‘ஹிட்லர், முசோலினிபோல் செயல்படுகிறார்கள்’ - மத்திய அரசை விளாசிய வைகோSponsored“ஜெர்மன், இத்தாலியில் செயல்பட்டவர்களைப் போல அடக்குமுறையின் முன்னோட்டமாக மத்திய அரசு செயல்படுவது கவலையளிக்கிறது” என ஈரோட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

ஈரோட்டில் செப்டம்பர் 15-ம் தேதி ம.தி.மு.கவின் முப்பெரும் விழா மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு தேதி நெருங்குவதையொட்டி, மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடவும், மாநாடு சம்பந்தமாக நிர்வாகிகளிடம் ஆலோசணை மேற்கொள்வதற்காகவும் வைகோ இன்று ஈரோட்டிற்கு வந்தார். மாநாட்டுத் திடலை பார்வையிட்ட பின்னர் ஈரோடு கட்சி தலைமையகத்திற்கு வந்த வைகோ பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “இந்திய அரசியலின் ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் ம.தி.மு.கவின் முப்பெரும் விழா மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு என ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் மத்திய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற பல்வேறு திட்டங்களால் தமிழகம் ஆபத்தான சூழலில் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், இந்தப் பிரச்சினைகளை எல்லாம் முன்னிறுத்தும் வகையில் இந்த மாநாடு முக்கியத்துவமானதாக அமையும். தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

Sponsored


Sponsored


தொடர்ந்து பேசியவர், “மத்திய மாநில அரசுகள் உற்பத்தி வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்ததால்தான் இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து மக்களுக்கு மாபெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட காரணமாக இருந்த வேதாந்தா நிறுவனத்திற்கு காவிரி பாசனப் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால், காவிரி பாசன மண்டலமே விவசாயம் செய்ய முடியாத பாலைவனம் ஆகிவிடும். அதேபோல மேகதாது அணை பிரச்சினை என நாலா பக்கமும் தமிழகத்திற்கு வந்திருக்கக்கூடிய இடர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது” என்றார்.

தொடர்ந்தவர், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலைக்காக ஆரம்பத்தில் இருந்து நானும், பழ.நெடுமாறன் அவர்களும் போராடி வருகிறோம். 7 பேரை விடுவிக்கும் முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என நீண்டநாள் பிரச்சினைக்கு ஒரு தீர்ப்பினை சொல்லி உச்சநீதிமன்றம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. எனவே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் இயற்ற வேண்டும். 25 ஆண்டுகளாக அவர்கள் கொடிய இருள் சிறையில், நரகத்தை விட கொடிய துன்பங்களை, சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார்கள். இப்பொழுதாவது அவர்கள் விடுதலையாகி வெளியுகலத்தை அவர்கள் பார்க்க வேண்டும்” என்றார் உருக்கமாக.

அதேபோல, “குட்கா விவகாரத்தில் டி.ஜி.பியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் தாமாக முன்வந்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை பதவியில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும். மாணவி ஷோபியா, தனது கருத்துரிமையை வெளிப்படுத்தும் வகையில் விமானத்தில் பேசியுள்ளார். எனவே, அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், மனிதாபிமானத்தோடும் தமிழிசை இந்த வி‌ஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். பல தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில் ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே மொழி என ஜெர்மன், இத்தாலியில் செயல்பட்டவர்களைப் போல (ஹிட்லர், முசோலினியைப் போல்) அடக்குமுறையின் முன்னோட்டமாக, ஒரு பாசிச அரசாக மத்திய அரசு செயல்படுவது கவலையளிக்கிறது” என்றார்.Trending Articles

Sponsored