குற்றால அருவி ஊருக்குள் புகுந்த 1992-ம் ஆண்டு... என்ன நடந்தது?Sponsored"குளிச்சா குற்றாலம்... கும்பிட்டா பரமசிவம்" என்ற பாடல் வரிகளுக்கேற்ப குளித்தல், அருவி என்றால் நம் நினைவுக்கு வருவது திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம்தான். தென் பொதிகைத் தென்றல் தவழ, செண்பக மலர் மணம் பரப்பி,  பல மருத்துவ மூலிகைகள் நிறைந்த மலைக்காடுகள் வழியே காட்டாறாய் ஓடி, பொங்குமாங்கடல் சேர்ந்து அருவியாக ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால அருவி மழைக்காலத்தில் இன்னும் அதிகளவு நீர் வரத்துடன் காட்சி தரும்.

அது 1992-ம் ஆண்டு. குற்றாலம் கண்ட பெருவெள்ளம் அதுதான். அதுபற்றி ஊர்மக்கள் சிலரிடம் கேட்டேன். அவர்கள் சொன்னதிலிருந்து...

நவம்பர் 13-ம் நாள் இரவு சுமார் 8 மணி அளவில் பெய்யத் தொடங்கிய கனமழை, கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேலாகக் கொட்டி தீர்த்தது. குற்றாலத்தின் பிரதான அருவியான 'மெயின் அருவி'யில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அருவி கரைக்கு அருகே அமைந்துள்ள தங்கும் விடுதி, திருக்குற்றால நாதர் கோயில் மற்றும் அங்கிருந்த கடைவீதியில் வெள்ளம் தஞ்சம் புகுந்து கொண்டது. கோயிலுக்குள் புகுந்த வெள்ள நீர் மட்டம் சுமார் 10 1/2 அடிக்கு உயர்ந்தது. தீர்த்த மடம்,  சந்நிதி எனக் கோயிலின் பல பகுதிகள் சேதமடைந்தது மட்டுமல்லாமல் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிப்போனது. அருவிக்கு முன்பாக அமைந்துள்ள பாலத்தின் அருகே 7 அடிக்கும், கடைவீதிகளில் 6 அடிக்கும் நீர் மட்டம் இருந்தது. இரவு நேரம் மழைக்காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. கல் மண்டபங்கள் மற்றும் பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். கோயிலில் வெள்ளம் வடிந்து சேறு, குப்பைகள், பூச்சிகள் போன்றவற்றை அப்புறப்படுத்த இரண்டு மாதமானதாகத் தேவஸ்தான அதிகாரி மற்றும் அங்கு வழக்கமாக வரும் பக்தர்கள் கூறினர். மேலும் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம் குறித்த குறிப்பு கோயிலின் உட்புறத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்து அருவி வீழ்வதைக் காணலாம். பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டதால்  லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகக் கடைவீதிகளில் உள்ள வியாபாரிகள் கூறினர். அருவிக் கரைக்கு அருகே அமைந்திருந்த 'தென்றல் பவனம்' எனும் 8 அறைகள் கொண்ட தங்கும் விடுதியில் 4 அறைகள் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதியினர் கூறினர்.

Sponsored


   

Sponsored


இத்தனை இழப்புகளுக்கும் காரணம் அருவி நீர், தடாகத்தில் சேரும் பாதை மாறியதுதான்; அல்ல அல்ல மாற்றப்பட்டதுதான். சரியாக. மழை தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன் மலைப்பகுதியில் மேலிருந்த மரங்கள் வெட்டப்பட்டு தடிகள் ஆங்காங்கே போடப்பட்டு இருந்தன. கொட்டித் தீர்த்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வெள்ளத்தில் தடிகளனைத்தும் அடித்து வரப்பட்டு, அருவி வழி வீழ்ந்து தடாகம் செல்லும் பாதையே அடைத்துக் கொண்டது. இதுவே வெள்ளநீர் வடியாமல் பாதை மாறி, பல இடங்களில் தஞ்சம் புகுந்து அப்பகுதியைக் கலங்க வைக்கக் காரணம்.

அன்று மனிதன் மரங்களை வெட்டி இயற்கையை இம்சித்ததன் விளைவுதான் இது. மழையோ வெயிலோ, புயலோ பூகம்பமோ இயற்கைப் பேரிடர்கள் அனைத்துக்கும் மனிதர்களாகிய  நாமும் ஒருவகையில் காரணம் என்று உணராதவரை சென்னை, கடலூர் வெள்ளம் கேரள வெள்ளம் என்று இயற்கையும் அவ்வப்போது நம்மைக் கலங்கடித்துக்கொண்டுதானிருக்கும்.

வினை விதைத்தால் வினைதான் அறுப்போம்.Trending Articles

Sponsored