`கடவூர் ஜமீனைக் கண்டுகொள்ளவில்லை!’ - ஆளுநர் விழாவால் கொதித்த கரூர்Sponsoredகரூர் மாவட்டத்தில் உள்ள சேவாப்பூர் இன்பவ சேவா சங்க பொன்விழாவில் கலந்துகொள்ள கடந்த 7-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தந்தார். "லியோ ஏர்க்கமான்ட் என்ற வெளிநாட்டுப் பெண்மணியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவா சங்கப் பொன்விழாவில் ஆளுநருக்கும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ``இந்த சேவா சங்கத்துக்கு 350 ஏக்கர் நிலம் கொடுத்த கடவூர் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்களை அழைப்பிதழ்களில் போடவும் இல்லை; அவர்களை அழைக்கவும் இல்லை. இது எந்தவகையில் நியாயம்" என்று கடவூர் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லியோ அன்னை, காந்தியடிகள், வினோபா அடிகள் கொள்கையின் பால் ஈடுபாடு கொண்டார். அதைத் தொடர்ந்து தனது சொத்துகள் அனைத்தும் விற்று அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து, கரூர் மாவட்டம் சேவாப்பூரில் 1968-ல் இந்த இன்ப சேவா சங்கத்தை ஆரம்பித்தார். அன்பே பிரதானம் என்ற முழக்கத்தை முன்வைத்த அவர், இங்குள்ள மக்கள் முன்னேற பாடுபட்டார். இந்தியாவிலேயே முதன்முதலில் இங்கே சமத்துவபுரத்தை அமைத்தார். ஏழை குழந்தைகள் பயில பள்ளி, கல்வி நிலையங்களை அமைத்தார். இயற்கை முறையில் விவசாயம் செய்ய மாணவர்களைப் பழக்கினார். இவற்றைத் தவிர கண் அறுவைசிகிச்சைக்காக உதவுவது, சமதர்மத்தை நிலைநாட்டுவது என்று முழுக்க சேவை மனப்பான்மையோடு செயல்பட்டார். அப்படிப்பட்ட லியோ அன்னை 1997-ம் ஆண்டு மறைந்தார். அதைத்தொடர்ந்து, இந்த சேவா சங்கம் சிலரால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்தநிலையில்தான், தமிழக ஆளுநரை அழைத்து வந்து கடந்த 7-ம் தேதி இந்த இன்ப சேவா சங்கத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடினார்கள். இந்த விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா உள்ளிட்ட அ.தி.மு.க-வினர்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், "இந்த சேவா சங்கத்தை லியோ அன்னை உண்மையில் 100 சதவிகிதம் சேவை மனப்பான்மையில் ஆரம்பித்து சிறப்பாக நடத்தினார். அவரால் இந்தப் பகுதி மக்களுக்கு பல நன்மைகள் விளைந்திருக்கின்றன. இந்த இன்ப சேவா சங்கத்துக்கு கடவூர் ஜமீனான சமீபத்தில் மறைந்த ஏ.கே.ஜி.முத்தையா 350 ஏக்கர் நிலத்தை வாரி வழங்கினார். அன்னை இருந்தவரைக்கும் ஜமீனுக்கு அவ்வளவு மரியாதை செய்வார். அவர் மறைந்த பிறகு இப்போது உள்ளவர்கள் ஜமீனை மதிப்பதில்லை. இந்தப் பொன்விழா கொண்டாட்டத்தில் ஆளுநர், அமைச்சர், எம்.எல்.ஏ பெயர்களை மட்டும் அழைப்பிதழில் போட்டு அவர்களை மட்டும் அழைத்தார்கள். மேடையில் மரியாதை செய்தார்கள். ஆனால், இப்போது ஜமீனாக உள்ள மோகன் முத்தையாவையோ, ஜமீன் பரம்பரையில் உள்ள வேறு யாரின் பெயரையோ அழைப்பிதழில் போடவும் இல்லை; அவர்களை அழைக்கவும் இல்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்றார்கள்.

இது சம்பந்தமாக, சேவாப்பூர் இன்ப சேவா சங்க நிர்வாகத் தரப்பில் பேசினோம். "ஆளுநருக்கு மட்டுமே இந்த விழாவில் மரியாதை செய்தோம். அவரை மட்டுமே முன்னிலைப்படுத்தினோம். அதனால், ஜமீனை அழைக்கவில்லை. அதற்காக நாங்கள் அவரை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை. கடவூர் ஜமீனுக்கு அன்னை லியோ அமைத்த இன்ப சேவா சங்கம் என்றைக்கும் கடமைப்பட்டுள்ளது" என்றார்கள். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored