செல்வன்: "கொடுத்தோம்."

வழக்கறிஞர் ஜி.கே : "அந்த வீட்டில் எந்த ஆண்டிலிருந்து குடியிருக்கிறீர்கள்."

கலைச்செல்வன்: "2009-ல் இருந்து ஓமலூர் சாஸ்தா நகர் வீட்டில் குடியிருக்கிறோம்."  

வழக்கறிஞர் ஜி.கே : "போலீஸார் நான்கு முறை விசாரித்தபோது அதைச் சொன்னீர்களா?"

கலைச்செல்வன்: "ஏற்கெனவே இருந்த வீட்டில்... என்று ஏதோ பேசத் தொடங்கினார்... (வழக்கறிஞர் அவரை இடைமறித்து, `` `ஆம்... இல்லை' என்று மட்டும் சொல்ல வேண்டும்'' என்றார். பதிலுக்கு நீதிபதி கே.ஹெச்.இளவழகனும், ``கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்'' என்றார்.) ஆமாம், சொல்லி இருக்கிறேன்."

வழக்கறிஞர் ஜி.கே : "யாரோ தயாரித்து கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தைத்தான் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்?"

கலைச்செல்வன்: "இல்லை... எனக்கு யாரும் சொல்லித் தரவில்லை."

வழக்கறிஞர் ஜி.கே : "உங்கள் தம்பி தனியாக வாழ்ந்தாரா?"

கலைச்செல்வன்: "இல்லை."

வழக்கறிஞர் ஜி.கே : "காலையில் கல்லூரி வாகனத்தில் வந்தவர் மாலை கல்லூரி வாகனத்தில் வரவில்லை என்று கோகுல்ராஜ் நண்பர்கள் சொன்னதை மூன்று முறை விசாரிக்கும்போது சொன்னீர்களா?"

கலைச்செல்வன்: "சொன்னேன்."

வழக்கறிஞர் ஜி.கே : "அவர்கள் வீட்டுக்கு நீங்கள் போய்க் கேட்டீர்களா? இல்லை, அவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து சொன்னார்களா?"

கலைச்செல்வன்: "அவர்கள் வீட்டுக்குப் போய்க் கேட்டேன்."

வழக்கறிஞர் ஜி.கே : "அவர்களின் பெயர்கள் என்ன?"

கலைச்செல்வன்: "தினேஷ், விக்கி, வைத்தியலிங்கம், குமார்."

வழக்கறிஞர் ஜி.கே : "உங்கள் தம்பியைத் தேடும்போது அவர்களும் இருந்தார்களா, அதன் பிறகும் இருந்தார்களா?"

கலைச்செல்வன்: "இருந்தார்கள்."

வழக்கறிஞர் ஜி.கே : "அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்?"

கலைச்செல்வன்: "ஓமலூர்."

வழக்கறிஞர் ஜி.கே : "திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது அவர்கள் வந்தார்களா?"

கலைச்செல்வன்: "வந்தார்கள். என்கூட இல்லை."

வழக்கறிஞர் ஜி.கே.: "காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்) கட்சிக்காரர்கள் வந்தார்களா?"

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: புகார் கொடுப்பதற்கு முன்போ, பின்போ திருமாவளவனுடைய ஆட்களைப் பார்த்தீர்களா?"

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "புகார் கொடுத்தபோது இன்ஸ்பெக்டர் இருந்தாரா?"

கலைச்செல்வன்: "எஸ்.ஐ-தான் இருந்தார்".

வழக்கறிஞர் ஜி.கே : "அவர், உங்களிடம் விசாரித்தாரா?"

கலைச்செல்வன்: "விசாரித்து புகார் வாங்கிக்கொண்டார்."

வழக்கறிஞர் ஜி.கே: "என்ன செய்யலாம் என்று உங்களிடம் கேட்டாரா?"

கலைச்செல்வன்: "நினைவு இல்லை."

வழக்கறிஞர் ஜி.கே : "புகார் கொடுத்துவிட்டு எங்கே இருந்தீர்கள்?"

கலைச்செல்வன்: "கடையில் இருந்தோம்."

வழக்கறிஞர் ஜி.கே : "திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டுக்கும் காவல் நிலையத்துக்கும் எவ்வளவு தூரம்?"

கலைச்செல்வன்:  "இரண்டு கிலோ மீட்டர்."

வழக்கறிஞர் ஜி.கே : "உங்கள் சகோதரர் ஏப்ரல் மாதமே கே.எஸ்.ஆர். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டாரா?"

கலைச்செல்வன்: "ஆமாம்."

வழக்கறிஞர் ஜி.கே.: "கோகுல்ராஜுக்கு ஓமலூரைத் தவிர, வேறு ஊரில் நண்பர்கள் இருக்கிறார்களா?"

கலைச்செல்வன்: "தெரியவில்லை. கல்லூரி நண்பர்கள் இருக்கிறார்கள்".

வழக்கறிஞர் ஜி.கே.: "23-ம் தேதி காலை 10.30 மணிக்கு, உங்கள் பர்சில் இருந்த 100 ரூபாய் பணத்தைக் காணவில்லை என்று உங்கள் தாயாரிடம் கேட்டீர்களா?"

கலைச்செல்வன்: "ஆமாம். கேட்டேன்."

வழக்கறிஞர் ஜி.கே.: " 'கோகுல்ராஜ் பணம் எதுவும் கேட்டாரா' என்று உங்க தாயாரிடம் கேட்டீர்களா?"

கலைச்செல்வன்: "அப்படிக் கேட்கவில்லை."

வழக்கறிஞர் ஜி.கே : "இதுபற்றி போலீஸார் தரப்பில் நான்கு முறை விசாரித்தபோது சொன்னீர்களா?"

கலைச்செல்வன்: "நான்கு முறை இல்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒருமுறை சொன்னேன்."  

வழக்கறிஞர் ஜி.கே : "கோகுல்ராஜ் உங்களிடம் பணம் கேட்டாரா?"

கலைச்செல்வன்: "இல்லை."

யுவராஜ் வழக்கறிஞர், நீதிபதியைப் பார்த்து குரல் உயர்த்தி, ''கோகுல்ராஜ் தனியாகக் கஷ்டத்தில் இருந்தார். அவர் செலவுக்கு நீங்களும், உங்கள் தாயாரும் பணம் கொடுக்கவில்லை. அதனால் அவர் பலரிடமும் பணம் வாங்கி நெருக்கடியில் இருந்தார்" என்கிறேன்?

கலைச்செல்வன்: "தவறு."

வழக்கறிஞர் ஜி.கே : "23.6.2015 அன்று காலை 10.10 மணிக்கு, என் தாயார் கோகுல்ராஜுக்கு போன் செய்தார். ஆனால், கோகுல்ராஜ் போனை எடுக்கவில்லை. 5 நிமிடம் கழித்து வேறு ஒரு நம்பரிலிருந்து என் தாயாருக்கு கோகுல்ராஜ் பேசினார். என் தாயார், `எங்கே இருக்கிறாய்' என்று கேட்டதற்கு கோகுல்ராஜ் வெளியில் இருப்பதாகவும், 'எப்போது வருவாய்' என்று கேட்டதற்கு உடனே வந்துவிடுவதாகவும் தாயாரிடம் சொன்னார் என்பதை போலீஸார் நான்கு முறை விசாரிக்கும் போதும் சொல்லி இருக்கிறீர்களா?"

கலைச்செல்வன்: "சொல்லி இருக்கிறோம்."

வழக்கறிஞர் ஜி.கே : "உங்கள் தாயாருக்கு கோகுல்ராஜ் போன் பண்ணியதாகச் சொல்கிறீர்கள். அந்தச் சிம் கார்டு உங்கள் தாயாரின் பெயரில்  உள்ளதா?"

கலைச்செல்வன்: "இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. எங்கள் அம்மாவிடம் இரண்டு நம்பர்கள் இருக்கின்றன. என்னிடமும், தம்பியிடமும் இரண்டு நெம்பர்கள் இருந்தன. (இடையில் குறுக்கீடு செய்த வழக்கறிஞர், 'ஆம், இல்லை என்று மட்டும் சொல்லு' என்றார்).

வழக்கறிஞர் ஜி.கே : "உங்கள் தம்பி எந்த நம்பரில் இருந்து பேசினார் என்று தெரியுமா?"

கலைச்செல்வன்: "தெரியாது."

வழக்கறிஞர் ஜி.கே : "உங்கள் தம்பியின் செல்போன் நம்பர் தெரியுமா, அது என்ன நம்பர்?"

கலைச்செல்வன்: (நம்பரை சொன்னார்)

வழக்கறிஞர் ஜி.கே : "23.6.2015 அன்று கோகுல்ராஜுக்குப் போன் செய்துகொண்டே இருந்தோம். ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. 23-ம் தேதி இரவு 8.45 மணிக்கு போன் ரிங் ஆனது. என் தாயார் பேசினார். அவரிடம், வேறு ஒருவர் பேசினார். `கோகுல்ராஜிடம் போனைக் கொடுங்கள்' என்றதும் அவர் கட் செய்துவிட்டார் என்பதை நான்கு முறை விசாரித்தபோதும் சொல்லி இருக்கிறீர்களா?

கலைச்செல்வன்: "சொல்லி இருக்கிறோம்."

வழக்கறிஞர் ஜி.கே : "23-ம் தேதி இரவு கோகுல்ராஜ் வீட்டுக்கு வராததால், அவர் பற்றி விசாரித்தபோது தம்பி காணாமல் போய்விட்டார் என்ற எண்ணம் தோன்றியதா?"

கலைச்செல்வன்:  "தோன்றியது..." என்று ஏதோ சொல்ல நினைத்தார். (இடையில் குறுக்கிட்ட வழக்கறிஞர், ``கோகுல்ராஜ் பற்றி தகவல் இல்லாதபோது அவர் காணாமல் போய்விட்டார் என்று தோன்றியதா... இல்லையா?").

கலைச்செல்வன்: (பேச முடியாமல் எச்சில் விழுங்கியவாறு...) "ஆமாம் தோன்றியது."

வழக்கறிஞர் ஜி.கே : "ஒருவர் காணாமல் போனால் உடனே காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தோன்றவில்லையா... போன் மூலமாகக்கூடச் சொல்லலாம் தெரியுமா... தெரியாதா?"

கலைச்செல்வன்: "தலையை ஆட்டினார்."

வழக்கறிஞர் ஜி.கே : "காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சி செய்யவில்லையா?"

கலைச்செல்வன்: "அதாவது... போலீஸுக்குப் போகவில்லை. தம்பியைத் தேடிப் பார்த்தோம் (இடைமறித்த வழக்கறிஞர், ``அதுபற்றிப் பேச வேண்டாம். காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க முயற்சி செய்தீர்களா... இல்லையா'' என்பதை மட்டும் சொல்லுங்கள்...) ``முயற்சி செய்யவில்லை. சொந்தக்காரர்கள்  வீடுகளில் தேடிப் பார்த்தோம்."

வழக்கறிஞர் ஜி.கே : "எந்தெந்த ஊர்களில் தேடிப் பார்த்தீர்கள்?"

 கலைச்செல்வன்: "ஜங்ஷனில் உள்ள சித்தி வீடு, என் தம்பியின் நண்பர்கள் வீடு, எங்கள் தாத்தா வசிக்கும் ஊர்களில் விசாரித்தோம்."

வழக்கறிஞர் ஜி.கே : "தாத்தா வீட்டில் யாரிடம் விசாரித்தீர்கள்?"

கலைச்செல்வன்: "மாமாவிடம் விசாரித்தேன்?"

வழக்கறிஞர் ஜி.கே: "மாமா பெயர்கள் என்ன?"

கலைச்செல்வன்: "பாலகிருஷ்ணன், நடேஷன், அன்பழகன்."

வழக்கறிஞர் ஜி.கே.: "அவர்கள் உடனே வீட்டுக்கு வந்துவிட்டார்களா?"

கலைச்செல்வன்: "காலை 5 மணிக்கு வந்தார்கள்".

வவழக்கறிஞர் ஜி.கே.: "காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்வரை உங்கள்கூட இருந்தார்களா?"

கலைச்செல்வன்: "ஆமாம்."

வழக்கறிஞர் ஜி.கே : "24-ம் தேதி உங்கள் தம்பியின் ஃபேஸ்புக் கணக்கைப் பார்க்கும்போது அதில் நண்பர்கள் பெயர், விலாசங்கள் முழுவதும் இருந்ததா?"

கலைச்செல்வன்: "ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் அனைவரும் முழுமையான பெயரும் விலாசமும் கொடுக்க மாட்டார்கள்."

வழக்கறிஞர் ஜி.கே : "நண்பர்களின் பெயர்கள், விலாசங்கள் இருந்ததா... இல்லையா?"

கலைச்செல்வன்: "இல்லை."

வழக்கறிஞர் ஜி.கே : "என்ன படித்திருக்கிறீர்கள்?"

கலைச்செல்வன்: "எலெக்ட்ரிக்கல் சர்க்யூட் கம்யூனிகேஷன்."

வழக்கறிஞர் ஜி.கே.: "பாடத்தில் செல்போன் சர்வீஸ் பாடம் வந்ததா?"

கலைச்செல்வன்: "வரவில்லை."

வழக்கறிஞர் ஜி.கே: "செல்போனில் சர்க்யூட் வருமா... வராதா?"

கலைச்செல்வன்: "வரும்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஃபேஸ்புக் கிரியேட் செய்யும்போது செல்போன் நம்பர், மெயில் ஐ.டி. கேட்கும்தானே?"

கலைச்செல்வன்: "ஆமாம்."

வழக்கறிஞர் ஜி.கே : "24.6.2015 கோகுல்ராஜ் ஃபேஸ்புக் அக்கவுண்டில் இருந்து பாலமுருகனின் நம்பர் எடுத்ததை நான்கு முறை விசாரித்தபோது சொன்னீர்களா?"

கலைச்செல்வன்: "சொல்லி இருக்கிறேன்.".

வழக்கறிஞர் ஜி.கே.: "கார்த்திக்ராஜா தொடர்பு கிடைத்த பிறகுதான் ஸ்வாதி நம்பர் தெரிய வந்ததா?"

கலைச்செல்வன்: "ஆமாம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "கார்த்திக்ராஜாவுக்கு யாருடைய நம்பரில் இருந்து பேசினீர்கள்?"

கலைச்செல்வன்: "என்னுடைய நம்பரில் இருந்து பேசினேன்."

வழக்கறிஞர் ஜி.கே.: "காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது கார்த்திக்ராஜா வந்தாரா?"

கலைச்செல்வன்: "வந்தார்".

வழக்கறிஞர் ஜி.கே.: "கார்த்திக்ராஜா செல்போன் நம்பரைக் காவல் துறையினர் வாங்கிப் பார்த்தார்களா?"

கலைச்செல்வன்: "தெரியவில்லை. ஆனால், விசாரித்தார்கள்".

வழக்கறிஞர் ஜி.கே.: "புகார் கொடுக்கப் போகும்போது சீனிவாசனும் வந்தாரா?"

கலைச்செல்வன்: "சரியாகத் தெரியவில்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "உங்கள் போன் உங்களிடம்தான் இருந்ததா?"

கலைச்செல்வன்: "என் போன் என்னிடம்தான் இருந்தது".

வழக்கறிஞர் ஜி.கே.: "புகார் எழுதும்போது என்னவென்று எழுதினீர்கள்?"

கலைச்செல்வன்: "தெரியவில்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "அப்போது சீனிவாசன் இருந்தாரா?"

கலைச்செல்வன்: "தெரியவில்லை".

வழக்கறிஞர் ஜி.கே: "ஸ்வாதி பேசியதை சீனிவாசன் போனில் ரெக்கார்டு செய்ததைப் புகாரில் சொல்லி இருக்கிறீர்களா?"

கலைச்செல்வன்: "புகாரில் சொல்லவில்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி. விசாரித்தபோது உங்கள் போன் உங்களிடம் இருந்ததா?"

கலைச்செல்வன்: "என்னிடம் இருந்தது".

வழக்கறிஞர் ஜி.கே.: "அவர்களிடம் பேசியபோது இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி-யிடம் சீனிவாசன் செல்போனில் ரெக்கார்டு செய்த விபரத்தைச் சொன்னீர்களா?"

கலைச்செல்வன்: "சொல்லவில்லை".

மதியத்துக்கு மேல்...

வழக்கறிஞர் ஜி.கே.: "எதற்காக ஸ்வாதி பேசியதை ரெக்கார்டு செய்தீர்கள்?"

கலைச்செல்வன்: "ஸ்வாதி முதல் இரண்டு வார்த்தை பேசும்போதே கோகுல்ராஜ் கடத்தப்பட்டு விட்டார் என்பது முன்கூட்டியே தெரிந்ததால் ரெக்கார்டு செய்தோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஆக முதலிலேயே தெரிந்த பிறகுதான் ஸ்வாதிக்குப் போன் செய்தீர்கள்?"

கலைச்செல்வன்: "தலையை ஆட்டிக்கொண்டவாறே `அதாவது...' என்று ஏதோ பேசச் சொல்ல முயற்சித்தார்".

வழக்கறிஞர் ஜி.கே.: " `ஆமாவா... இல்லையா' என்பதை மட்டும் சொல்லுங்கள்".

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "அப்போது மாமா நடேஷன் அங்கு இருந்தாரா?"

கலைச்செல்வன்: "ஆமாம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "உங்கள் மாமா நடேஷன், ஸ்வாதி பேசியதைக் கேட்டாரா?"

கலைச்செல்வன்: "ஆமாம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "மாமா என்ன படித்துள்ளார்?"

கலைச்செல்வன்: (யோசித்து...) "ப்ளஸ் டூ".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஸ்வாதி பேசியதை எவ்வளவு நேரம் ரெக்கார்டு செய்தீர்கள்?"

கலைச்செல்வன்: "நான்கரை நிமிடங்கள்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ரெக்கார்டு பதிவுசெய்த பிறகு நிச்சயம் கோகுல்ராஜ் கடத்தப்பட்டிருப்பது தெரியும்?"

கலைச்செல்வன்: "தெரியும்".

வழக்கறிஞர் ஜி.கே.: "உங்கள் வீட்டில் இருந்தபோதுதானே ஸ்வாதி பேசியதை ரெக்கார்டு செய்தீர்கள்?"

கலைச்செல்வன்: "ஆமாம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஓமலூர் காவல் நிலையத்துக்கும் உங்கள் வீட்டுக்கும் எத்தனை கிலோ மீட்டர்?"

கலைச்செல்வன்: "ஒரு கிலோ மீட்டர்".

வழக்கறிஞர் ஜி.கே.: "புகார் கொடுக்கத் தோன்றியதா?"

கலைச்செல்வன்: " `கடத்தப்பட்டது திருச்செங்கோடு என்பதால், அங்கு புகார் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்' என எல்லோரும் சொன்னதால் திருச்செங்கோட்டில் புகார் கொடுத்தோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "உடனே திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சி செய்தீர்களா?"

கலைச்செல்வன்: "முயற்சி செய்தோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஓமலூர் டு திருச்செங்கோட்டுக்கு எதில் வந்தீர்கள்?"

கலைச்செல்வன்: "நான் பைக்கில் வந்தேன். அம்மாவும், சொந்தக்காரர்களும் இரண்டு ஆம்னி கார்களில் வந்தார்கள்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஓமலூர் காவல் நிலையத்துக்குப் போனீர்களா?"

கலைச்செல்வன்: "நேராக, திருச்செங்கோடு வந்தோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஸ்வாதியை முதலில் அங்குதான் பார்த்தீர்களா?"

கலைச்செல்வன்: "முதலில் அங்குதான் பார்த்தேன்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஸ்வாதியின் முகவரி தெரியுமா?"

கலைச்செல்வன்: "தெரியாது".

வழக்கறிஞர் ஜி.கே.: "பஸ் நிலையத்தில் ஸ்வாதியைப் பார்க்க யார் யாரெல்லாம் போனீர்கள்?"

கலைச்செல்வன்: "நான், அம்மாகூட இரண்டு பேர்".

வழக்கறிஞர் ஜி.கே.: "பஸ் நிலையத்துக்குள் ஆம்னி காரில் போனீர்களா?"

கலைச்செல்வன்: "ஆம்னியைப் பஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு நடந்துபோனோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஸ்வாதி பஸ் நிலையத்துக்கு வந்தது எப்படி?"

கலைச்செல்வன்: "நாங்கள் சொல்லித்தான் வந்தது".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஸ்வாதியைப் பஸ் நிலையத்துக்கு வரச் சொல்லி தகவல் கொடுத்தீர்களா?"

கலைச்செல்வன்: "ஸ்வாதி முதலில் ஈரோடு வருவதாகச் சொன்னார்கள். நாங்கள் திருச்செங்கோடு வரச் சொன்னோம். பிறகு, ஸ்வாதியின் நண்பர் கார்த்திக்ராஜா, `ஸ்வாதி திருச்செங்கோடு வருகிறார்களாம். நீங்கள் அங்கே வாங்க' என்றார்கள்?"

வழக்கறிஞர் ஜி.கே.: "ஸ்வாதி எங்கு குடியிருந்தார் தெரியுமா?"

கலைச்செல்வன்: "தெரியாது. பேசும்போது ஊர் பரமத்திவேலூர் என்று சொன்னார்".

வழக்கறிஞர் ஜி.கே.: "திருச்செங்கோடு பஸ் நிலையத்துக்கு ஸ்வாதியின் தாயார் அல்லது உறவினர்கள் வந்தார்களா?"

கலைச்செல்வன்: "ஸ்வாதியோடுகூடப் படிக்கும் கார்த்திக்ராஜா...".

வழக்கறிஞர் ஜி.கே.: "அதைப்பற்றிப் பேச வேண்டாம். ஸ்வாதி தாயார் அல்லது உறவினர்கள் வந்தார்களா?"

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "கார்த்திக்ராஜாவிடம் ஸ்வாதியைக் கூட்டிவரச் சொன்னீர்களா?"

கலைச்செல்வன்: "நான் சொல்லவில்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஓமலூரில் இருந்து திருச்செங்கோடு கிளம்பும்போது மணி என்ன இருக்கும்?"

கலைச்செல்வன்: "24.6.2015 காலை 10:00 மணி இருக்கும்".

வழக்கறிஞர் ஜி.கே.: "நீதிபதியைப் பார்த்து... அப்படியென்றால், அதிகாலை 5:00 என்று பதிவு செய்யுங்கள்".

கலைச்செல்வன்: (இல்லை... இல்லை என்று தலையாட்டியவாறு), "காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் இருக்கும்".

வழக்கறிஞர் ஜி.கே.: "திருச்செங்கோடு அடைந்தபோது எத்தனை மணி இருக்கும்?"

கலைச்செல்வன்: "சுமார் 11:00 மணி இருக்கும்".

வழக்கறிஞர் ஜி.கே.: "அப்போது திருச்செங்கோடு காவல் நிலையம் எங்கு இருக்கிறது என்று தெரியுமா?"

கலைச்செல்வன்: "தெரியாது".

வழக்கறிஞர் ஜி.கே.: "திருச்செங்கோட்டில் எத்தனை காவல் நிலையம் இருக்கின்றன என்று தெரியுமா?''

கலைச்செல்வன்: "இப்போது இரண்டு இருப்பது தெரியும்".

வழக்கறிஞர் ஜி.கே.: "நீங்கள் வரும் வழியில் காவல் நிலையம் இருந்ததா?"

கலைச்செல்வன்: "நாங்கள் வரும் வழியில் இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஸ்வாதியையும், கார்த்திக்ராஜாவையும் வரச்சொன்னது, `காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காகத்தான்' என்று சொன்னீர்களா?"

கலைச்செல்வன்: "ஆமாம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஸ்வாதியிடமும், கார்த்திக்ராஜாவிடமும் திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு வந்து விடுமாறு சொன்னீர்களா?"

கலைச்செல்வன்: "நாங்கள் அப்படிச் சொல்லவில்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஓமலூரில் இருந்து காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்கத்தான் திருச்செங்கோடு வந்தீர்களா?"

கலைச்செல்வன்: "ஆமாம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "ஓமலூரில் இருந்து வந்தபோதே புகார் எழுதித் தயார் செய்து எடுத்து வந்தீர்களா?"

கலைச்செல்வன்: "அப்படியெல்லாம் இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "புகாரை பஸ் நிலையத்தில் வைத்துதான் எழுதினீர்களா?"

கலைச்செல்வன்: "அங்குள்ள ஏதோ ஒரு கடையில் வைத்து எழுதினோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "உங்கள் தாயார் சொன்னதை வைத்துதான் புகார் மனு எழுதப்பட்டதா?"

கலைச்செல்வன்: "ஸ்வாதி எங்கள் அம்மாவிடம் என்ன சொன்னதோ, அதை வைத்து எங்கள் மாமா நடேஷன் புகாராக எழுதினார்?"

வழக்கறிஞர் ஜி.கே.: "ஒரே நேரத்திலா?"

கலைச்செல்வன்: "இல்லை. ஸ்வாதி எங்கள் அம்மாவிடம் சொன்ன பிறகு எழுதிக் கொடுத்தார்".

வழக்கறிஞர் ஜி.கே.: "புகார் எழுதியபோது சீனிவாசன் இருந்தாரா?"

கலைச்செல்வன்: "தெரியவில்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "புகார் எழுதியபோது சீனிவாசன் போனும், உங்கள் போனும் உங்களிடம் இருந்ததா?"

கலைச்செல்வன்: "என் போன் என்னிடம்தான் இருந்தது".

வழக்கறிஞர் ஜி.கே.: "புகார் எழுதியபோது போனில் பதிவுசெய்து வைத்திருந்த தகவலைப் போட்டுப் பார்த்து எழுதினீர்களா?"

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "போனில் ஸ்வாதி பேசிய தகவல் பதிவு செய்யப்பட்டது குறித்து புகாரில் குறிப்பிடப்பட்டதா?"

கலைச்செல்வன்:  ''இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "எந்தக் கடையில் இருந்து புகார் எழுதப்பட்டது?"

கலைச்செல்வன்: "திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டு அருகே ஏதோ ஒரு கடை முன்பு புகார் எழுதினோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "அப்போது கடை திறந்திருந்ததா?"

கலைச்செல்வன்: "கடை திறந்திருந்தது".

வழக்கறிஞர் ஜி.கே.: "நீங்களாகவே புகார் எழுத முயற்சி செய்தீர்களா?"

கலைச்செல்வன்: "ஸ்வாதி சொன்னதை வைத்து எழுதினோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து காவல் நிலையத்துக்கு எவ்வளவு தூரம்? புகார் எழுதிவிட்டு பஸ் நிலையத்தில் இருந்து காவல் நிலையத்துக்கு எதில் போனீர்கள்?"

கலைச்செல்வன்: "சரியாக எவ்வளவு தூரம் என்று தெரியாது. ஆனால், மினி பஸ்ஸில் போனோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "மினி பஸ்ஸில் எவ்வளவு தூரம் சென்றீர்கள் என்று தெரியுமா?"

கலைச்செல்வன்: "தெரியாது".

வழக்கறிஞர் ஜி.கே.: "டிக்கெட் எடுத்தீர்களா? எந்த இடத்துக்கு டிக்கெட் எடுத்தீர்கள்?"

கலைச்செல்வன்: "டிக்கெட் எடுத்தோம். போலீஸ் ஸ்டேஷன் எனக் கேட்டு டிக்கெட் எடுத்தோம்".

அதையடுத்து வழக்கறிஞர் நீதிபதியைப் பார்த்து, ''21.6.2015 அன்றே கோகுல்ராஜ் காணாமல் போய்விட்டார். அது, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது, மறைக்கப்பட்டிருப்பதாக நான் சொல்கிறேன்'' என்றார். (அப்போது கலைச்செல்வன் நீதிபதியைப் பார்த்து தலையாட்டி இல்லை... இல்லை... என்று சொல்ல, அதற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார்.) அதன் பிறகு வழக்கறிஞ்சர், ''21ம் தேதி நடந்த இச்சம்பவத்தை மறைத்துதான் திருசெங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்றவர், ``இது சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று போலீஸ்காரர்கள் உங்களுக்குச் சம்மன் கொடுத்தார்களா... இல்லையா?"

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "21-ம் தேதி காவல் நிலையத்தில் வழக்குக்கு விரோதமாகப் புனையப்பட்டுள்ளது".

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "23.6.2015 அன்று உங்கள் தம்பி காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தீர்களா?"

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "24.6.2015 அன்று காலையிலேயே திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு நீங்களும், ஸ்வாதியும் போனீர்களா?"

கலைச்செல்வன்: "காலையில் இல்லை. மதியம் சென்றோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "போலீஸ்காரர்கள் எப்போதாவது ஸ்வாதியை அழைத்து வர வேண்டும் என்று சொன்னார்களா?"

கலைச்செல்வன்: "அப்படியெல்லாம் சொல்லவில்லை".

அப்போது நீதிபதியைப் பார்த்து குரல் உயர்த்திப் பேசிய வழக்கறிஞர், ''23-ம் தேதியே ஸ்வாதியை அழைத்து வர வேண்டும் என நிர்பந்தம் செய்திருக்கிறார்கள். அதையடுத்து, 22-ம் தேதி இரவே ஸ்வாதியின் வீட்டுக்குச் சென்று மிரட்டி அழைத்துச் செல்லப்பட்டார். அதேபோல் திருமாவளவன் கட்சிக்காரர்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்காரர்களும், தமிழ்ப் புலிகள் கட்சிக்காரர்களும் 22-ம் தேதி இரவே ஸ்வாதியை போலீஸில் ஒப்படைத்து காவல் துறையால் நிர்பந்தப்படுத்தப்பட்டார். பின்பு, 23-ம் தேதி வழக்குக்கான ஆவணங்களும், சாட்சியங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.

வழக்கறிஞர் ஜி.கே.: "ஏற்கெனவே உங்களுக்கும் ஸ்வாதிக்கும் தொடர்பிருந்ததா?"

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "திருச்செங்கோடு பஸ் நிலையத்தில்தான் முதலில் ஸ்வாதியைப் பார்த்தீர்களா?"

கலைச்செல்வன்: "ஆமாம். அப்போதுதான் ஸ்வாதியைப் பார்த்தேன்".

வழக்கறிஞர் ஜி.கே.: "23-ம் தேதி கோகுல்ராஜ் கல்லூரிக்குப் போகும்போது என்ன நிற உடை அணிந்திருந்தார். என்னென்ன கொண்டுசென்றார் என்பதைக் காவல் நிலையத்தில் சொன்னீர்களா?"

கலைச்செல்வன்: " 'கோகுல்ராஜ் காணவில்லை' என்று புகார் கொடுக்கவில்லை. கடத்திச் சென்றதாகத்தான் புகார் கொடுத்தோம். ஆடைகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: 'கோகுல்ராஜ் கல்லூரிக்குச் செல்லும்போது ஐ.டி. கார்டு எப்படி எடுத்துச் செல்வார். கழுத்தில் மாட்டியிருப்பாரா... பாக்கெட்டில் வைத்திருப்பாரா?"

கலைச்செல்வன்: "சில நேரம் கழுத்தில் மாட்டியிருப்பார், பாக்கெட்டில் வைத்திருப்பார். புத்தகப்பையில்கூட வைத்திருப்பார். குறிப்பாகச் சொல்ல முடியாது".

வழக்கறிஞர் ஜி.கே.: "வீட்டில் வைக்கும்போது ஐ.டி. கார்டை எங்கு வைப்பார்?"

கலைச்செல்வன்: "டேபிளில் இருக்கும்".

பிறகு நீதிபதியைப் பார்த்து குரல் உயர்த்தி பேசிய வழக்கறிஞர், ''சடலம் கிடந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து கோகுல்ராஜின் ஐ.டி.

கார்டைக் கைப்பறியதாகச் சொல்வது சுத்த பொய். உங்கள் வீட்டில் இருந்துதான் கோகுல்ராஜின் ஐ.டி. கார்டையும், செல்போனையும் கைப்பற்றி இருக்கிறார்கள் என்று நான் சொல்கிறேன்''.

வழக்கறிஞர் ஜி.கே.: ``திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது பார்த்திபன் இருந்தாரா?"

கலைச்செல்வன்: "இருந்தார்".

வழக்கறிஞர் ஜி.கே.: "அவரை நீங்கள்தான் அழைத்து வந்தீர்களா?"

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "பார்த்திபனை அதன்பிறகு சந்தித்தீர்களா... எங்கே சந்தித்தீர்கள்?"

கலைச்செல்வன்: "தயக்கத்தோடு சந்தித்தேன். எங்கே என்று சரியாகத் தெரியவில்லை".

வழக்கறிஞர் ஜி.கே.: "பிரேத பரிசோதனை செய்தபிறகு சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினீர்களா?"

கலைச்செல்வன்: "யுவராஜ் மற்றும் சிலர் கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்ததால், கொலை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம்".

வழக்கறிஞர் ஜி.கே.: "சாதிக் கட்சியினரும் குறிப்பாகப் பகுஜன் சமாஜ்வாடி கட்சிக்காரர்களும் தூண்டிவிட்டுத்தான் இந்த வழக்கைக் கொடுத்திருக்கிறார்கள்".

கலைச்செல்வன்: "இல்லை".

இறுதியாக நீதிபதியைப் பார்த்துப் பேசிய வழக்கறிஞர், '' உங்கள் தம்பி தனிக் குடித்தனம் இருந்தார். அவருக்குப் பணத் தேவைகள் இருந்தன. பல பெண்களோடு அவர் தொடர்பு வைத்துக்கொண்டு பணம் பெற்று வந்தார். அவர்களுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாக நான் சொல்கிறேன்''.

அதை, கலைச்செல்வன் தலையை ஆட்டி மறுக்க... நீதிபதி ``கிளம்பலாம்'' என்றதையடுத்து, கூண்டைவிட்டு வெளியே வர முயற்சி செய்தார். உடனே நீதிபதியிடம், ``நானும் சில கேள்விகளைக் கேட்கிறேன்'' என்ற இவ்வழக்கின் இரண்டாம், மூன்றாம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள அருண், குமார் என்கிற சிவக்குமாரின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் கேட்டார். அதற்கு நீதிபதி, ``நேரம் ஆகிவிட்டது. பொதுவாகக் கேளுங்கள்'' என்றார். அதையடுத்து அவர் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம்: "சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஒலி வடிவமாக இருக்கும் சில ஆவணங்களை வரிவடிவமாக்கி உங்களிடம் படித்துக் காண்பித்தார்களா?"

கலைச்செல்வன்: "இல்லை".

வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம்: "உங்கள் தம்பி செல்போனில் உள்ள கால் டீட்டெய்ல்ஸ் (Details) பற்றி விசாரணை மேற்கொண்டார்களா?"

கலைச்செல்வன்: "இல்லை"

வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம்: "உங்கள் தம்பி செல்போனுக்குக் கடைசியாக வந்த கால் யாருடையது என்று கேட்டார்களா?"

கலைச்செல்வன்: "இல்லை".

அதையடுத்து வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், ``கேள்வி நிறைவுபெற்றது'' என்று சொல்ல... நீதிபதி, ``இவ்வழக்கை 10.9.2018 தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'' என்று தெரிவித்தார். அதையடுத்து, யுவராஜ் மற்றும் இவ்வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள 14 பேரும் போலீஸார் கஸ்டடி எடுத்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார்கள். 10-ம் தேதி இவ்வழக்கின் முக்கியச் சாட்சியான ஸ்வாதி ஆஜராகி வாக்குமூலம் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையின்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் வாய் திறக்காமல் மெளனமாக இருந்தார். 

நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்த இவ்வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியைச் சந்தித்து, ``இவ்வழக்கு எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது'' என்று கேள்வி எழுப்பினோம், ''இவ்வழக்கின் முக்கியச் சாட்சியான ஸ்வாதி நீதிமன்றத்தில் கொடுக்கும் வாக்குமூலத்தைப் பொறுத்தே இவ்வழக்கின் தன்மை அமையும். அதுவரை இவ்வழக்கைப் பற்றி எதுவும் கூற முடியாது'' என்றார். அவரிடம் தொடர்ந்து, ``எதிர் தரப்பு வழக்கறிஞர் கோகுல்ராஜ் 21-ம் தேதியே காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்தாரே... நீங்கள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லையே'' என்று கேட்டோம். ``23-ம் தேதியிலிருந்துதான் இவ்வழக்கே தொடங்குகிறது. 21-ம் தேதி ஏதாவது சம்பவம் நடந்ததா''' என்று நம்மிடம் கேட்டவர், ``அவர் எந்த ஓர் ஆவணமும் இல்லாமல் கற்பனையாகப் பேசுகிறார். அதற்கு நான் எப்படிப் பேச முடியும்? இருந்தாலும், நீதிபதியிடம் இதைச் சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்குள் நீதிமன்றம் நிறைவு பெற்றது'' என்றார் மிகவும் சாதாரணமாக.

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக அவரின் சகோதரர் கலைச்செல்வனிடமிருந்து விசாரணை தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



Trending Articles

Sponsored