`யாரும் பதற வேண்டாம்..பார்சல் கவரைக் கொடுத்தது நான்தான்!’ - பா.ஜ.க பிரமுகரைப் பதறவிட்ட பனியன் தொழிலாளிSponsoredகனவில் சாமி வந்து கூறியதால் பார்சல் கவர் ஒன்றை எடுத்துச் சென்று பா.ஜ.க பிரமுகர் வீட்டில் கொடுத்த பனியன் தொழிலாளியால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் முத்து நகர் பகுதியில் வசித்து வருகிறார் நாச்சிமுத்து. இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில், இன்றைய தினம் காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நாச்சிமுத்துவின் வீட்டுக்கு சென்று ஒரு மர்ம பார்சல் கவரை ஒப்படைத்திருக்கிறார். அப்போது நாச்சிமுத்துவின் குடும்பத்தினர், நீங்கள் யார், பார்சலை யார் கொடுத்தது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு அந்த நபர் "அண்ணன் கொடுத்து அனுப்பினார்" என்றுகூற, எந்த அண்ணன் என்று கேட்டு மீண்டும் துருவியிருக்கிறார்கள் குடும்பத்தினர். இதனால் பதறிப்போன அந்த நபர், தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்புகளைக் கழட்டி வீசிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அச்சமடைந்த நாச்சிமுத்துவின் குடும்பத்தினர் உடனடியாக நாச்சிமுத்துவுக்கு செல்போனில் அழைத்து நடந்த சம்பவத்தை விவரமாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து நாச்சிமுத்துவும் பதற்றமடைந்துபோய், உடனடியாக காவல்துறைக்கு தகவலை தெரிவித்துவிட்டு, தன்னுடைய வீட்டுக்கு விரைந்திருக்கிறார்.

Sponsored


பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்துவிட்டு மும்முரமாக விசாரணையில் இறங்கினர். அதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்நிலையில் அடுத்த சில மணிநேரம் கழித்து மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்த அந்த மர்ம நபர், நேராக அங்கிருந்த போலீஸாரிடம் சென்று, "யாரும் பதற்றமடைய வேண்டாம். நான்தான் பார்சல் கவரைக் கொடுத்தவன்" என்று கூலாகச் சொல்லியிருக்கிறார்.

Sponsored


நொந்துபோன காவல்துறையினர் அந்த நபரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, "தன்னுடைய பெயர் கண்ணன் என்றும், திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் கூறிய அந்த நபர், இரண்டு தினங்களுக்கு முன்பு என் கனவில் தோன்றிய இறைவன், 'இந்த முகவரிக்கு சென்று, இந்த பொருட்களை எல்லாம் கொடுத்துவிட்டு வா' என்று தெரிவித்தார். அதனால்தான் அந்த பார்சல் கவரை கொண்டு வந்து கொடுத்தேன்’’ என்றிருக்கிறார் அப்பாவியாக. பின்னர் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் சில புது துணிகள் மற்றும் சாமி படங்கள் உள்ளிட்டவை இருந்திருக்கின்றன. இதனையடுத்து கண்ணனின் குடும்பத்தாரை அங்கு வரவழைத்த காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுரை வழங்கிவிட்டு கண்ணனை எச்சரித்து அவர்களோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த மர்ம பார்சல் கவர் சம்பவம் சிறிது நேரம் திருப்பூர் முழுவதும் பரபரப்பை உண்டாக்கிவிட்டது.Trending Articles

Sponsored