`என் நண்பனுக்காக தேர்வு எழுதினேன்' - சென்னையில் சிக்கிக்கொண்ட ஹரியானா வாலிபர் வாக்குமூலம்மத்திய அரசின் இஸ்ரோ நிறுவனத்துக்காக நடைபெற்ற தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sponsored


மத்திய அரசுக்குச் சொந்தமான இஸ்ரோ நிறுவனத்தில் கேட்டரிங் பணி இடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் ஒரு தேர்வு மையம் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வு மையத்தில் தேர்வு எழுத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 பேர் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது
தேர்வறையில் கையில் செல்போனைப் பயன்படுத்தியவாறு ஒருவர் காணப்பட்டார். தேர்வு மேற்பார்வை அதிகாரி அவரை விசாரித்தபோது பதற்றத்துடன் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

Sponsored


பின்னர் அவர் பயன்படுத்திய செல்போனை சோதித்தபோது தேர்வுத்தாளில் உள்ள கேள்விகளை எஸ்.எம்.எஸ் மூலமாக வேறு ஒரு நபருக்கு அனுப்பி பதில் கேட்டது தெரியவந்தது. இது குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, ஹரியானவைச் சேர்ந்த அஜய் என்று தெரியவந்தது. மேலும், மனீஷ் என்பவர்தான் தேர்வுக்கு முறையாக விண்ணப்பித்திருந்தார். அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு உதவி செய்யத்தான் தேர்வு அறைக்குச் சென்று தேர்வு எழுதினேன். எனக்குத் தெரியாத கேள்விகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் மனீஷிடம் கேட்டுப் பதில்கள் எழுதியபோது சிக்கிக் கொண்டதாக ஒப்புக்கொண்டார்.

Sponsored


இது குறித்து தேர்வு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அஜய்யை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், மனீஷைப் பிடிக்க தனிப்படையினர் ஹரியானாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.Trending Articles

Sponsored