நடமாடும் கடல்மீன் உணவு விற்பனை மையம்! - சுற்றுலாப் பயணிகளைக் கவர புதிய ஏற்பாடுSponsoredநடமாடும் கடல்மீன்  உணவு விற்பனை மையத்தை ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் 22 இடங்களில் கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையங்கள் இயங்கி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்த விலையில் தரமான கடல்மீன் உணவு வகைகளை உண்டு மகிழ கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இந்த விற்பனை மையத்தை இன்று தொடங்கி வைத்தார்.

Sponsored


இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்த நடமாடும் கடல்மீன் உணவு விற்பனை மையமானது வார நாள்களில் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும். வார இறுதி விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடும் தனுஷ்கோடி, அரியமான் மற்றும் மண்டபம் கடற்கரை பூங்கா பகுதிகளில் செயல்படும். இங்கு, இறால் பிரியாணி, இறால் வருவல், மீன் வருவல், மீன் குழம்பு சாப்பாடு ஆகியன தலா ரூ.70-க்கு கிடைக்கும். மேலும், மீன் கட்லெட், நண்டு சூப் ஆகியனவும் தலா ரூ.20-க்கு கிடைக்கும். சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட கடல் மீன் உணவு வகைகளைக் குறைந்த விலையில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் உண்டு மகிழலாம்'' என்றார்.

Sponsored


இந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்க்கீஸ், துணை இயக்குநர் காத்தவராயன், மீன்வளர்ச்சிக் கழக மேலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இனி தனுஷ்கோடி வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சுடச் சுட தயாரான கடல் மீன் உணவுகளை ருசி பார்த்து உண்டு மகிழலாம்.Trending Articles

Sponsored