`என்னால முடிஞ்சது இவ்வளவுதான்' - கிட்னி செயலிழந்த பிரகாஷை நெகிழவைத்த ஆட்டோ டிரைவர்



Sponsored



இளைஞர் ஒருவரின் சிறுநீரக அறுவைசிகிச்சைக்காகத் தனது திருமண நாள் கொண்டாட்டத்துக்காக வைத்திருந்த 2,000 ரூபாயை வழங்கி நெகிழச்செய்திருக்கிறார், ஆட்டோ டிரைவர்  ஒருவர்.
 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியத்தில் உள்ள துண்டுக்காட்டைச் சேர்ந்தவர், பிரகாஷ். 33 வயதான இவர், பெயின்டராக வேலை பார்த்துவந்தார். மனைவி மற்றும் ஒரு மகன் இவருக்கு இருக்கும் நிலையில், திடீரென இவரது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து  விட்டது தெரியவந்திருக்கிறது. அவரது சகோதரி, தனது ஒரு சிறுநீரகத்தை பிரகாஷுக்ந்த் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். பிரகாஷுக்கு சிறுநீரக அறுவைசிகிச்சை செய்ய, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், காப்பீட்டுத் திட்டத்தில் 5,00,000 வரை பெற்றுக்கொள்வதாகச் சொல்லி இருக்கிறது. ஆனால், மருத்துவச் செலவுகளுக்கு 2,00,000 வரை தேவைப்பட்டிருக்கிறது. 10,000 ரூபாயைக்கூட பார்க்காத பிரகாஷ் குடும்பம், 2,00,000-க்கு எங்கே போவது என்று கையைப் பிசைந்து நின்றிருக்கிறது. அப்போதுதான், கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற அமைப்பைப் பற்றி பிரகாஷுக்குத் தெரிந்தது, அவர்களிடம் உதவியை நாடியிருக்கிறார். பிரகாஷின் நிலையை சமூக வலைதளங்களில் பதிவாகப் போட்டு, நல்லுள்ளங்களின் உதவியை நாடியிருக்கிறது, இணைந்த கைகள் அமைப்பு. அந்தப் பதிவைப் பார்த்துவிட்டுதான் வெள்ளக்கோயில் பகுதியில் ஆட்டோ ஓட்டும் டிரைவரான கோபி, அவரது மனைவி சுப்புலட்சுமி இருவரும் தங்களது 17-வது திருமணநாள் கொண்டாட்டத்துக்காக சிறுகச் சிறுக சேர்த்துவைத்திருந்த 2,000 ரூபாயை பிரகாஷின் மருத்துவச் செலவுக்காக வழங்கி நெகிழ வைத்திருக்கிறார். கோபி கொடுத்த தொகையை இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சலீம் பெற்றுக் கொண்டார்.

Sponsored


Sponsored


இதுபற்றி சலீமிடம் பேசினோம். "சமூக வலைதளங்கள்மூலம் நிதி திரட்டி, இதுபோன்ற ஏழ்மை நிலைமையில் உள்ள நோயாளிகளின் உயிரை எங்க அமைப்பு காப்பாற்றிவருகிறது. அந்த வகையில்தான், பிரகாஷ் நிலையை சமூக வலை தளங்களில் பதிவிட்டோம். அதைப் பார்த்துட்டுதான் கோபியும் அவரது மனைவியும் 2,000 ரூபாய் கொடுத்துள்ளனர். நேற்று, அவருக்கு 17-வது திருமண நாள். அதை மனைவியோடு ஹோட்டல், சினிமா என்று கொண்டாட பணம் சேர்த்திருக்கிறார். நேற்று மனைவி, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக ஆட்டோவில் கிளம்பியும் இருக்கிறார். ஆனால், போகும் வழியில் எதேச்சையாக பிரகாஷ் பற்றிய எங்களது பதிவைப் பார்த்துட்டு, மனம் மாறி அந்தப் பணத்தை எங்களிடம் வழங்கினார். 'நான் ஏழ்மையான ஆட்டோ டிரைவர். வசதியான ஆளா இருந்தா லட்சம் லட்சமா அள்ளிக் கொடுத்திருப்பேன். என்னால முடிஞ்சது இவ்வளவுதான்'னு சொல்லியபடிக் கொடுத்தார்.  2 ஆயிரமோ, 2 லட்சமோ  முக்கியமல்ல. கொடுக்கணும்ங்கிற மனசுதான் முக்கியம்" என்றார் அழுத்தமாக.
 



Trending Articles

Sponsored