``விவசாயிகளைப் பார்க்கச் சென்றதற்கு தரதரவென இழுத்து வேனுக்குள் ஏற்றியது போலீஸ்!" - யோகேந்திர யாதவ்



Sponsored



சேலம் 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மக்களைச் சந்திப்பதற்காக `ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் தமிழகம் வந்திருந்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் 8 வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்திக்கச் சென்றார். அப்போது, சி.நம்மியந்தல் பகுதியில் வைத்து காவல் துறையினர் யோகேந்திர யாதவையும், விவசாயிகள் மற்றும் இன்னும் சிலரையும் கடந்த சனிக்கிழமை காலையில் கைது செய்தனர். பின், சனிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை மீண்டும் 8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் மக்களையும் விவசாயிகளையும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் யோகேந்திர யாதவ், சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், `ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தமிழகத் தலைவர் பாலகிருஷ்ணன், 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத் தலைவர் சந்திரகுமார் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தனர். 

சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், ``சேலம் 8 வழிச் சாலைக்காகப் பொதுவெளியில் தமிழக அரசும் மத்திய அரசும் எந்த ஒரு குறிப்பையும் வெளியிடவில்லை. சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு முன்னர் சென்னை-மதுரை வழிதான் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர்தான் சேலம் முதல் சென்னை வரை திட்டம் கொண்டுவரப்பட்டது. சென்னை - சேலம் திட்டத்துக்கு செயற்கைக்கோள் புகைப்படங்கள், சரக்குகள் உற்பத்தி, தோற்றம் போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து இத்திட்டத்துக்கான பாதைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். சீனாவில் இருக்கும் ஒரு நகரத் திட்டத்துக்கான அறிக்கையை வெட்டி ஒட்டியிருக்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் - சென்னை 8  வழிச் சாலையை அறிவிப்பதற்கு முன்னரே மத்திய அரசு ஒப்பந்தத்தை முடித்து விட்டது. மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்திருக்கிறது தமிழக அரசு. இத்திட்டத்தில் தெளிவான காரணங்களை மத்திய அரசும் மாநில அரசும் இன்னும் சொல்லவில்லை." என்றார்

Sponsored


8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத் தலைவர், சந்திரகுமார், ``இந்தச் சாலையால்  எந்தவிதத்திலும் மக்களுக்குப் பயன் இல்லை. இங்கே மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை. எல்லோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது போன்றிருக்கிறார்கள். சாலைத் திட்டத்துக்கு ஆட்சேபணை  மனு அளிக்க விவசாயிகள் செல்லும்போது மாவட்ட ஆட்சியர் காவல்துறை மூலம் எங்களைத் தடுக்கிறார். அவரே வரச் சொல்லிவிட்டு அவரே காவல்துறையை வைத்து விரட்டுகிறார். இந்தச் சாலைத்திட்டம் கனிம வளக் கொள்ளைக்கானது. அங்கு உள்ள வீடும், தோட்டமும் எங்களுடையது. எங்களின் கனவு இல்லம், அதை எங்களால் எப்போதுமே விட்டுக் கொடுக்க முடியாது. விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் உருவாக்கும் சூழலை தமிழக அரசு மேற்கொள்கிறது. அதை நாங்கள் ஒரு நாளும் நடக்கவிட மாட்டோம்." என்றார்.

Sponsored


இறுதியாகப் பேசிய `ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், ``தமிழக அரசும் காவல்துறையும் அடக்குமுறையைக் கையாண்டு கொண்டிருக்கிறது. எங்களுடைய நோக்கம் 8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்பதுதான். 

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து சிறிது தூரம் சென்றிருப்பேன். அப்போது காவல்துறையினர் எங்களை வழிமறித்து விசாரித்தனர்.  விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே எங்களை தரதரவென இழுத்து காவல்துறை வேனுக்குள் ஏற்றினர். செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்குக் காரணம் கேட்டேன், சொல்ல மறுத்துவிட்டனர். சிலமணிநேரம் கழித்து காவல்துறை சட்டப்பிரிவு 32 -ன் கீழ் கைது செய்திருக்கிறோம் என விளக்கம் கொடுத்தனர். 32 பிரிவு சட்டம், தடையை மீறி பேரணியாகச் செல்லுதல், ஊர்வலம் போன்றவற்றுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். எனக்கே இந்தக் கதி என்றால்... சாதாரண விவசாயிக்கு என்னென்ன நிகழும். இவர்கள் தொடுத்திருக்கும் வழக்கும் நியாயமாக என்மீது சுமத்த முடியாது. அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. அன்று இரவு விடுவித்தனர். திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் காவல்துறை சோதனைகள்தாம். பொதுவாகவே மக்களிடம் காவல்துறை பயத்தை ஏற்படுத்தப் பார்க்கிறது. நான் பேசினால் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் எனவும் சொல்கிறார்கள். மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பது எந்த வகையில் சட்ட ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும். 8  வழிச் சாலை திட்டத்தைப் பார்க்கும்போது மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. காவல் துறை தனியார் ராணுவம் போல செயல்படுகிறார்கள். தயவு செய்து 8 வழிச் சாலை அமைக்கும்போது விதிகளைத் தமிழக அரசு பின்பற்ற வேண்டும். ஒரு மாநிலம் தாண்டி, இப்பிரச்னை இப்போது வெளியே வந்திருக்கிறது. இதற்காக மக்கள், அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுகூடிப் போராட முன் வர வேண்டும்." என்றார்.

 'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.



Trending Articles

Sponsored