`இப்போது நான் கோட்டாறில் இருந்திருந்தால் நடப்பதே வேறு'- கொந்தளித்த இன்ஸ்பெக்டர்; அதிர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ.Sponsoredபெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துமாரி ஆகியோர் மாறி மாறி திட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று பந்த் நடந்துவருகிறது. இதனால், பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நாகர்கோவிலில் காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் சார்பில் அண்ணா பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் நடந்த இடம் அருகே, ஒரு பர்னிச்சர் கடை திறந்திருந்தது. அந்தக் கடையை அடைக்கும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். மேலும், கடைகளில் இருந்த பொருள்களைத் தூக்கி சாலையில் வீசியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தியுள்ளார்கள்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துமாரி பார்த்துக்கொண்டிருந்தார். அவர் சக காவலர்களிடம், 'நான் கோட்டாறு காவல்நிலைய இன்ஸ்பெக்டராக இப்போது இருந்திருந்தால் நடப்பதே வேறு' எனப் பேசியிருக்கிறார். இதைக்கேட்ட தி.மு.க எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன், "கோட்டாறில் இருந்தால் என்ன செய்துவிடுவாய்" எனக் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளைப் பிரயோகித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க-வினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்பி அங்கு வந்து, இன்ஸ்பெக்டர் முத்துமாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக தி.மு.க-வினர் கூறினர். இதைத் தொடர்ந்து எஸ்பி., ஸ்ரீநாத் அங்கு சென்று சுரேஷ்ராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து தொண்டர்கள் கலைந்துசென்றனர். முத்துமாரி, இதற்கு முன்பு கோட்டாறு காவல்நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த சமயத்தில், அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் சுரேஷ்ராஜன் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored