"நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபர் வரை நீட்டிக்க வேண்டும்!'' - விவசாயிகள் கோரிக்கை



"தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கும் காலமான செப்டம்பர் மாத இறுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாவிட்டால், அவற்றை விளைவித்த விவசாயிகளின் நிலை என்னவாகும் என்று மத்திய அரசும், தமிழக அரசும் சற்றே யோசித்துப் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள்.

Sponsored


"செப்டம்பர் 30-ம் தேதிவரைதான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்" என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இந்தாண்டு தாமதமாகக் குறுவைச் சாகுபடி செய்த பெருமளவிலான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Sponsored


காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 115 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் சிறப்புக் குறுவைச் சாகுபடித் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து, செயல்படுத்தியது. இதன்மூலம் பயிரிடப்பட்ட நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. என்றாலும், நடப்பு கரீப் பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு ஆகஸ்ட் 31-ம் தேதிவரை மட்டுமே அனுமதி வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, 'செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்' என்று தமிழக விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைக் கருத்தில்கொண்டு பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கும் கடிதம் எழுதியிருந்தார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, செப்டம்பர் 30-ம் தேதிவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, வரும் 30-ம் தேதிவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்றும், விவசாயிகள் அவற்றின் மூலம் நெல் விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Sponsored


"குறுவைப் பருவத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் நெல் அறுவடை நடைபெறும். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டு, நீர்வரத்து அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாகக் குறுவைச் சாகுபடி ஓரளவுக்கு நல்ல விளைச்சலைத் தந்துள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் அறுவடை முடிந்துவிட்டது. வேறுசில பகுதிகளில் இப்போதுதான் நெல் கதிர்விட்டு, முழுமையான நெல் மணிகளாகத் தொடங்கி உள்ளன. இந்தப் பகுதிகளில் இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோதான் நெல் அறுவடை செய்ய முடியும். ஆனால் தமிழக அரசோ, நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 30-ம் தேதி வரை மட்டும் செயல்படும் என்று அறிவித்திருப்பது, விவசாயிகளைக் கவலையடையச் செய்துள்ளது. விவசாயிகளின் மனநிலையைக் கருத்தில்கொண்டு அக்டோபர் மாதம்வரை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்'' என்கின்றனர், இன்னும் அறுவடை செய்யாத விவசாயிகள். 

நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு பற்றி விவசாயச் சங்கப் பிரதிநிதிகளிடம் பேசினோம்....
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமி, ``நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால், விவசாயிகள் பெரியளவில் பாதிப்படைவார்கள். இன்று, ஒன்றரை லட்சம் ஏக்கர் மட்டுமே குறுவைச் சாகுபடி செய்திருக்கிறார்கள். அதிலும், இன்னும் முழு அளவில் அறுவடை முடிந்தபாடில்லை. மேட்டூர் அணையிலிருந்து உரியக் காலத்தில் தமிழக அரசு தண்ணீரைத் திறந்துவிடாததே இதற்குக் காரணம். இதனால், ஏழு லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளவேண்டிய குறுவைச் சாகுபடி மிகவும் குறைவான ஏக்கரிலேயே நடைபெற்றுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு 20 முதல் 40 ரூபாய்வரை இனாமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. ஆக, அங்கும் ஊழல் கறை படிந்துவிட்டது'' என்றார்.  

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் துணைச்செயலாளர் செங்குட்டுவன், "அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே, விலை நிர்ணயம் இல்லாமல் மூட்டை ஒன்றை 800 ரூபாய்க்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், இந்த மாதத்துடன் நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு மூடிவிட்டால், அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் போய்விடும். தண்ணீர் வரத்து இந்த வருடம் அதிகமாக இருந்தாலும், முன்கூட்டியே தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், இன்னும் சிறப்பான முறையில் நெல் சாகுபடி செய்திருக்கலாம். அரசு அறிவித்திருப்பதுபோல் அனைத்து விவசாயிகளும் வரும் 30-ம் தேதிக்குள் குறுவைச் சாகுபடியை முடித்து நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்திருப்பர். ஆனால், தண்ணீர் காலங்கடந்து வந்துசேர்ந்ததால் குறுவைச் சாகுபடி தாமதமாகிப் போனது. பெரும்பாலான விவசாயிகள், இன்னமும் நெல் அறுவடைக்காகக் காத்திருக்கின்றனர். ஆகவே, விவசாயிகளின் நிலையைப் புரிந்துகொண்டு அக்டோபர் மாதம்வரை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அரசு ஆவன செய்ய வேண்டும்" என்றார், மிகத் தெளிவாக. 

இந்த ஆண்டு மேட்டூர் அணை இரண்டுமுறை நிரம்பிய நிலையில், போதிய அளவுக்கும் அதிகமான தண்ணீர், காவிரியில் திறந்து விடப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் அதிகளவு நெல் சாகுபடி கிடைத்து, உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பான இதுபோன்ற குளறுபடியால், நெல் உற்பத்தி பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய -மாநில அரசுகளுக்கு உண்டு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அரசுகள் செயல்படுமா என்பதே விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.



Trending Articles

Sponsored